சிறுகதை

ஓசிக் காலண்டர்! | சின்னஞ்சிறுகோபு

புது வருடம் பிறந்ததிலிருந்தே நம்ம ராமநாதனுக்கு புது காலண்டர் மோகம் பிறந்து விட்டது! ஆறாவது படிக்கும் அவனுக்கு யார் கூப்பிட்டு ஓசியில் காலண்டர் கொடுப்பார்கள்?

அவன் ஊருக்கு பக்கத்தில் அவன் பள்ளிக்கூடம் இருக்கும் சிறு டவுனில் ‘ஹோட்டல் வெங்கடேசபவன்’ என்ற ஒரு நடுத்தர ஹோட்டல் இருக்கிறது. அங்கே ஒவ்வொரு வருடமும் புது டிசைனில் படக்காலண்டரை அச்சிட்டு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கொடுப்பார்கள்.

அந்த ஹோட்டல் பக்கமாக சென்ற ராமநாதன், ஹோட்டல் முதலாளியை பார்த்து ஒரு காலண்டர் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தான்! ‘சும்மா போய் கேட்டால் கொடுக்க மாட்டார்கள், அங்கே போய் ஏதாவது சாப்பிட்டுவிட்டு, பிறகு கேட்டால் கொடுப்பார்கள்’ என்று அவன் நினைத்தான். அவனிடம் அன்று பணமும் கொஞ்சம் அதிகமிருந்தது!

அப்போது அந்த ஹோட்டலில் இருந்து நீண்ட பேப்பர் சுருளுடன் சிரித்தபடி, “இந்த 2021 ஆரம்பமே நல்லாதான் இருக்கு” என்று சொல்லியபடி ஒருவர் வெளியே வந்தார்!

‘அட, சாப்பிட்டு விட்டு காலண்டர் வாங்கிக் கொண்டு வருகிறாரே’ என்று ராமநாதன் ஆச்சரியத்துடன் அவர் அருகே சென்று, அவர் கையிலிருந்த காகித சுருளைக் காட்டி, “இதில் என்ன பிள்ளையார் படம் இருக்கா சார்?” என்றான்.

அவர் நம்ம ராமநாதனை வியப்புடன் மேலும் கீழுமாக பார்த்தபடி, “இல்லை!” என்றார்.

சட்டென்று அடுத்து, “முருகன் படமா?” என்றான் ராமநாதன்.

அவரோ வேகமாக தலையை ஆட்டியபடி “இல்லை!” என்றார்.

ராமநாதன் அடுத்த வினாடியே “அப்ப லெட்சுமியா?” என்றான் ஆவலுடன்!

அவரோ, “இல்லை தம்பி!” என்று ஏதோ சொல்ல வந்தார்.

அதற்குள் ராமநாதன் முந்திக்கொண்டு “எம்.ஜி.ஆர் படமா? ” என்றான்.

“இரு… இருடா தம்பி! என்னை முதலில் பேசவிடு! இது காலண்டர் இல்லை! பேப்பர் ரோஸ்ட்! இந்த ஹோட்டலில் பேப்பர் ரோஸ்ட் தோசையை சுருட்டி, இப்படி பேப்பரில் சுற்றிக் கொடுத்திருக்கிறார்கள்!” என்றபடி ராமநாதனை விநோதமாக பார்த்தபடி சென்றார்.

ராமநாதனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. ஆனாலும் சமாளித்துக்கொண்டு அந்த ஹோட்டலுக்குள் சென்றான். அவனை அந்த ஹோட்டலின் வாசனை சுண்டி இழுத்தது. அதோடு அவனுக்கு அப்போது பசிப்பது போலவும் இருந்தது!

ராமநாதன் அந்த ஹோட்டல் முதலாளியை பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு, அவருக்கு நேர் எதிரே இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்துக் கொண்டான்!

ராமநாதன் முதலில் இரண்டு இட்லிகளை சாப்பிட்டான். அப்போது மெதுவடையை பார்த்தான். அதையும் கேட்டு வாங்கி சாப்பிட்டான். ஆனாலும் இன்னும் பசிப்பது போலிருந்தது. உடனே ஒரு தோசையை கேட்டு சாப்பிட்டான். அதன்பிறகு அந்த ஹோட்டலிருந்த அல்வாவை பார்த்தான்.

அடுத்து தனது சட்டைப் பையை தடவிப் பார்த்துக்கொண்டான். அவ்வப்போது அவங்க அம்மா மளிகை சாமான்கள் வாங்க பணம் கொடுத்தபோதெல்லாம், அதிலிருந்து அவன் கமிஷன் அடித்த 120 ரூபாய் இருந்தது. சாப்பிட்டதுதான் சாப்பிட்டோம், ஒரு அல்வாவையும் சாப்பிட்டுவிட்டு, நல்லா சூடாக ஒரு காபியையும் குடித்து விடுவோம் என்று ஒரு சுவையான முடிவுக்கு வந்தான் அந்த சாப்பாட்டு ராம ( ன்) நாதன்!

தன்னிடமிருந்த பணத்தையும் அருகேயிருந்த விலைப்பட்டியலையும் தான் சாப்பிட்டத்தையும் கணக்கிட்டுப் பார்த்தான்!

இட்லி 2. 20. ரூபாய் மெதுவடை 1. 10. ரூபாய் சாதா தோசை 1. 40. ரூபாய் அல்வா 1. 25. ரூபாய் காபி 1. 25. ரூபாய்

ஆக மொத்தம் ரூபாய் 120 ரூபாய்.

ஆம். பில் 120 ரூபாய்க்கு வந்தது. ராமநாதனுக்கு கொஞ்சம் ‘திக்’ கென்றது. ‘இந்த 120 ரூபாய்க்கு காசு கொடுத்தே நாலைந்து காலண்டர் வாங்கியிருக்கலாமே, ஒரு ஓசிக் காலண்டருக்கு இவ்வளவு செலவா’ என்று சற்று திகைத்தான்!

பிறகு வேறு வழியில்லாமல் ஹோட்டல் முதலாளியிடம் பில்லுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, “எனக்கு ஒரு படக் காலண்டர் கொடுங்களேன்!” என்றான்.

அவன் நல்ல நேரம், அந்த ஹோட்டல் முதலாளியும் இல்லை என்று சொல்லாமல் சிரித்த முகத்துடன் ஒரு காலண்டரை எடுத்துக் கொடுத்தார்!

அந்த காலண்டரை பிரித்துப் பார்த்த ராமநாதன் திடுக்கிட்டுப் போனான்!

அந்த காலண்டரில் ‘ஒரு இலையில் இரண்டு இட்லிகள், கூடவே இரண்டு சிறு கின்னங்களில் சட்னி, சாம்பார் ,ஒரு தோசை, அருகருகே ஒரு மெதுவடை, அல்வா துண்டு ஆகியவற்றுடன் ஒரு டபரா டம்ளரில் காபியும் இருப்பதை போல’ ஒரு வண்ண புகைப்படத்தை பளிச்சென்று பெரிதாக அச்சிட்டிருந்தார்கள்! அதை அவர்களின் ஹோட்டலின் பெருமைக்காக, வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பதற்காக அப்படி அச்சிட்டிருந்தார்கள்!

ராமநாதன் பரிதாபமாக, “வேறு ஏதாவது முருகன், பிள்ளையார் படம் போட்ட காலண்டர் இல்லையா?” என்றான்.

“இல்லை தம்பி, இது நாங்க எங்க ஹோட்டலுக்காக சொந்தமாக டிசைன் செய்து வெளியிட்டிருக்கும் காலண்டர். எல்லா காலண்டரிலும் இதே படம்தான் இருக்கும்!” என்றார்.

அப்புறமென்ன, இப்போது நீங்கள் ராமநாதன் வீட்டுக்குப் போனாலும்,அவன் வீட்டு தெற்கு பக்க சுவரில் ஒரு ஆணியில் இந்த இட்லி, தோசை படம் போட்ட காலண்டர் மாட்டியிருப்பதை பார்க்கலாம்! அதோடு, ‘இனி எந்த காலத்திலும் ஓசிக் காலண்டருக்கு அலையமாட்டேன்’ என்று அவன் இந்த புத்தாண்டில் ஒரு சபதம் எடுத்திருப்பதாகவும் கேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *