சிறுகதை

ஓடுபாதை | ராஜா செல்லமுத்து

Spread the love

விறு விறுவென ஓடிக்கொண்டிருந்தன வாகனங்கள்..

அலுவலக நேரம் என்பதால் அத்தனை ஆர்ப்பரிப்பு : எல்ல தார்ச் சாலைகளும் மூச்சு முட்டியடியே இருந்தன.

270 சி பஸ்ஸை ‘‘விர்’’ என விரைந்து ஓட்டிக்கொண்டிருந்தான் ஓட்டுநர் சிவா. , நடுத்தரவயது. மனைவி ,பிள்ளைகள், குடும்பம் குட்டிகளோடு வாழந்து வருபவன். அரசாங்கச் சம்பளத்தில் ஓடுகிறது இவன் வாழ்க்கை . வயதான் அம்மா, அப்பா என்று கூட்டக் குடும்பமாய்க் குதூகலத்தோடு நகர்ந்து கொண்டிருக்கிறது சிவாவின் குடும்ப வாழ்க்கை

சிவா இன்று பஸ்ஸை அதிகாலையில் எடுத்தாலும் அவன் எண்ணம் முழுவதும் அப்பாவை மருத்துவமனைக்குக் கூப்பிட்டுப் போகவில்லையே..!’’ என்ற ஆதங்கம் அவனின் மனம் முழுவதும் பரவி நின்றது. நிறுத்தங்களில் நின்று ஆட்களை ஏற்றும் போது படிகளில் ஏறுபவர்களையும் இறங்குபவர்களையும் கவனமாய் பார்ப்பான். அதுவும் அவன் அப்பாவை ஒத்தவயதுடையவர்கள் வந்தால் அப்படிப் பார்த்துக் கொண்டே இருப்பான்.

‘‘என்ன.. சிவா.. ஒரே சிந்தனையில இருக்கீங்க போல..’’ என்று அடைத்து நிற்கும் கூட்டத்திலும் அவனைக் கண்டு பிடித்துக் கேட்பான் நடத்துனர் மணி.

‘‘இல்ல ஒண்ணுமில்ல..’’ என்று சமாளித்துக் கொண்டே வண்டியை ஓட்டுவான் சிவா.

நீளும் தார்ச்சாலையில் நீண்டுகொண்டே சென்றன அப்பாவின் நினைவுகள். கவனத்தை ஓடு பாதையில் செலுத்தி ஒருமித்த எண்ணத்தோடு ஓட்டிபோகும் போது

‘‘டிரிங்..டிரிங்..’’ அவனின் டிரைவிங் கவனத்தைச் சிதைத்தது அவனின் செல்போன். சிவாவின் கவனம் முழுவதும் போக்குவரத்திலேயே இருந்ததேயொழிய குவியும் செல்போன் கவனத்தைக் கூர்ந்து கவனித்தாலும் அதை எடுத்துப்பேச முடியாமல் இருந்தான்.

‘‘சார்.. போன் வருது..’’ என்று நின்று கொண்டிருந்த ஒருவர் சொல்ல

‘‘இல்லங்க. ரொம்ப ஸ்பீடா போயிட்டு இருக்கோம் இப்பபோயி போன் பேசுனா ஏதாவது ஒன்னு நடத்திரும் வேணாமே..’’ என்று சொல்வதற்குள் மூன்று முறை ஒலித்தது அவனின் செல்போன்.

‘‘டிரிங்.. டிரிங்..’’ என மாறி மாறி ஒலிக்க இதைக் கவனமாய்க் கேட்ட ஒருவர்

‘‘ஏன் சார் ஒரு சந்தேகம் அவனவன் ரிங்டோன் வித்யாசமா வச்சுட்டு இருக்கானுக.. நீங்க என்ன டிரிங் டிரிங்ன்னு பழைய ரிங்டோன வச்சிட்டு இருக்கீங்க..! என்று ஒருவர் கேட்க

‘‘ம்..ம்’’ என்று உதடு பிரியாமல் சிரித்த சிவா ‘‘சார்.. ஒருத்தன் வச்சுருக்கிற ரிங்டோன வச்சே அவனோட கேரக்டர் என்னன்னு தெரிஞ்சுக்கிரலாம்..’’

‘‘அப்பிடியா..?

‘‘ஆமாங்க நீங்க நல்லா பாருங்களேன். அறிவாளி ,புத்திசாலி, நல்ல கேரக்டர் உள்ளவன் எப்பிடி ரிங்டோன் வச்சிருக்கான். முட்டாப்பயக எப்பிடி ரிங்டோன் வச்சிருக்கான்னு கேட்டாலே தெரியும். ஒருத்தன் வச்சுருக்கிற ரிங்டோன்தான் அவன் கேரக்டர்..’’ என்று சொல்லிக் கொண்டே வண்டியை ஓட்டிப்போய்க் கொண்டிருந்தான் சிவா.

அன்றைக்குப் பார்த்து ரோட்டில் டிராபிக் எதுவும் இல்லாமலே இருந்தது

‘‘என்ன இது எப்பவும் ரோட்டுல கொஞ்சம் கூட்டம் இருக்கும் இன்னைக்கு இல்லையே..! என்று நினைத்த சிவா அப்பவும் அடித்த செல்போனை எடுக்கவே முடியவில்லை. சிவா ஓட்டிப்போன பேருந்துக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த பேருந்தை ரோட்டில் நின்றுகொண்டிருந்த உடம்புக்கு முடியாமலிருந்த இரண்டு வயதானவர்கள் நிறுத்த யாரும் அவர்களை ஏற்றவே இல்லை. நிறுத்தி நிறுத்திப்பார்த்தவர்கள் ரோட்டின் ஓரம் ஒதுங்கி நின்றனர்.

‘‘என்னய்யா.. பஸ் ஸ்டாப்பு. நடந்து போக கொஞ்சம் கஷ்டமா.. இருக்கு. அதுவும் முடியாதவங்க நாம ஏத்திட்டு போனா இந்த பஸ்காரனுக கொறஞ்சு போவானுகளா..? இல்ல பரிசு வாங்குறது நின்னு போகுமா..? வயசான ஆளுகள ஏத்திட்டு போனா என்னவாம்.. ? என்று சலித்துக்கொண்ட பெரியவர்கள் ஓரம் நின்றார்கள்.

‘‘இன்னொரு பஸ் வருது மறிச்சு பாப்பமா..?’’ என்ற பெரியவர்கள் 270 சி பஸ்ஸை நிறுத்த அந்தப்பெரியவர்களைப் பார்த்த சிவா பஸ்ஸை பட்டேன நிறுத்தினான்.

‘‘யப்பா.. யாரோ.. நல்ல மனசுக்காரன் ஒருத்தன் நிப்பாட்டிட்டான். இவரோட குடும்பமே நல்லா இருக்கணும்..’’ என்று வாழ்த்திய பெரியவர்கள்

‘‘தம்பி எத்தனையோ பஸ்ஸ நிப்பாட்டீ பாத்தோம். ஒருத்தரும் நிறுத்தல. ஆனா நீங்கபட்டுன்னு நிப்பாட்டிட்டீங்க. ரொம்ப நன்றிப்பா..’’ என்று ஒரு பெரியவர் சொல்ல

‘‘ஏங்க பஸ் ஸ்டாண்டுல போய் ஏறணுமுங்க நீங்க பேசாம ஓடுற ரோட்டுல நின்னு பாதையில கைகாட்டுனா நிப்பாட்டுவாங்களா..? என்ன..’’ என்று ஒருவர் எகிற

‘‘வயசான ஆளுகதானப்பா. நிப்பாட்டுனா கொறஞ்சா போயிருவீங்க..’’

‘‘நீங்க ரெண்டு பேரும் ரொம்ப பேசுறீங்க..’’ என்று ஒருவர் சொல்ல

‘‘விடுங்க வயசானஆளுகள ஏன் இப்பிடி..?’’ சிவா சொல்லிக்கொண்டே பேருந்தை இயக்கினான் .

மறுபடியும் ‘‘டிரிங்..டிரிங்’’ அவனின் செல்போன் சிணுங்கியது.

‘‘தம்பி ரொம்ப நேரமா போன் அடிச்சிட்டே இருக்கு என்னன்னு ஒரு வார்த்தை தான் கேளேன் ..’’என்ற ஒருவரிடம்

‘‘நீங்களே எடுத்து கேளுங்களேன் ..’’ என்ற சிவா செல்போனைக் கேட்டவரிடமே கொடுக்க

‘‘ஹலோ சொல்லுங்க..’’ என்று அவர் சொல்ல

‘‘சிவா… அப்பாவ ஒரு நல்ல மனுசன் ஆசுபத்திரிக்கு கூப்பிட்டுட்டு போயிட்டாருப்பா..! நீயும் வேலைக்கு போயிட்டியா..? கூப்பிட்டு போக யாரமில்ல. நம்ம வீட்டு வழியா போன ஒரு சார் நிப்பாட்டி ஏத்திட்டுப்போனார். அவங்க நல்லாயிருக்கணும்..’’ என்று சிவாவின் அம்மா சொல்ல

‘‘சரிம்மா அவர்கிட்டசொல்றேன்..’’ என்று போனைக்கட் செய்தான் பேசியவன். அப்போது தான் வேறொருவனிடம் பேசியது சிவாவின் அம்மாவுக்குத் தெரிந்தது. நடந்ததை அப்படியே சிவாவிடம் சொல்ல ஓரளவுக்கு அவனின் மனது ஆறுதலடைந்தது.

‘‘ஆமாப்பா. எந்த பஸ்ஸூம் நிப்பாட்டல. ஒரு நல்ல டிரைவர் தம்பி தான் ரோட்டுல பஸ்ஸ நிப்பாட்டுச்சு. ஆமா ஆசுபத்திரிக்கு தான் போயிட்டு இருக்கேன்..’’ என்று பெரியவர் போன்ல சொல்ல…..

சிவாவுக்கும் சிவாவின் அம்மாவிடம் போன் பேசியவருக்கும் என்னவோ போலானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *