எடப்பாடி பழனிசாமி கேள்வி
சேலம், ஆக. 12-
கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தாமல் கார் பந்தயம் நடத்துவது தேவையா? என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி ஆலச்சம்பாளையம் பகுதியில் சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தை அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மாணவ சமுதாயம் வெகுவாக பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. இதுதொடர்பாக பலமுறை சட்டசபை கூட்டத்திலும், பொதுவெளியிலும் சுட்டிக்காட்டி உள்ளேன். அப்படி இருந்தும் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது. ஆனால் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து கார் பந்தயம் நடத்துவது தேவையா? இது வேதனை அளிக்கிறது.
இந்த பணத்தை கொண்டு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி இருக்கலாம்.
சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் அண்ணா தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. இதேபோல் அத்திக்கடவு–அவினாசி திட்டம், சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்டவை கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், மின்கட்டணம், சொத்துவரி, வீட்டுவரி உள்ளிட்ட வரிகளையும் தமிழக அரசு உயர்த்தி இருப்பது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.