கோவை கங்கா மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு மாத விழிப்புணர்வு கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
கண்காட்சியை கங்கா மருத்துவமனையின் தலைவர் நிர்வாக இயக்குனர் கனகவல்லி சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.
தற்போதைய சூழலில் மார்பக புற்றுநோய் பெண்களிடம் மிகவும் பொதுவாக காணப்படும் ஒரு நோயாக உள்ளது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை அளித்தால் அதை எளிதாக குணப்படுத்தி விடலாம். இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் இருக்காது.
அதை வலியுறுத்தி கங்கா மருத்துவமனை சார்பில் இம்மருத்துவமனையின் கீழ்தளத்தில் பி பிளாக்கில் விழிப்புணர்வு கண்காட்சி ஒரு மாதம் நடைபெறுகிறது.
இதில் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளும், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான வழிமுறைகளும் விளக்கப்படுகிறது. இதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ஒருமுறை மார்பகப் பரிசோதனை, ஆண்டுதோறும் செய்யப்படும் மேமோகிராம் பரிசோதனை குறித்தும் விளக்கப்படுகிறது. பலர் கீமோதெரபி மிகவும் ஆபத்தானது மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்தது என்று பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்.
அவ்வாறு எதுவும் இல்லை என்பது குறித்தும் இக்கண்காட்சியில் மருத்துவ ஆலோசகர்கள் தெளிவான விளக்கம் தருகிறார்கள். இம்மாதம் 31-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.