கொழும்பு, ஏப். 5–
“கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பது குறித்து இந்தியாவில் இருந்து வெளியாகும் தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை” என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களை தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட தமிழகத்தில் இதுதொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. கச்சத்தீவை யார் தாரைவார்த்தது என்ற விவாதங்களுக்கு மத்தியில் அதை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.
இதற்கிடையே, “கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பது குறித்து இந்தியாவில் இருந்து வெளியாகும் தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை” என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டக்ளஸ் தேவானந்தா, “இந்தியாவில் இது தேர்தல் நேரம். எனவே கச்சத்தீவு குறித்த இதுபோன்ற கூற்றுக்கள் மற்றும் எதிர்க் கோரிக்கைகளின் சத்தங்கள் கேட்பது சாதாரணமானதுதான். இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், வளமான அப்பகுதிக்கு இலங்கை எந்தவித உரிமையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்தும் நோக்கில் கச்சத்தீவை பாதுகாக்க, தனது தேசத்தின் நலன்களின் அடிப்படையில் இந்தியா இந்த விவகாரத்தில் செயல்படுவதாகவே நான் நினைக்கிறேன்.
ஆனால், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவை மீட்பது தொடர்பாக இந்தியாவில் வெளிவரும் தகவல்களில் எந்தவித ஆதாரங்களும் இல்லை. 1974ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இருநாட்டு மீனவர்களும் கச்சத்தீவில் மீன்பிடிக்க முடியும். ஆனால், 1976ல் இந்த ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட்டது. திருத்தம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி இருநாட்டு மீனவர்களுக்கும் கச்சத்தீவு பகுதிக்குள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரிக்கு கீழே மேற்குக்கரை என்ற இடம் உள்ளது. இது பரந்த கடல் வளங்களைக் கொண்ட மிகப் பெரிய பகுதி. இது கச்சத்தீவை விட 80 மடங்கு பெரியது. இந்தியா 1976 திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் அந்தப் பகுதியை தங்கள் நாட்டுக்காக பாதுகாத்தது” என்று தெரிவித்தார்.