செய்திகள்

ஓ.பி.ரவீந்திரநாத் மீது பெண் புகார்

பாரபட்சமின்றி நடவடிக்கை வேண்டும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 3–

பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக ரவீந்திரநாத் எம்பி மீது, பெண் அளித்த புகாரில் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அருகே ஏகாடூர் பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி தேவி. இவர் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி, தனக்கு கொலை மிரட்டல் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக, புகார் அளிக்க சென்னை டிஜிபி அலுவலகம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கயாத்ரிதேவி, தனக்கு விவாகரத்து ஆனதை அறிந்த ரவீந்திரநாத் கடந்த அக்டோபர் முதல் தனது நண்பர் முருகன் என்பவர் மூலமாக தொந்தரவு அளித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

பாரபட்சமின்றி நடவடிக்கை

மேலும், தனது வாட்ஸ் அப் மூலமாக மிக அநாகரீகமான வார்த்தைகளில் தன்னை வருணிப்பதாகவும் அவரது விருப்பத்திற்கு இணங்காததால் தன்னை குடும்பத்துடன் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வருவதாகவும் கூறினார். இது குறித்து ஏற்கனவே தாம்பரம் ஆணையரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தன்னிடம் போதுமான ஆதாரம் இருந்தும், அரசியல் செல்வாக்கு உள்ளதால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் இருக்கிறார்கள் என்பதால் டிஜிபியை சந்தித்து புகார் அளிக்க வந்ததாக கூறினார்.

இந்நிலையில், தீரன் சின்னமலையில் நினைவுநாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ஓ.பி.ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில், காவல்துறையினர் அந்த புகார் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் என்பதால் பாரபட்சம் காட்டக் கூடாது என்று தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *