ஓசூர், டிச. 23–
ஓசூரில் யானைத் தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற 7 பேரை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 2 தந்தங்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனப்பகுதியில் மர்ம நபர்கள் யானைகளை வேட்டையாடி தந்தங்களை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தருமபுரி மண்டல வனப்பாதுகாவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஓசூர் வனக்கோட்ட உயிரின காப்பாளர் சுதாகர் உத்தரவிட்டதை தொடர்ந்து, வனச்சரகர் பார்த்தசாரதி மற்றும் வனப்பணியாளர்கள் இஎஸ்ஐ ரிங் ரோடு மத்தம் சர்க் பகுதியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது அதில் யானையின் தந்தங்கள் இருப்பது தெரியவந்தது.
7 பேர் கைது
இதனையடுத்து தந்தத்தை கொண்டு வந்த இருதுகோட்டை திப்பனூரை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 27), கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதியை சேர்ந்த மாரநாயக்கன் ஹள்ளியை சேர்ந்த விஜயகுமார் (வயது 25), ஊத்தங்கரை ஒந்தியம் புதூர் பகுதியை சேர்ந்த ஹரிபூபதி (வயது 39), நாராயணநகர் பகுதியை சேர்ந்த பரந்தாமன் (வயது 27), ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த தந்தத்தை பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் இதில் தொடர்புடைய அய்யூரை சேர்ந்த முனிராஜ் (வயது 29), தொளுவபெட்டா பழையூர் கிராமத்தை சேர்ந்த லிங்கப்பா (வயது 39), பசலிங்கப்பா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான பெட்டமுகிலாளம் போப்பனூரை சேர்ந்த பசப்பா மற்றும் ஜெயபுரத்தை சேர்ந்த மத்தூரிகா ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
இவர்களையும் பிடித்து விசாரணை செய்த பின்னரே யானை எங்கு வேட்டையாடப்பட்டது என தெரிய வரும். 7 பேரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் 2 யானைத் தந்தங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் பின்னர் 7 பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.