சிறுகதை

ஓடாதே – ஒதுங்கு! (நஞ்சுகவுடா )

வாசலில் பச்சை நிற ஜீப் குலுங்கி நின்றது.
அதற்காகவே காத்திருந்த கண்ணப்பன் ஓடி சென்று முன் இருக்கையில் அமர்ந்தான்.
” போலாமா ” என்றார் வன ஆர்வலர் காசிநாதன்.
” போலாம்” என்றபடி தலையை ஆட்ட ஜீப் சீறிப் பாய்ந்தது.
ஜீப்பிற்கு , மேல் கூரை இல்லாமல் இருந்ததால், சூரிய ஒளியுடன் காற்றும் தாராளமாக வீசியது.
நெடுஞ்சாலையில் நுழைந்ததும் வேகத்தை கூட்டினார் காசிநாதன்.
சிறிது தூரம் சென்றதும் ஒரு வளைவில் வேகத்தை குறைத்து, ” தெரிகிறதே. … அதுதான் ரங்கசாமி பில்லர்…. இதன் மீதுதான் சில ஆண்டுகளுக்கு முன்பு விமானம் மோதி விபத்துக்குள்ளானது .” என்றார் காசிநாதன்.
“செங்குத்தான பாறையை நட்டு வைத்தது போன்று தெளிவாக தெரிகிறதே ” என்றான் கண்ணப்பன்.
ஜீப்பில் அமர்ந்தபடியே ஜூம் போட்ட கேமராவால், ‘ கிளிக் ‘ செய்தார் காசிநாதன்.
ஜீப் மேலும் நகர்ந்தது. சிறிது தூரம் சென்றதும் ” அதுதான் ரங்கசாமி மலை.. இந்த புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக் கிழமையும் காரமடை, சிறுமுகை, மேட்டுபாளையம் , அன்னூர் போன்ற சமவெளி பகுதிகளில் இருந்து லாரிகளில் திரளான பக்தர்கள் வருவார்கள் ”
” அப்படி என்றால் மலை மேல் என்ன கோயில் உள்ளது ? ”
” ரங்கநாதர் கோயில் ”
நெடுஞ்சாலையை விட்டு குறுகிய மலை பாதையில் ஜீப் நுழைந்ததும் , வேகம் குறைந்து அங்கும், இங்கும் அசைந்த படி சரிவில் நகர்ந்தது.
அடிவாரத்தில் பவானி, சத்தியமங்கலம் போன்ற சமவெளி பகுதிகள் தெரிந்தன.
இவைகளை ரசித்தபடியே வந்த கண்ணப்பன், திடீரென இருளில் நுழைந்தது போன்று , இரு புறமும் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த வனபகுதிக்குள் நுழைந்ததை உணர்ந்தான்.
இரண்டு பக்க மரங்களும் வளர்ந்து ஒன்றுடன் ஒன்று உராய்ந்து பிணைந்து கொண்டு இருப்பதால், சூரிய ஒளி கூட தரையில் படாமல் ஜில்லென்று இருப்பதை கண்ட கண்ணப்பன் முகத்தில் ஆச்சரியம் வெளிப்பட்டது.
சிறிது நேரத்தில், குக்கிராமம் ஒன்று தென்பட்டது.
திடீரென பறவைகளின் சத்தங்கள் !
இதை தொடர்ந்து, ஒரு பருவ பெண் ஓடி சென்று மரத்திற்கு பின்னால் ஒதுங்கியதை கண்ணப்பன் கவனித்தான்.
ஜீப் அந்த கிராமத்தை கடந்தது சென்றது.
” ஒரு பெண் பயந்து ஓடி ஒளிந்ததை கவனித்தாயா ? -கண்ணப்பன்.
” அவள்… பயந்து ஓடி ஒளிய வில்லை.. பறவைகளின் அலறல் கேட்டதும் , யானை போன்றவைகளின் வருகையாக இருக்குமோ என்று உஷாராகி ஒதுங்கினாள்.”
” அப்படியா விஷயம் ! ”
சற்று நேரத்தில் ஜீப்பை விட்டு இறங்கி மரத்தின் மீது இருந்த காட்டு அணிலை தனது கேமராவில் படம் பிடித்ததும் ஜீப்பில் ஏறி நகர்த்தினார்.
ஜில்லென்ற இதமான காற்றை அனுபவித்தபடி சென்ற கண்ணப்பனிடம், ” கரடி ரோட்டில் அசிங்கம் செய்து சென்றுள்ளதை பார் ” என்றார்.
ரோட்டின் நடுவே கரடியின் கழிவு.
” அது பழங்களை மட்டும் தான் உண்ணும்… மாமிச வகைகளை தொடாது…. அதனால் மனிதர்களை ஒன்றும் செய்யாது.. நாம் அதன் எதிரே திடீரென தோன்றினால் தன்னை தற்காத்து கொள்ளத்தான் பயத்தில் தாக்கும்..”.
” சுத்தமான சைவம் என்று சொல்லு ”
” ம்…”
ஜீப்பிற்கு முன்னால் சுமார் 200 அடி தூரத்தில் ஒரு பெண் தனியாக நடந்து சென்று கொண்டு இருந்தாள்.
அவளுக்கும் ஜீப்பிற்கும் இடைப்பட்ட சாலையில் காட்டு யானைகள் குறுக்கே ரோட்டில் வந்தன.
யானையை கடந்து சென்ற பெண் திரும்பி யானையை பார்த்ததும் பயத்தில் அலறியபடி ஓடினாள். அலறல் சத்தம் படிப்படியாக குறைந்தது. அந்த பெண்ணும் சாலை வளைவைத் தாண்டி மறைந்தாள்.
ஜீப்பை நிறுத்தி இவைகளை வேடிக்கை பார்த்து கண்டிருந்த காசிநாதன், ” யானைகள் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், அந்த பெண்தான் பயத்தில் அலறியடித்து ஓடுகிறாள் ” என்றார்.
யானைகள் ரோடு ஓர மரத் தழைகளை துதிக்கையால் எட்டி வளைத்துச் சுவைத்து கொண்டு இருந்தன.
” அடெ…. யானைகள் நமக்கு குறுக்கே வந்திடுச்சே ” சலித்து கொண்டான் கண்ணப்பன்.
” அவைகள் எங்கே குறுக்கே வந்தன ? அவைகள் அடிக்கடி செல்லும் வழித்தடமே இதுதான். அதோட பாதைக்கு குறுக்கே நாம்தான் வந்திருக்கோம்.. ” என்றார்.
ஒருவழியாக யானைகள் ஒவ்வொன்றாக காட்டுக்குள் நுழைந்தன.
ஜீப் நகர்ந்து முன்னேறி சென்றது.
சிறிது தூரத்தில், பயத்தில் ஓடிய பெண் கால் இடறி விழுந்ததில் காயமடைந்து உட்கார்ந்து இருந்தாள்.
அவள் அருகே ஜீப்பை நிறுத்தி அந்த பெண்ணையும் ஜீப்பில் ஏற்றினார்.
” யானைகள் ஒன்றும் செய்யவில்லையே எதற்காக அந்த ஓட்டம் ஓடி விழுந்து காயமடைய வேண்டும்” என்றார்.
” இல்லீங்கையா … யானையை பார்த்ததும் பயம் வந்துவிட்டது ” .
” புலியை விட கிலி கொடியது என்பார்கள். எந்த வன விலங்குகளும் நம்மை தேடி வந்து தாக்கியது கிடையாது. நமது நடவடிக்கைகளால் மிரண்டு தான் தாக்குகின்றன. ” என்றபடி ஆதிவாசி ஆஸ்பத்திரி அருகில் இறக்கி விட்டார்.
விலங்குகளிடமிருந்து பாதுகாப்புக்காக ஒதுங்கலாமே தவிர, ஓடக்கூடாது என்று கண்ணப்பணுக்கு புரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *