சென்னை, மே 15–
சென்னை கொட்டிவாக்கத்தில் ஓய்வு பெற்ற ஐ.டி. ஊழியர் வீட்டில் 60 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு மனைவியுடன் தப்பி ஓடிய நேபாள காவலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற ஐ.டி. ஊழியரான மகேஷ் குமார், சென்னை கொட்டிவாக்கத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம், நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரை மகேஷ் குமார் தனது வீட்டிற்கு காவலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். காவலாளி ரமேஷ் வேலையில் சேர்ந்த பிறகு, அவரது குடும்பத்துடன் மகேஷ் குமார் வீட்டின் பின்புறம் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மகேஷ் குமார் தனது மனைவியுடன் வேலூரிலுள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு கோவிலிலிருந்து திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது .
மகேஷ் குமார் உடனடியாக வீட்டின் பின்புறம் வசித்து வந்த காவலாளி ரமேஷை தேடியுள்ளார். அப்போது காவலாளி குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளது தெரியவந்தது.
இந்த நகை கொள்ளை சம்பவம் தொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் மகேஷ் குமார் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்தில் காவலர்கள் சோதனை நடத்தி ஆய்வு செய்தனர். மேலும் தப்பி சென்ற நேபாள நாட்டை சேர்ந்த தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.