சென்னை, ஏப்.16-
கடந்த ஓராண்டில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 734 புதிய ரேஷன் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கையின்போது, வெளியிடப்பட்டுள்ள உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு புத்தகத்தில் தெரிவிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் கடந்த ஓராண்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 734 ரேஷன் கார்டுகள் புதிதாக வழங்கப்பட்டு உள்ளன.
அதாவது 2023–2024 நிதி ஆண்டில் 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 ஆக இருந்த ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கையானது, 2024–2025 நிதியாண்டில் 2 கோடியே 25 லட்சத்து 93 ஆயிரத்து 654 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி புதிதாக 1 லட்சத்து 79 ஆயிரத்து 734 ரேஷன் கார்டுகள் புதிதாக வழங்கப்பட்டு உள்ளன.
அதேபோன்று, ரேஷன் கடைகளும் கூட்டுறவுத்துறை (பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுபவை), தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், இதர கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் முழு நேர ரேஷன் கடைகள், பகுதி நேர ரேஷன் கடைகள் என 2023–2024ம் நிதி ஆண்டில் 36 ஆயிரத்து 954 ஆக இருந்த ரேஷன் கடைகள் 2024–2025ம் நிதியாண்டில் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகளாக உயர்ந்து உள்ளன. அதன்படி 374 புதிய ரேஷன் கடைகள் கடந்த ஓராண்டில் உருவாக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.