செய்திகள்

ஒவ்வொரு மாதமும் 2-வது வாரத்தில் அரசு பள்ளிகளில் ‘சிறார் திரைப்பட விழா’

தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஜூலை.6-

ஒவ்வொரு மாதமும் 2-வது வாரத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிறார் திரைப்பட விழாவை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கல்வி என்பது வெறுமனே ஏட்டுக்கல்வி மட்டுமல்ல. பாடப்புத்தகங்களை படிப்பதோடு சேர்த்து வெவ்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்வதும்தான். கலை, பண்பாடு சார்ந்து கற்பித்தலும், கற்றலும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியம்.

தொழில்முறை கலைஞர்களாகவும் பின்னாளில் வருவதற்கான வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு உருவாக்கித்தரும் நோக்கத்தோடு பல்வேறு கலைச் செயல்பாடுகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களுக்கென முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாதந்தோறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான திரையிடல் திட்டமொன்றை ‘சிறார் திரைப்பட விழா’ என்கிற பெயரில் வகுத்துள்ளது.

மாதத்தின் ஒவ்வொரு 2-வது வாரத்தில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும். திரைப்படங்கள் மாணவர்களுடைய சிந்தனையிலும், செயல்பாடுகளிலும் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. இக்காட்சி ஊடகத்தின் வாயிலாக இவ்வுலகத்தை புதிய பார்வையில் மாணவர்களைக் காண வைப்பதும் வாழ்வியல் நற்பண்புகளை மேம்படுத்துவதுமே இம்முயற்சியின் முக்கிய நோக்கம்.

திரையிடுதலுக்கு தேவையான உபகரணங்கள் பள்ளியில் இல்லாவிட்டால், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் வெளியிலிருந்து அவற்றை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். திரையிடுதலுக்கு முன்பாகவே பொறுப்பு ஆசிரியர் திரைப்படத்தை பார்த்துவிட்டு சிறார் திரைப்பட விழாவின் நோக்கங்கள் குறித்தும், திரையிடப்படும் படத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதன் கதை வெளிப்பட்டுவிடாமல் மாணவர்களிடம் ஓர் உரையாடல் நிகழ்த்தி படம் பார்ப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுவார்கள்.

திரைப்படம் முடிந்த பின்னர், அதுகுறித்த கலந்துரையாடல் நிகழ்வும், வினாடி–வினா நிகழ்வும் நடத்தப்படும். பின்னூட்டக் கேள்வித்தாள் வழங்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களின் கருத்துகள் அறியப்படும். ஒவ்வொரு மாதமும் திரையிடலுக்கு முன்பாக பொறுப்பு ஆசிரியர் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, ‘ஸ்பாட்லைட்’ நிகழ்வுக்கென தனியாக கேள்விகளை உருவாக்கலாம்.

ஒவ்வொரு மாதமும் திரையிடப்பட வேண்டிய திரைப்படத்திற்கான தகவல் பள்ளிகளுக்கு அனுப்பப்படும். பள்ளி அளவில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் மாணவர்கள் ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவிலும் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும். சிறார் திரைப்பட திருவிழாவின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி நிகழ்வு மாநில அளவில் ஒரு வாரத்திற்கு நடைபெறும். ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட நிகழ்வுகளில் பங்கேற்பர்.

கலைத்துறை சார்ந்த வல்லுனர்களோடு இம்மாணவர்களை கலந்துரையாடலில் பங்கேற்க செய்து, தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். மேலும், மாநில அளவில் பங்கேற்கும் மாணவர்களில் இருந்து 15 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலக சினிமா குறித்து மேலும் அறிந்துகொள்ளும் வகையில், வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவர். திரைப்படங்கள் குறித்த விமர்சன பார்வையை மாணவர்களிடையே வளர்க்க வேண்டும் என்பதே இத்திரையிடலின் நோக்கம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.