சினிமா செய்திகள்

‘ஓடிடி’யில் வெளியாகும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’: திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு

சென்னை, ஆக. 24–

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை ‘ஓடிடி’ தளத்தில் வெளியிடுவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக திரையுலகம் முடங்கியுள்ள நிலையில், ‘பொன்மகள் வந்தாள்’, ‘பெண்குயின்’, ‘லாக்கப்’ உள்ளிட்ட படங்கள் ஏற்கெனவே ‘ஓடிடி’ தளத்தில் வெளியாகின. இந்நிலையில், சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் அதிக செலவில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது.

‘‘படைப்பாளிகள் உள்ளிட்டோரின் நலன் கருதி முடிவு எடுப்பது அவசியமாகிறது. பொதுமக்கள், திரையுலகினர், கொரோனா முன்களப் போராளிகளுக்கு இப்படத்தின் வெளியீட்டுத் தொகையில் இருந்து ரூ.5 கோடி பகிர்ந்தளிக்கப்படும்’’ என்று படத்தின் தயாரிப்பாளரான சூர்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில், படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேசுகையில், ‘‘ஓடிடி’ தளத்தில் இப்படத்தை வெளியிடுவது வேதனையாக இருக்கிறது. திரையரங்குகள் திறக்கப்படும்போது சில படங்கள் இருந்தால் தான் மக்கள் வருவார்கள். அனைத்து படங்களையும் ஓடிடியில் வெளியிட்டால் திரையரங்குகளை எப்படி திறப்பது? ஏற்கெனவே சில படங்கள் ஓடிடியில் வெளிவந்தபோது அதை எதிர்த்தோம். அப்போது சில தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றனர். ஆனால், அடுத்தடுத்து படங்கள் அதில் வெளியாகின்றன. படத்தை எங்கு வேண்டுமானாலும் வெளியிட அவர்களுக்கு எப்படி உரிமை இருக்கிறதோ, அதேபோல எங்கள் திரையரங்கில் என்ன படம் போட வேண்டும் என்ற உரிமை எங்களுக்கு இருக்கிறது’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *