போஸ்டர் செய்தி

ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது

வேலூர், ஜூலை 28–
ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அண்ணா தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
அண்ணா தி.மு.க.வில் சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வரலாம், ஆனால் தி.மு.க.வில் குடும்ப உறுப்பினர்கள் தான் பதவிக்கு வரமுடியும் என்றும் அவர் கூறினார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அண்ணா தி.மு.க. கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நேற்று ஆம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது–
ஏற்கனவே நடைபெற வேண்டிய வேலூர் நாடாமன்றத் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு ஸ்டாலின் தான் காரணம்.
மத்தியிலும், மாநிலத்திலும் எங்கள் ஆட்சி தான் என்று ஸ்டாலின் சொன்னார். ஆனால் மத்தியிலும், மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் மக்கள் தி.மு.க.வை தொங்கலில் விட்டுவிட்டார்கள். ஸ்டாலின் எத்தனை முறை அவதாரம் எடுத்தாலும் அண்ணா தி.மு.க.வை வீழ்த்த முடியாது. இந்தக் கட்சியையும், ஆட்சியையும் அகற்ற வேண்டுமென ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி எடுத்தார், ஆனால், அது ஒருபோதும் நடக்காது. ஒரு ஸ்டாலின் என்ன? ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அண்ணா தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது. இந்தத் தொகுதியில் கூட்டணிக் கட்சி வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆர்.ஆட்சிக் காலத்திலேயே சட்டமன்ற உறுப்பினராகவும், 1984ம் ஆண்டு வேலூர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து திறம்பட பணியாற்றி, எம்.ஜி.ஆரின் நன்மதிப்பைப் பெற்றவர்.
தி.மு.க. வெற்றி
உண்மையான வெற்றியல்ல
பொய் சொல்வதற்கென்று டாக்டர் பட்டம் கொடுப்பதென்றால் ஸ்டாலினுக்கு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும். சென்ற தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி உண்மையான வெற்றியல்ல, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றார்கள். அண்ணா தி.மு.க.வை பொறுத்தவரைக்கும், நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளைக் கொடுத்து, தர்மத்தின் மூலமாக பெற்ற வெற்றி. அனைத்துத் தரப்பு மக்களும் மிக மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென்பதற்காக தைத் திருநாளன்று ரூபாய் 1000 வழங்கிய அரசு அம்மாவினுடைய அரசு. அதேபோன்று, வறுமை கோட்டிற்குக் கீழுள்ள 70 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூபாய் 2000 ஆயிரம் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டம் ஏற்கனவே என்னால் தொடங்கப்பட்டு விட்டது. இந்தத் தேர்தல் முடிந்தவுடன் தகுதியுள்ள அனைவருக்கும் ரூபாய் 2 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் வந்து சேரும்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் 2017 முதல் 2019 ஆண்டு வரை 14,555 சிறுபான்மையின மக்களுக்கு ரூ.74.85 கோடி அம்மாவின் அரசால் கடன் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின வகுப்பைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் கல்வியைத் தொடரும் வகையில் எவ்வித கட்டணமின்றி 11 மாவட்டங்களில் மொத்தம் 11 விடுதிகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல், தர்காக்கள் மற்றும் வக்ப் நிறுவனங்களை பழுது பார்த்து சீரமைப்புப்பணிகளை மேற்கொள்ள ரூ.3 கோடி நிதி தொகுப்பு நிதி உருவாக்கிய அரசு அம்மாவினுடைய அரசு.
சாதாரண தொண்டனும்
உயர்ந்த பதவிக்கு வரமுடியும்
அண்ணா தி.மு.க.வில் தான் சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும். வேலூர் பகுதியில் சிறுபான்மையினத்தைச் சார்ந்த முகமது ஜான் இன்று மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். ஏன், சாதாரண தொண்டன்கூட முதலமைச்சராக வரமுடியும் என்பதற்கு நானே உதாரணமாக இருக்கிறேன். நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். எனவே, விவசாய பெருங்குடி மக்களுக்கு தேவையானவற்றை செய்கின்ற அரசாக அம்மாவினுடைய அரசு திகழ்கிறது. விவசாயிதான் கொடுத்த வாக்குறுதியை காப்பற்றக் கூடியவர் என்பதால் இந்த அரசால் பொதுமக்களுக்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.
அம்மாவினுடைய அரசு குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து அத்திட்டத்தின் மூலம், முதற்கட்டமாக 1519 ஏரிகளும், இரண்டாம் கட்டமாக 1511 ஏரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், 2019–2020ம் ஆண்டிற்கு 1829 ஏரிகள் தூர்வாருவதற்கு தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இத்திட்டத்தின் மூலம் ஏரிகள் தூர்வாரப்படுவதன் மூலம் மக்களுக்குத் தேவையான நீரினை சேமித்துக் வைத்துக் கொள்வதுடன் ஏரியிலிருந்து கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயப் பெருங்குடி மக்கள் இலவசமாக எடுத்து தங்கள் வயல்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்திகொள்ளவும் அம்மாவினுடைய அரசு வழிவகை செய்துள்ளது.
ரூ.1000 கோடியில்
உணவுப் பூங்கா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவு மலர் சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி செய்யப்பட்ட மலர்களை பெங்களூர் கொண்டு சென்றுதான் விற்பனை செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. இதை கருத்திலே கொண்டு தான் கிருஷ்ணகிரியில் சர்வதேச மலர் ஏல மையம் ரூ.20 கோடி மதிப்பில் அமைக்கப்படும். அதே போன்று, சேலம் தலைவாசலில் 900 ஏக்கரில் ஆசியாவிலேயே மிக பிரம்மாண்டமான கால்நடைப் பூங்கா அமைக்கப்படும். அதே போன்று சென்னை அருகே ரூ.1000 கோடியில் உணவுப்பூங்கா ஏற்படுத்தப்படும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் காப்பீட்டுத்தொகை ரூ.2 லட்சமாக இருந்ததை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கிய அரசு அம்மாவின் அரசு. இதன் மூலம் எண்ணற்ற ஏழை, எளிய மக்கள் மருத்துவ உதவி பெற்று வருகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக அளவு விளைபொருட்களை உற்பத்தி செய்ய ஏதுவாக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசன வசதி ஏற்படுத்தப்படும். இதற்காக சுமார் ரூ.2,034 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெய்கின்ற மழை நீர் வீணாகாமல் இருப்பதை தடுக்க ஆங்காங்கே தடுப்பணை கட்ட ஓய்வு பெற்ற பொறியாளர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு, குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் தேவைப்பட்ட இடங்களில் ரூ.1,000 கோடி மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்படும்.
தி.மு.க. பொறுத்தவரையில் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் தான் பதவிக்கு வரமுடியும். கலைஞர், கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின், தற்பொழுது ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் இதுபோன்ற குடும்ப அரசியல் வேறு ஏதாவது கட்சியில் உண்டா? என்பதை வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஆனால், அண்ணா தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் யார் வேண்டுமானாலும் உயர்பதவிக்கு வரமுடியும் என்பதற்கு, சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த நான் இன்றைக்கு முதலமைச்சராக பொறுப்புக்கு வந்துள்ளேன் என்றால் எந்தக் கட்சி மக்களுக்கு பணியாற்றக்கூடிய கட்சி என்பதை வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களுக்காக
குரல் கொடுப்பார்
வேலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மக்களுக்கு சிறப்பாக பணியாற்றக் கூடியவர். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றித்தருவார். எனவே, வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் அவருக்கு இரட்டை இலைச் சின்னத்திலே வாக்களித்து வெற்றி பெற வைத்தால். இப்பகுதி மக்களுக்காக, மக்களவையில் ஏ.சி.சண்முகம், மாநிலங்கள் அவையில் இப்பகுதியைச் சார்ந்த முகமது ஆகியோர் உங்களுக்காக குரல் கொடுப்பார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே ஏ.சி. சண்முகத்துக்கு வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு முன், மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வாணியம்பாடி பிரசாரத்தை முடித்துக்கொண்டு ஆம்பூரிருக்கு பிரச்சாரம் செய்ய வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சாலையின் இரண்டு பக்கமும் திரண்டு நின்று பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, கே.சி.வீரமணி, ஆர்.பி.உதயகுமார், நிலோபர் கபில், மணிகண்டன், அண்ணா தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, முகமது ஜான் எம்.பி. மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *