சிறுகதை

ஓய்வூதியம் – ராஜா செல்லமுத்து

Spread the love

அடுக்குமாடிக் குடியிருப்பின் இரவு நேரக் காவலாளியாக உட்கார்ந்திருந்தார் முரளி.
தூக்கம் கண்களைத் தழுவினாலும் அவரால் தூங்க முடியவில்லை.
வயதான அந்தக்கோலத்தில் அவர் அப்படி உட்கார்ந்திருந்தது அவர் வயதை மீறி சோகம் கண்களில் மிதந்து உடம்பு முழுவதும் வலியாய்ப்பரவியது.
கடந்த காலங்களை நினைத்த முரளிக்கு அழுகையே வந்தது.
முப்பது வருடங்களுக்கு மேலே அரசாங்க வேலை செய்து விட்டு இன்னும் இரண்டு நாட்களில் ஓய்வு பெறப்போகும் முரளிக்கு அவர் எண்ணத்தில் கவலைக் கோடுகள் கணக்கில்லாமல் விழுந்தன. வரும் இரண்டு நாட்களும் ஜீவனின்றியே அலுவலகம் போவதும் வருவதுமாய் இருந்தார். பார்க்கும் அத்தனை ஆட்களும் அவருக்கு சொந்தமாகவே பட்டனர். விரோதக் குரல்களைக் கூட விருப்பப்பட்டே விலக்கி வைத்தார்.
‘‘என்ன முரளி சார்.. ரிடையர்ன்னு சொல்லவும் ஆளே மாறிப் போய்டீங்க.. இது எல்லாருக்கும் இருக்கிறது தானே..! இத நினைச்சிட்டு இருந்தீங்கன்னா..! ஒன்னும் செய்ய முடியாது. இருக்கிற நாள ரொம்ப சந்தோசமா.. அனுபவிக்கிறத விட்டுட்டு இப்பிடியா.. மூஞ்சிய உர்ன்னு வச்சிட்டு இருக்கிறது. போங்க.. போயி.. எல்லார்கிட்டயும் எப்பவும் போல பேசுங்க..’’ என்று முரளியிடம் சொன்னார் உடன் வேலை பார்க்கும் மோகன்.
‘‘இல்ல..அப்பிடியெல்லாம் ஏதுமில்ல..’’ என மோகன் சொல்லும் போதே அசடு வழிந்தது.
‘‘ரொம்ப வழியாதீங்க முரளி.. தாங்க முடியல..’’ என்று மோகன் சொல்ல
‘‘ஹலோ மோகன்.. இப்ப உங்களுக்கு ஏதும் தெரியாது.. நீங்க ரிடையர் ஆகும் போதுதான் தெரியும்.. எப்பிடிங்க இவ்வளவு நாள் வேல செஞ்ச எடத்த விட்டுட்டு, கூட வேல பாக்குறவங்கள விட்டுட்டு அது கஷ்டமான நேரம் தாங்க..’’ என்று முரளிக்கு ஆதரவாகச் சிலர் பேசினர்.
*அப்படியும் இப்படியுமாய் இரண்டு நாட்கள் உருண்டு ஓடின
‘‘முரளி இனிமே நீங்க.. காலையில ஆபிஸ் வரவேண்டிய தில்ல.. மேனேஜர் கூட வேல பாக்குற ஆளுகங்கிற பிக்கல் பிடுங்கல் ஏதும் இல்ல.. இருக்கிற கொஞ்ச நாளில அழகா ஓய்வெடுக்கலாம்..என்றனர் சில பேர்.
பின்னர் வாழ்த்துகள்,பரிசுகள், கை குலுக்கல்கள் என முரளிக்கு எல்லாமே திக்குமுக்காடியது. அவர் பணி புரிந்த வருடங்களைக் கணக்கிட்டு, அவரின் வாழ்நாள் தொகையாக ஒரு தொகையைக் கொடுக்க முடிவு செய்தது அரசு
‘‘முரளி..’’
‘‘சொல்லுங்க கணேசா..’’
‘‘வாங்குற பணத்த என்ன பண்ணப் போறீங்க..?’’ என்று அவர் கேட்க அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் முரளி மெளனமாக இருந்தார்.
‘‘வாங்குற காச கையில வச்சுட்டு இருக்காதீங்க.. அப்புறம் எல்லாம் கைய விட்டுட்டு போயிரும்.. மாசா.. மாசம்.. நமக்கு பென்சன் இருந்தாலும் பரவாயில்ல.. அதான் இப்ப இல்லன்னு ஆகிப்போச்சே..! அதனால.. கையில பணத்த வச்சிட்டு இருக்காம
ஏதாவது பிக்சடு டெபாசிட்ல போட்டுட்டு.. அதுல வர்ற வருமானத்த வச்சு வாழ்க்கை நடத்தப் பாருங்க முரளி..’’ என்றார்.
‘‘ஆமா.. கணேசா.. நீங்க சொல்றது தான் உண்மை..’’
‘அப்படியே செஞ்சுருங்க முரளி’ என்று மற்றவர்களும் சொன்னார்கள்
‘‘முரளி..’’ என்று குருசாமி கூப்பிட்டார்.
‘‘சொல்லுங்க குருசாமி..’’
‘‘உங்களுக்கு எத்தன கொழந்தைங்க முரளி..’’ என்று கேட்டார்.
‘‘மூணுங்க.. ரெண்டு பொண்ணு.. ஒரு ஆணு.. மூணு பேருக்கும் கல்யாணம் ஆகி இப்ப செட்டில் ஆகிட்டாங்க..’’
‘‘அப்படியா..?’’
‘‘ஆமா.. குருசாமி இப்ப வீட்டுல நானும்.. என்னோட மனைவி மட்டும் தான்..சொந்தமா வீடு இல்ல..வாடகை வீடுதான் இருக்கிற வருமானத்த வச்சு வாழ்க்கை நடத்த வேண்டியது தான்..’’ என்று கொஞ்சம் சிரிப்பு கலந்த குரலில் பேசினார் முரளி.
‘‘ம்.. முரளி..’’
‘‘சொல்லுங்க குருசாமி..’’
‘‘எவ்வளவு ரிடையர்மெண்ட் பணம் வரும்..?’’
‘‘என்னங்க வரப்போகுது..அப்படி.. இப்படின்னு பத்து, பதினஞ்சு வர்றதே.. பெரிய விசயம்..’’ என்று அவர் சொன்னார்.
‘‘சரி.. வர்ற பணத்த அப்பிடியே.. ஏதாவது ஒரு பேங்கில டெபாசிட் போட்டுருங்க.. இல்லன்னா ரொம்ப சிரமம்..’’
‘‘ஆமா குருசாமி அப்படித்தான் நினைச்சிட்டு இருக்கேன்..’’
‘‘ஆமாமா.. – இல்லன்னா.. ரெம்ப கஷ்டமாயிரும்..’’ என்று சுற்றியிருக்கும் ஆட்கள் சொல்ல அத்தனையும் ஆமோதித்த முரளி அலுவலகத்தை விட்டு வெளியேறினார். இத்தனை வருடங்கள் பணி செய்த இடத்தை விட்டுப்போவதற்கு முரளிக்கு என்னவோ போலிருந்தது.
*நாட்கள் கடந்தன..
அவருக்குச் சேர வேண்டிய ஓய்வூதியப் பணம் அவர் கைக்கு வந்து சேர்ந்தது. -அது வரையில் எந்த வார்த்தையும் பேசாமல் இருந்த பிள்ளைகள் அன்று முதல் முரளியின் வீட்டில் முகாமிட்டிருந்தனர்.
‘‘அப்பா.. எவ்வளவு பணம் வந்துச்சு..’’ என்று மகன் கேட்டார்.
‘‘பதினஞ்சு லட்சம் பா..’’
‘‘சரிப்பா.. இவ்வளவு பணத்தையும் நீங்க வச்சுட்டு என்ன பண்ணப் போறீங்க..?’’ என்று முதல் வலையை விரித்தாள் மூத்த மகள்.
‘‘ஆமாப்பா.. அக்கா சொல்றது நியாயம் தான்..உங்களுக்கு எதுக்கு இவ்வளவு பணம்..அதான் நாங்க இருக்கமே..எங்களுக்கும் கொஞ்சம் கஷ்டம் இருக்குப்பா..’’ என்று பிள்ளைகள் இழுத்தனர்.
‘‘இப்ப என்ன சொல்ல வாரீங்க..?’’ என்று முரளி இழுக்க
‘‘பணத்த எங்க கையில குடுங்க.. ஒங்கள நாங்க பாத்துக்கிறோம்..’’ என்று மூன்று பேரும் ஒத்தக் குரலில் சொல்ல முதலில் தயங்கிய முரளி பின்னர் பிள்ளைகளின் பாசத்திற்குக் கட்டுப்பட்டார்.
‘‘ஆமாங்க.. இந்தப் பணத்த பேங்கில போட்டு என்ன பண்ணப்போறோம்..?’’ நம்ம பிள்ளைகளுக்கே பிரிச்சு குடுத்திரலாமே..’’ என்று முரளியின் மனைவியும் சொல்ல யோசித்துப் பார்த்த முரளிக்கு அதுவே சரியெனப்பட்டது.
வந்த ஓய்வூதியப்பணத்தை பிள்ளைகள் மூன்றுக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தார் முரளி. வாடகை வீட்டை விட்டு ஒவ்வொரு பிள்ளைகளின் வீடுகளில் தங்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் ஆரத்தி எடுத்துத் தாங்கிய பிள்ளைகளுக்கு வர வர தாய், தகப்பன் கசக்க ஆரம்பித்தனர்.
‘‘என்னப்பா.. எவ்வளவு நாள் தான் எங்க வீட்டுலயே.. தங்கச்சி வீட்டுக்கு போங்க..’’ என்று ஒருவருக்கொருவர் வீம்பு பேச எல்லோரும் வெறுப்பையே உதிர்த்தனர்.
‘‘என்னம்மா.. வந்த பணத்த சேமிக்காம இப்பிடி எல்லாத்தையும் பிரிச்சு குடுத்திட்டு, இப்பிடி அவமானப் படுறோம்..’’
என்று முரளி புலம்பினான்.
‘‘ ரிடையர்மென்ட் பணத்த மொத்தமா.. குடுக்காம.. பென்சனா குடுத்திருந்தா..! இவ்வளவு பிரச்சினை இல்லீங்க..’’ என்றாள் முரளியின் மனைவி .
‘‘ஆமா நாம தப்பு பண்ணீட்டோம்..’’ –
‘‘பணம் நம்ம கையில இருக்கும் போது அப்பிடி இப்பிடின்னு பேசி.. எல்லாத்தையும் வாங்கிட்டு போயிட்டாங்க.. இப்ப நம்ம கையில ஏதும் இல்லங்கவும் நம்மள யாரும் கண்டுக்கிறதில்ல.. தப்பு பண்ணிட்டோம்மா, தப்பு பண்ணிட்டேன்’’ என்று அழுது புலம்பினார் முரளி.
‘‘முரளி.. எல்லாம் கேள்விப்பட்டேன்..எவ்வளவு சொல்லியும் கேக்காம ஓய்வூதிய பணத்த எல்லாம் குடுத்திட்டு இப்பிடி ஒக்காந்திருந்தீங்களே..’’ என்று குருசாமி சொன்னது ஞாபகம் வர கண்களில் நீரொழுக அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இரவு நேரக் காவலில் கண் விழித்த படியே உட்கார்ந்திருந்தார் முரளி.
அவர் விழிகளில் வாழ்க்கையின் பயம் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *