செய்திகள்

கசாப்புக் கடைகளுக்கு பசுக்களை விற்று மோசடி செய்வதாக கோசாலைகள் மீது குற்றச்சாட்டு

மேனகா காந்திக்கு எதிராக இஸ்கான் ரூ.100 கோடி கேட்டு அவதூறு நோட்டீஸ்

கொல்கத்தா, செப். 30–

கோசாலைகளில் உள்ள பசுக்களை கசாப்பு கடைகளுக்கு விற்று மோசடி செய்வதாக, கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மேனகா காந்திக்கு எதிராக, இஸ்கான் அமைப்பு ரூ.100 கோடி அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விலங்கு உரிமை ஆர்வலரும் பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மேனகா காந்தியின் வீடியோ சமீபத்தில் வைரலானது. அதில் இஸ்கான் நாட்டின் மிகப்பெரிய ஏமாற்றுக்காரர்கள் என்று தெரிவித்துள்ளார். அவர்கள் கோசாலைகளை நிறுவி, அதை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் இருந்து நிதி பெறுகிறார்கள். நான் அவர்களின் அனந்த்பூர் கோசாலையை பார்வையிட்டேன். ஒரு கன்றுக் குட்டி கூட இல்லை. அனைத்துமே பால் கரக்கும் பசு மாடுகள். இஸ்கான் மாடுகளை கசாப்புக் கடைக்காரர்களுக்கு அனுப்புகிறது. அவர்கள் (இஸ்கான்) செய்யும் அளவுக்கு வேறு யாரும் இத்தனை மோசடி செய்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ரூ.100 கோடி கேட்டு நோட்டீஸ்

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இஸ்கான் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்கான் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் பசு மற்றும் காளை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் முன்னணியில் உள்ளது. எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது போல், பசுக்கள், காளைகளை கசாப்பு கடைகளுக்கு விற்கவில்லை. மாட்டிறைச்சி உள்ள உலகின் பல பகுதிகளில் இஸ்கான், பசு பாதுகாப்புக்கு முன்னோடியாக உள்ளது. இந்தியாவிற்குள், நூற்றுக்கணக்கான புனிதமான பசுக்கள் மற்றும் காளைகளைப் பாதுகாத்து, அவற்றின் வாழ்நாள் முழுவதும் தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பை வழங்கும் 60 க்கும் மேற்பட்ட கோசாலைகளை இஸ்கான் நடத்துகிறது என்று தெரிவித்துள்ளது.

மேலும், இஸ்கான் மீது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்காக, மேனகா காந்திக்கு எதிராக ரூ.100 கோடி அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இஸ்கான் பக்தர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் உலகளாவிய சமூகம், இந்த அவதூறான, மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகளால் மிகவும் வேதனையடைந்துள்ளது” என்று இஸ்கான் அமைப்பின் கொல்கத்தா துணைத் தலைவர் ராதாரம் தாஸ் கூறி உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *