சிறுகதை

கச்சத்தீவு | ராஜா செல்லமுத்து

‘மாசி இன்னைக்கு எந்தப் பக்கம் போகலாம்’

‘கச்சத்தீவு’

ஐயய்யோ அங்கயா?

‘ஏன்?’

பேரக் கேட்டாலே என்னமோ மாதிரி இருக்கு. அங்கயா போகணும்.

‘அங்கன்னா, அதே எடத்தில இல்ல. கச்சத்தீவு பக்கத்திலன்னு சொன்னேன்’, என்றான் காந்தி.

போன மாசமே நம்மோட வலை, படகு எல்லாத்தையும் பிடுங்கிட்டு நன்மையும் அடிச்ச வெரட்டி விட்டானுக. அவனுக மனுசனே இல்ல. அங்க வேண்டாமே.

இல்ல மாசி இன்னைக்கு மட்டும் போயிட்டு வருவோம்.

பெறகு பாப்பமே,

“நடந்ததுக்கு அப்பெறம் என்ன பாத்து என்ன செய்ய? அவனுக நல்லவனுக இல்ல காந்தி.

அதான் ஒலகம் அறிஞ்ச விசயமாச்சே

அத நாம வேற பேசனுமா என்ன? என்ற காந்தியின் பேச்சுக்கு மாசிபதில் சொல்லவே இல்லை.

“என்ன காந்தி நம்ம கேங்செல்லாம் அங்கதான் போகப்போறாங்களா?’’

“ஆமா, ஏன் …பயமா இருக்கா?’’

“இல்ல, சண்ட சத்தம் வேணாம்னு தான் நெனைக்கிறேன்”

இதெல்லாம் பாத்தா நடக்காது மாசி. வந்தவரைக்கும் லாபம்ன்னு சொல்லிட்டு போய்ட்டே இருப்போம் என்று மாசியும் காந்தியும் மொட்டு அவிழும் அந்த மௌன இரவில் பேசிக்கொண்டிருந்தார்கள்

“அப்ப, நாம காலையில அந்த ஏரியா பக்கம் தான் போறோம் “ஆமா” என்ற காந்தியின் பதில் மாசிக்கு என்னவோ செய்தது.

“இருள்வானம் அப்படியே இருளாய் இருக்கும் நள்ளிரவு நேரம். பத்து பதினைந்து பேர் தங்களின் மீன்பிடி வலைகளோடு அலை கடலில் இறங்கினார் டீசல் சுமக்கும் மீன்பிடி எந்திரம் கட்டுமரமென நுரைக்கடலில் நுழைந்தது.

“ஓ”வென ஓங்கார மடிக்கும் ஆழி அலைகளில் மிதந்தது மீனவர்களின் பசி.

“என்ன காசி டீசல் எவ்வளவு போட்ட’’

“பத்து லிட்டர் அதுவும் கடன் வாங்கித்தான் போட்டுட்டு வந்தேன்’’

“நீ மாசி….. இருவது லிட்டல், ஏற்கனவே நெறயாக் கடன், இன்னும் கடன் தான் வாங்குனேன்’’,

காந்தி தான் கொஞ்சம் வசதியான ஆளு யார்கிட்டயும் கையேந்தி நிக்காத மனுசன்ங்க.

“ம்க்கும்….. நீங்க சொல்லீட்டீங்க. நான் சொல்லல அவ்வளவு தான். எனக்கும் கடன் கழுத்த நெறிக்கிற அளவுக்கு கடன் எனக்கும் தான் இருக்கு நீங்க சொல்றீங்க. நான் சொல்ல அவ்வளவு தான் என்ற மீனவர்களின் பேச்சு சத்தமும் சிரிப்புச் சத்தமும் பேரலைகளின் பெரு இரைச்சலையும் தாண்டிக் கேட்டுக் கொண்டிருந்தன.

வானத்தின் மையத்தில் வட்டமாய் ஒட்டியிருந்த வட்ட நிலா இவர்களின் பேச்சைக் கேட்பதற்காகவே மேகங்களைத் தாண்டிக் தாண்டி வந்து கொண்டிருந்தது போலிருந்தது. மேலும் கீழும் எழும்பி எழும்பி எழும் அலை முதுகின் மேலே ஏறிஏறி இறங்கின. மீனவர்களின் படகுகள். அமைதியில் உறைந்து கிடந்த நடுக்கடல் பிரப்பின் மீது தார்ச்சாலை போன்ற நீர்ச்சாலையில் சர் சர்ரென விரைந்து கொண்டிருந்தன. படகுகள் சுருண்டு கிடந்த வலையைத் தூக்கி, அலை கடலின் மீது “சல்” என வீசினர்.

மீனவர்கள் நீரின் மேற்பரப்பில் விழுந்த வலை நீரில் நனைந்து மீன் இருக்கும் இடம் தேடி நீருக்குள்ளே மெல்ல மெல்ல இறங்கின. “சர்”ரென விரைந்தன வேறு சில படகுகள்.

மாசி மீன் கெடச்சதா?

“ம்”

“என்ன பேசமாட்டேன்கிற”

“இல்லையே பேசுறனே”

“மீனு கெடச்சா போதும் மாசி”

நீ எப்பவும் பேசவே மாட்ட என்ற காந்தியும் மீன்பிடித்துப் படகை நிரப்பினர்.

உச்சி இருள் கொஞ்சம் கொஞ்சமாய் நழுவி புலரும் பொழுதுக்குத் தயாரானது வானம்.

என்ன போகலாமா?

‘‘போகலாமே” என்ற மீனவர்கள் கடலில் கிடந்த வலைகளை மேலே எடுத்தனர்.

இழுக்கும் வலையில் ஒரு சில மீன்கள் மட்டுமே சிக்கியிருந்தன.

அப்போது கச்சத்தீவின் கடற்பகுதியிலிருந்து ” விர்விர்ரென விரைந்து வந்தன இலங்கைக் கடற்படையின் படகுகள். எங்கு திரும்பினாலும் நீராலே நிறைந்திருக்கும் அந்தப் பகுதியில் வட்டம் மடித்து நின்றன.

தமிழர்கள் பிடித்து வைத்திருந்த வலை மீன்கள் அவர்கள் பார்த்ததும் துள்ளிக் குதித்தனர்.

“ஐயய்யோ… படுபாவிப்பயக வந்திட்டானுகளே என்று மரண ஓலத்தில் கத்திக் கொண்டிருந்தனர்.

ஏய்…… இங்க வரக் கூடாதுன்னு சொல்லியிருக்கமே. ஏன் மறுபடியும் இங்க வந்தீங்க என்று அடாவடித் தனத்தின் உச்சத்திற்குப் போய் அசிங்கமாய்ப் பேசினர் .பிடித்த மீனவர்களை அப்படி அள்ளி கடலில் கொட்டினர் . தண்ணீரில் விழ மறுத்த மீன்கள் கடலில் மேற்பரப்பில் பட்டு மீண்டும் வலைக்கே திரும்பின. தமிழ் படகுகளை தங்கள் கொண்டு வந்த ராட்சத கட்டுமரத்தின் மூலம் தட்டித் தூக்கினர் . டீசல் டேங்கைத்திறந்து அதில் கடல் தண்ணீரை நிரப்பினர்.

“ஐயா…. டீசல்….. டீசல்….எனக் கத்திய ஒருவனை ” டமார்” எனக் கன்னத்தில் அறைந்தான் ஒருவன்.

சார்… இனிமே இந்தப் பக்கமே வரமாட்டோம்”

“இதையே எத்தன நாளைக்கு சொல்லுவீங்க. இது எங்க கச்சத்தீவுன்னு ஒங்களுக்கு தெரியும்ல என அதட்டினான் ஒருவன்

“ஐயா கச்சத்தீவுக்கு இன்னும் ஒரு கிலோ மீட்டர் இருக்கே.

ஓ.கோ எனக்கே கணக்கு சொல்றீங்களா? என்றான் ஒரு முரடன். ஒரு படகைத் தண்ணீரில் தள்ளினான் இன்னொரு முரடன் .வலைகளைக் கிழித்துக் கடலில் வீசினான் ஒரு வெறியன்.

ஐயா, இந்த வலை கடனுக்கு வாங்குனது. வேணாம். வேணாம் டீசல் கூட கடனுக்கு வாங்குனது தாங்க என்று கடல் தண்ணீரில் தங்களின் கண்ணீரை உதித்தான், ஒரு மீனவன்.

“ம்ஹூகும் வெறியர்களின் அட்டகாசம் அடங்கவே இல்லை. அத்தனையும் அடித்து அட்டூழியம் செய்து அழித்துவிட்டு அந்த இடத்தை விட்டே நகர்ந்தனர் அந்த அட்டூழியக் காரர்கள்

போச்சே …..போச்சே எல்லாம் போச்சே…..

என்ற இரண்டு மீனவர்கள் டாமல் டாமல் கடலில் குதித்தனர்.

டேய் சிங்கா டேய் குமரா என்ற காந்தியும் மாசியும் அவர்களைக் காப்பாற்ற அவர்களும் கடலில் குதித்தனர்.

ஐயய்யோ … இப்படி பண்ணிப் புட்டானுகளே என்று தண்ணீரில் அழுத படியே தேடினார்.

கடலில் துள்ளிக் கொண்டிருந்த மீன்களும் காணாமல்ப் போனவர்களைத் தேடி போனவர்களைத் தேடி நீந்திக் கொண்டிருந்தன.

கச்சத் தீவுக் கடல் நீரும் தமிழக எல்லைக் கடல்த் தண்ணீரும் விலகாமலே சேர்ந்திருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *