இந்தியாவில் தயாரான கருவிகள் என பெருமிதம் ரூ.1800 கோடி விண்வெளி திட்டங்களையும் துவக்கி வைத்தார்
திருவனந்தபுரம், பிப். 27–
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி இன்று அறிமுகம் செய்தார்.
விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், பிரதாப், கிருஷ்ணன், சவுகான் ஆகியோர் விண்வெளிக்கு செல்ல உள்ளனர்.
நிலவை ஆய்வு செய்ய சந்திரயான்–3, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டங்களை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ, தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் கடந்த 6 வருடங்களாக ரஷ்யாவில் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களின் பெயர்கள் இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
தமிழகத்துக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக கேரளத்துக்கு இன்று காலை பயணம் மேற்கொண்டார்.திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு ககன்யான் திட்டப்பணிகளை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார்.
ரூ.1,800 கோடி
விண்வெளி திட்டங்கள்
இதனை தொடர்ந்து அங்கு ரூ.1,800 கோடி மதிப்பிலான 3 முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
அப்போது ககன்யான் திட்டத்தில் இஸ்ரோவால் விண்வெளிக்கு முதல்முறையாக அனுப்பப்படும் 4 வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து கவுரவித்தார். இதன்படி விமானப்படை குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகிய 4 பேரையும் அறிமுகம் செய்து பிரதமர் மோடி கைக்குலுக்கி வாழ்த்தினார். அவர்களுக்கு மிஷன் லோகோ பேட்ஜ்களை பிரதமர் மோடி வழங்கினார்.
40 ஆண்டுகளுக்கு பிறகு
தொடர்ந்து பிரதமர் பேசியதாவது:–
இந்த நால்வரும் சாதாரண மனிதர்கள் அல்ல. 140 கோடி இந்தியர்களின் கனவுகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப் போகும் நான்கு சக்திகள். 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவர் விண்வெளிக்கு செல்கிறார். இந்த முறை நேரமும் நமதே, கவுண்டவுன் நமதே, ராக்கெட்டும் நமதே.
விண்வெளிக்கு செல்லும் வீரர்களை சந்தித்து நாட்டுக்கு அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டு மக்களின் சார்பாக அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள் தான். விண்வெளி செல்லும் வீரர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டுங்கள்.
இந்தியாவில் தயாரானவை
விண்வெளி வீரர்களின் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விண்வெளி வீரர்களுக்கு யாரும் தொல்லை கொடுக்க வேண்டாம். அது அவர்களின் பணிகளுக்கு இடையூறாக அமைந்துவிடும். இந்தியாவின் விண்வெளித்துறை வளர்வதோடு பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ககன்யான் திட்டத்தில் பயன்படும் கருவிகள் பெரும்பாலும் இந்தியாவில் தயாரானவை.
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும், நிகழ்காலத்தை மட்டுமல்ல, அதன் வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தையும் வரையறுக்கும் சில தருணங்கள் உள்ளன. இன்று இந்தியாவிற்கு அது போன்ற ஒரு தருணம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ககன்யான் திட்டத்தின் கீழ் 2025ம் ஆண்டில் இந்த 4 விண்வெளி வீரர்கள் விண்கலம் மூலம் தரையில் இருந்து 400 கி.மீ. தூரம் கொண்ட சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்பட உள்ளனர். அங்கிருந்தபடியே 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு, பின்னர் மீண்டும் அவர்கள் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வரப்படுகின்றனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் ‘பி.எஸ்.எல்.வி. ஒருங்கிணைப்பு வசதி’, மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் ‘செமி கிரையோஜெனிக்ஸ் ஒருங்கிணைந்த என்ஜின் மற்றும் நிலைப் பரிசோதனை வசதி’ மற்றும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ‘ட்ரைசோனிக் காற்றுச் சுரங்கம்’ ஆகிய 3 முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கவர்னர் முகமது ஆரிப் கான், முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் முரளீதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.