முழு தகவல்

ஓஆர்எஸ் மூலம் 5 கோடி பேரை காப்பாற்றிய பத்ம விபூஷன் டாக்டர் திலீப் மஹாலானாபிஸ்!

திடீரென ஏற்படும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுத்து, ஆற்றலைத் தக்க வைத்துக்கொள்ள ஓ.ஆர்.எஸ் எனப்படும் உப்பு – சர்க்கரை கரைசல் பயன்படுகிறது. ஓ.ஆர்.எஸ்ஸை கண்டுபிடித்தவரும், அதன் தந்தை என அழைக்கப்படுபவருமான 88 வயதான மருத்துவர் திலீப் மஹாலானாபிஸ் (Dilip Mahalanabis) கொல்கத்தாவின் தனியார் மருத்துவமனையில் 3 மாதம் முன்பு காலமானார்.

திடீரென வாந்தியோ வயிற்றுப்போக்கோ ஏற்படும்போது நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள எளிய வழி… ஓ.ஆர்.எஸ் கரைசல் (Oral rehydration solutions – ORS). இதுதான் இருப்பதிலேயே மிகவும் எளிய மற்றும் செலவு குறைந்த மருந்து. அதனை கண்டுபிடித்தவர் பத்ம விபூஷன் டாக்டர் திலீப் மஹாலானாபிஸ்! குறைந்த செலவிலான ஓஆர்எஸ் கரைசல் கண்டுபிடிப்பு மூலம், உலகில் 5 கோடி பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய கண்டுபிடிப்பு

1971-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற விடுதலைப் போரின் போது, மேற்கு வங்காளம் பங்கானில் அகதிகள் முகாமில் இவர் பணியாற்றி வந்தார். அப்பகுதியில் வேகமாகக் காலரா பரவி மக்களை அச்சுறுத்தி வந்தது. அந்நேரம், ஓ.ஆர்.எஸ்ஸை கொடுத்து ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றி மருத்துவத்துறையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார் டாக்டர் திலீப்.

உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, வயிற்றுப்போக்கு மற்றும் காலரா போன்ற நோய்கள் பல வளரும் நாடுகளில் குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளின் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. “20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான மருத்துவக் கண்டுபிடிப்பு” என்று தி லான்செட் ஓஆர்எஸ்-ஐ அங்கீகரித்தது.

வயிற்றுப்போக்கு, காலரா மற்றும் நீரிழப்பு ஆகியவற்றால் ஏற்படும் இறப்புகளை 93 சதவிகிதம் குறைத்துள்ளது. ஆனாலும், தனது ஓஆர்எஸ் கண்டுபிடிப்புக்கு டாக்டர் திலீப் மஹாலானாபிஸ் காப்புரிமை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *