செய்திகள்

ஓசூரில் இளம்பெண் தொடர் ஓட்டம்

Spread the love

ஓசூர், ஜூலை 10-

மனிதநேயம், ஒற்றுமை, அமைதி மற்றும் சமத்துவம் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4035 கிமீ தூரம் ஒட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 100 நாட்களில் இந்த பயணத்தை முடித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ள இவர் இன்று கர்நாடகா மாநிலத்தை கடந்து தமிழகத்தை நோக்கி ஓசூர் வழியாக ஓடிச்சென்றார்.

ராஜஸ்தான் மாநிலம் அஸ்மீர் பகுதியை சேர்ந்தவர் சூபியா சூபி (33) இவர் ஏர் இந்தியா விமானத்தில் பணியாற்றி வந்தார். மனிதநேயம், ஒற்றுமை, அமைதி மற்றும் சமத்துவம் ஆகியவை குறித்து இவர் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4035 கிமீ தூரம் ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி இவர் காஷ்மீரில் தனது ஓட்ட பயணத்தை துவக்கினார். இந்த விழிப்புணர்வு ஓட்ட பயணத்தை 100 நாட்களில் முடிக்க திட்டமிட்டு உத்தரபிரதேசம், குஜராத், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக இன்று தமிழகத்திற்குள் நுழைந்துள்ளார்.

கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியை கடந்து தமிழக எல்லையான ஒசூர் வழியாக வந்த சூபியா தமிழகத்தில் ஓடி சென்றார். பொதுமக்களிடையே எதிர்மறையான எண்ணங்கள் அதிக அளவில் உள்ளது. பொதுமக்கள் இந்த எண்ணங்களை தவிர்க்க வேண்டியும், எனது நாடு அன்பை மட்டுமே விரும்பும் நாடு எனது நாட்டில் மனிதநேயம் இன்றும் உயிரோடு உள்ளது என உலகிற்கு உணர்தும் விதமாகவும், நம்நாட்டில் வாழும் பொதுமக்களிடையே மனிதநேயம், ஒற்றுமை, அமைதி மற்றும் சமத்துவம் ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த ஒட்டத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.

ஏர் இந்தியா விமானத்தில் பணியாற்றி வந்த சூபியா கடந்த 2017 ஆம் ஆண்டு ஆக்ரா முதல் டெல்லி வரை 720 கிமீ தூரத்தை 16 நாட்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்காக இவர் லிம்கா புக் ஆப் ரெகார்டு புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். தற்போது இந்த விழிப்புணர்வு சாதனையை மேற்கொள்ள இவர் பணியாற்றி வந்த ஏர் இந்தியா நிறுவனம் விடுப்பு வழங்காததால் வேலையை ராஜினாமா செய்து விட்டு தனது விழிப்புணர்வு பயணத்தை தொடர்ந்துள்ளார். இவருடைய விழிப்புணர்வை பாராட்டி செல்லும் வழிகளில் சமூக ஆர்வலர்கள் இவருக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *