செய்திகள்

ககன்யான் சோதனை விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி துவக்கம்:

தலைவர் சோம்நாத் பெருமிதம்

ஸ்ரீஹரிகோட்டா, அக். 21–

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ள நிலையில், இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த 2007ல், 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டது. கடந்த 2014ல் இத்திட்டத்துக்கு ககன்யான் என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. பூமியில் இருந்து 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2–3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதே ககன்யான் திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை 2025ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக 3 கட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

முதல்கட்ட சோதனை இன்று காலை 8 மணிக்கு தொடங்க இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. இதற்கான இறுதி கட்ட பணியான 13 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.

சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து வாகனத்தை விண்வெளிக்கு அனுப்பி, அதை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து, வங்காள விரிகுடாவில் இறங்கியதும் அதை அங்கிருந்து மீட்பது என திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சோதனைக்கு டிவி–டி1 எனும் ஒரு பூஸ்டர் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து ராக்கெட் புறப்பட்டு சுமார் 17 கி.மீ உயரத்தில் சென்றதும் விண்கலத்தில் வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்துவிடும். அதை பாராசூட்கள் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் வங்கக்கடலில் பத்திரமாக இறக்கி சோதனை செய்யப்பட உள்ளது. வங்கக்கடலில் விழுந்த உடன் விண்கலத்தை இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட ஆராய்ச்சி பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வார்கள்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ தயாராக இருந்த நிலையில், விண்கலம் மேலே எழும்புவதில் சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, காலை 8.30 மணிக்கு விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. அப்போதும் மேலே எழும்புவதில் சிக்கல் இருந்ததால், நேரத்தை 8.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும், 5 நிமிடங்களுக்கு முன்பாக, இந்த சோதனை ஓட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என இஸ்ரோ முடிவெடுத்து, அதனை அறிவித்தது.

“விண்கலம் மேலே எழும்புவது இயல்பாக நடக்க வேண்டும். இரண்டு முறை அதற்காக முயன்றும் அது மேலே எழும்பாததால், அதற்கான காரணத்தைக் கண்டறிய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். முழுமையாக ஆய்வு செய்து அதன் பிறகு விரைவில் சோதனையை நாங்கள் துவங்குவோம். தற்போதைய நிலையில், ககண்யான் விண்கலம் பாதுகாப்பாக இருக்கிறது” என இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, விண்கலம் பகுதிக்குச் சென்று விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொழில்நுட்ப சரிபார்த்தலுக்குப் பிறகு மீண்டும் சோதனை வாகனத்தை விண்ணில் ஏவும் பணி அடுத்த சில மணி நேரங்களில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து காலை 10 மணி அளவில் சோதனை விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. டிவி–டி1 ராக்கெட்டில் இருந்து மாதிரி விண்கலம் திட்டமிட்டப்படி பிரிந்தது. மாதிரி விண்கலத்தின் பாராசூட் விரிந்த நிலையில் வங்க கடலில் தரையிறங்கியது.இதையடுத்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இதனை பார்வையிடுவதற்காக பள்ளி மாணவர்கள் பலர் காலையிலேயே வந்து காத்திருக்கின்றனர்.

திட்ட இயக்குநர் எஸ். சிவகுமாரை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் இஸ்ரே தலைவர் சோமநாத்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “டிவி–டி1 திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

இதையடுத்துப் பேசிய எஸ். சிவகுமார், தாங்கள் மேற்கொண்ட தொடர் உழைப்புக்கு இன்று பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.

டிவி–டி1 ராக்கெட்டிலிருந்து பிரிந்த மாதிரி கலன் பாராசூட் மூலம் கடலில் இறக்கப்பட்டதை கப்பலில் சென்று கடற்படையினர் மீட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *