செய்திகள்

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! ஒருவர் கைது

Makkal Kural Official

வேலூர், பிப்.7–

வேலூரில் ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதிலிருந்து கீழே தள்ளிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூரை சேர்ந்தவர் ஜமினி ஜோசப் என்பவரின் மனைவி ரேவதி. இவர் வீட்டிலேயே டெய்லரிங் வேலை செய்து வருகிறார். தற்போது ரேவதி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த மங்கள சமுத்திரத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு செல்வதற்காக ரேவதி திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்தார்.

திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பெண்கள் பொது பெட்டியில் ஏறி பயணம் செய்தார். ரெயில் ஜோலார்பேட்டை வந்தவுடன் சக பெண் பயணிகள் இறங்கிவிட்டனர். ரேவதி மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது கே.வி.குப்பத்தை சேர்ந்த ஹேமராஜ் (வயது 28) என்பவர் பெண்கள் பொது பெட்டியில் ஏறினார். அப்போது ரேவதி இது பெண்கள் பெட்டி என்று கூறினார். அதற்கு ஹேமராஜ் அவசரமாக ஏறி விட்டதாகவும், அடுத்த ரெயில் நிலையம் வந்தவுடன் இறங்கி விடுவதாக கூறி அங்கும் இங்கும் சுற்றி திரிந்தார்.

சிறிது நேரத்திற்கு பின்னர் ரெயில் பெட்டியின் கழிவறைக்கு சென்று வந்த வாலிபர் திடீரென ரேவதியை சரமாரியாக தாக்கினார். அவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி கத்தி கூச்சலிட்டார். இதில் ஆத்திரமடைந்த ஹேமராஜ் அவரது தலைமுடியை பிடித்து இழுத்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். ரெயில் காட்பாடி வந்தவுடன் ஹேமராஜ் அங்கிருந்து இறங்கி தப்பி சென்றார்.

ரெயிலில் இருந்து கீழே விழுந்த ரேவதிக்கு கை, கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த கர்ப்பிணியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ரெயில்வே எஸ்.பி. உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு ஹேமராஜை தேடி வந்தனர். காட்பாடி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஹேமராஜை இன்று அதிகாலை அவரது வீட்டின் அருகே சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஹேமராஜ் ஏற்கெனவே பல பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது, சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்து ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் ஹேமராஜிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *