சிறுகதை

ஓட்டமும் நடையுமாய்…. | டிக்ரோஸ்

காலை 4.30 மணி அலார மணி அடிக்கும் முன்பே விழித்து விட்டான் கண்ணன். அவனுக்கு அன்று காலை ஒரு நல்ல வேலைக்கு இண்டர்வியூ செல்ல வேண்டும். அதற்கான நாள் அது!

பி.இ.யுடன், எம்.பி.ஏ.வையும் முடித்து விட்டான். ஆனால் வேலைதான் கிடைப்பதாக தெரியவில்லை. வீட்டில் அவன்தங்கை, ‘டேய் அண்ணா இப்படியே சோம்பேறியா நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ பார்த்துக்கிட்டே வாழ நினைக்கிறீயா?’ எனக் கேட்டான். அப்போது கோபத்தில் கிடைத்த வாராந்திரப் புத்தகத்தை அவள் மண்டை மீது எறிந்தான்!

‘கிடைக்கிற சம்பளத்தில் ஏதாவது ஒரு வேலையில சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பி. அப்பத்தானே மேட்ரிமோனி வெப்சைட்டிலே வேலைக்கு போற பையன்னு போட்டு கல்யாண ஏற்பாடுகள் செய்ய வசதியாக இருக்கும்’ என்று தினமும் 35 தடவையாவது சொல்லிக்கொண்டிருந்தது கண்ணனின் பெற்றோர்கள் தான்.

‘வேலைக்கு போய் ஏதாவது சம்பாதிக்கக் கூடாதுன்னா எனக்கு இருக்கு! வேலை, வேலைன்னு தேடிக்கிட்டு தானே நான் இருக்கேன்’ என்று கண்ணன் தன் நண்பரிடம் சொல்லாத மாலைப் பொழுதுகளும் இல்லை.

சென்னை எங்கும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பெரிய நிறுவனங்கள் ‘Work at Home’ என்று கூறிவிட்டு அலுவலகம் வர வேண்டாம் என்று சொல்லி விட்டதால் ஒரு வாரமாகவே கண்ணனின் வேலை தேடும் படலத்தில் தொய்வு ஏற்பட்டது.

பொருளாதார சரிவு காரணமாக பங்கு மார்க்கெட்டும் தள்ளாடிக் கொண்டிருந்ததால் கார்ப்பரேட் நிறுவனங்கள் கையைப் பிசைந்தபடி செலவினங்களை குறைப்பதற்கு நேரத்தை செலவழித்துக்கொண்டிருந்தனர். அதனால் கண்ணனின் விண்ணப்பங்களுக்கு அக்னாலேஜ்மென்ட் கூட தரப்படவில்லை.

ஆக இது வேலையின்றி கையில் காசு இல்லாமல் திண்டாடும் கண்ணனின் பரிதாபநிலை பற்றிய கதையா? அதுவும் இல்லை. இன்றைய தொலைத் தொடர்பு டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைனில் சாப்ட்வேர் எழுதுவது, மொழிபெயர்ப்பு செய்வது, சிறுசிறு வீடியோ எடிட்டிங் செய்வது என பலதரப்பட்ட வேலைகளில் பிசியாக இருந்தான் கண்ணன். அவன் வேலைக்கான இன்டர்வியூக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தால் செலவு மிச்சம். அவனது சம்பாத்தியம் அதிகமாகத்தான் இருக்கும்.

புது ஆடைகள், செல்போன் ரீசார்ஜ், ஆன்லைனில் உணவு, சினிமா என்று எல்லா செலவுகளுக்கும் இப்படி சம்பாதித்து விடுவான்.

மொத்தத்தில் வேலைக்கு இன்டர்வியூ என்று புறப்பட்டு போனால்தான் போக்குவரத்து செலவு, பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நேர விரயம்…!

அன்று மாலை இரண்டு நாட்களில் இன்டர்வியூ என்றவுடன் பெற்றோருக்கு சந்தோசம் தான்; தங்கைக்கும் சரி. ஆனால் ஒரு நாள் தான் சண்டை போட ஆள் இருக்க மாட்டான்; சமாளித்துக் கொள்ளலாம் என்று மனதில் நினைத்து கொண்டாள்.

மறுநாள் இன்டர்வியூவுக்கு போடவேண்டிய உடைகளையும் எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்களையும் பூஜையறையில் வைத்து விட்டு இரவு சாப்பாட்டை முன்னதாகவே சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்று விட்டான்.

கண்ணனிடம் இருந்த ஒரு நல்ல பழக்கம், காலையில் எழுந்தவுடன் நடைபயிற்சி அல்லது மெல்ல ஓடுவது!

அன்று காலை பிரம்ம முகூர்த்தத்திலேயே எழுந்து விட்ட கண்ணன் உடனே வாக்கிங் புறப்பட்டான். விடிந்து கொண்டிருந்த மயிலாப்பூர் பகுதி மெல்ல பரபரப்பாக இயங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.

மார்ச் மாத அதிகாலை இதத்தில் புத்துணர்வு பெற்று கண்ணன் மெல்ல ஓடத் துவங்கினான்.

பல சிறு கடைகள் திறக்கப்பட்டு கொண்டிருந்தது. பால் வியாபாரிகளும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் தன் முன் அவன் படித்த அதே கல்லூரியின் மஞ்சள்நிற பஸ் வந்து நிற்பதைக் கண்டான்.

இவன் படிக்கும்போது இருந்த பஸ், வளைந்து நெளிந்து ஓட்டை பஸ்சாக இருக்கும்! தற்போது அதே மஞ்சள் பஸ் குளுகுளு வசதியுடன் ஒய்யாரமாக இருந்தது.

அந்த அழகிய பஸ் வந்தவுடன் பல இளவட்டங்கள் அதன் அருகே தோன்றினார்கள்!

தன் ஓட்டத்தை மிதமாக குறைத்துக் கொண்டு அந்த பஸ் நிரம்புவதைப் பார்த்துக் கொண்டிருந்த போது, ஒரு ஆடம்பர கார் அந்த பஸ்ஸின் பின், ‘சரட்’டென்று வந்து நிற்க முன்புறத்திலிருந்து ஓர் சுடிதார் பெண்ணும் பின்சீட்டில் இருந்து டீ–சர்ட், ஜீன்ஸ் அழகியும் கீழே இறங்கி ‘விறுவிறு’வென அந்த பஸ்ஸில் ஏற துள்ளி ஓடினர்.

அடுத்த 40 நிமிடம் நண்பர்களுடன் அரட்டைக்கு தான் இப்படி ஓடிப் போய் ஏறுகிறார்கள் என்று கண்ணன் யோசித்தபடி சற்று முன் வந்து நின்ற காரை தாண்டி ஓட முற்பட்ட போதுதான் அவன் கண்களில் ஒரு குறைபாடு தென்பட்டது. பல துப்பறியும் புத்தகங்கள், ஆங்கில டிவி சீரியல்கள், சமீபமாய் ஹிட்ச்காக் படங்களைப் பார்த்ததன் பாதிப்பால் அந்த காலை நேரப் பதட்டங்களுக்கு இடையே இந்த சிறு விஷயம் ‘பளிச்’சென்று இவன் கண்களில் தென்பட்டது.

அடுத்த நொடியே அவனது இயல்பு குணம் வெளிப்பட மூடப்படாமல் இருந்த காரின் பின் சீட் கதவை மெல்ல திறந்தது .

‘சார், சாரி கார் கதவு சரியா மூடாமல் இறங்கி விட்டார்கள். ஆகவே நானே மூடுகிறேன்’ என்று கூறி ‘யார் இப்படி பின் கதவைத் திறப்பது’ என்று சற்று பயம் கொண்ட அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்த மகேஷ் சாரிடம் கூறியபடி கதவைச் சரியாக சாத்தினான்.

கார் ஓட்டுபவர் இப்படி யாராவது பின்புறக் கதவை மூடாமல் அரைகுறையாக மூடி விட்டுச் சென்றால் டிரைவர் தலைக்கு மேலே உள்ள விளக்கு எரிந்து கொண்டே இருக்கும்.

அது மட்டுமா, அப்படியே இருக்கட்டும் என்று ஓட்டினால் கதவு ‘படக்’கென்று திறந்து கொண்டால் சாலை உபயோகிக்கும் அடுத்தவருக்கு எமனாகக் கூட மாறிவிடும்!

அல்லது கார் கதவு பிளாட்பாரத்தில் இடிபட்டு வளைந்து நெளிந்து குறைந்தது ரூ.30 ஆயிரமாவது செலவு வைத்து விடும்.

மகேசுக்கு சொந்த நிறுவனம் பல லட்சம் வருமானம் ஈட்டினாலும் பெண்ணை பெற்றவர் ஆயிற்றே செலவு என்று வந்துவிட்டால் கொஞ்சம் பயப்படத் தான் செய்வார்.

முன் சீட்டில் இருந்து வெளியேறிய சுடிதார் தான் மகேஷின் மூத்தமகள். பின் சீட்டு ஜீன்ஸ்சோ அடுத்த தெருவில் வசிக்கும் அவளது சினேகிதி .

பஸ்சைதர் தாண்டி ஓடிக் கொண்டிருந்த கண்ணனுக்கு சற்றே வியப்பாக இருந்தது, அந்தக் கார் மீண்டும் தன் முன்வந்து மெல்ல ஓரமாக வந்து நின்றது.

ஒன்று நன்றி அல்லது திட்டு. நன்றி என்றால் ஏன் என்று உங்களுக்கு தெரிந்ததுதான்! சரி திட்டு என்றால்? ‘கொரோனா வைரஸ்’ பரவல் வந்துவிடுமோ? என்ற பயத்தில் நடுங்கிக் கொண்டு இருக்கும் சென்னையில் ஒரு மர்ம இளைஞன் திடீரென தன் காரின் பின் கதவைத் திறந்து மூடினான்.

‘நடந்தது நடந்தாச்சு, வருவதை எதிர்கொள்வோம்’ என்று துணிந்து விட்ட கண்ணன் காரைத் தாண்டி ஓடுகையில் மீண்டும் வேகத்தை குறைத்துக்கொண்டு கையை உயர்த்தி,

‘சாரி சார்’ என்று சிக்னல் கொடுக்க உயர்த்தி கொண்டிருக்கையில் மகேஷ் தன் பக்க கார் கண்ணாடிக் கதவை மெல்ல கீழே இறக்கியபடி கைகளை கூப்பினார்.

ஆம் சர்வதேச தலைவர்கள் எல்லாம் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டு நமது பாரம்பரிய வணக்கத்திற்கு மாறுவது போல, அங்கே மகேஷும் மிக பவ்வியமாக கைஎடுத்து வணங்குவதைப் பார்த்த கண்ணனுக்கு, ‘அட பரவாயிலங்க இதுக்கு போய்…’ என்று மகிழ்ச்சியான பெருமைப் பூரிப்புடன் தனது உயர்த்திய கரத்தை அப்படியே செய்கையாக மாற்றியபடி வரட்டா’ என டாட்டா காட்டி விட்டு ஓடினான்.

இக்காட்சியைக் கண்ட பலருக்கு கீதா உபதேசத்தின் போது கண்ணன் அருள்பாலிக்க ரதத்தை விட்டு வெளியேறிய அர்ஜுனன் கைகூப்பி இருக்கும் காட்சியே நினைவுக்கு வரும்!

ஆனால் காரில் இருந்த மகேஷ் கீழே இறங்கவில்லை. கண்களை மூடியபடி இருகரம் கூப்பி எதிரே இருந்த சுப்பிரமணியசாமிக்கு இன்றும் தன் மகள் பஸ்சை பிடித்துவிட்டதற்கு நன்றியை காணிக்கை தந்து கொண்டிருந்தார்! பஸ்ஸை விட்டு இருந்தா அதன்பின்னே மேலும் 10 நிமிடங்கள் பின் தொடர்ந்து அதில் ஏற்றி விட்டு, மந்தைவெளியின் ஒருவழி சாலை விதியால் மேலும் 20 நிமிடங்களுக்கு சுற்றுப் பாதையில் வீடு திரும்பித் தன் அலுவலக பணிக்கு உரிய நேரத்தில் சென்றாக வேண்டுமே!

அதுவும் இன்று புதிதாக வேலைக்கு சேர்த்துக் கொள்ள இவரே இன்டர்வியூ செய்தாக வேண்டும் ; அவரே தாமதமாகவா செல்வதா?

––––

  • decrose1963@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *