புதுடெல்லி, ஏப். 29–
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமராக இருப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார்.
மோடி கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனம் செய்து வருகிறார். அதாவது, இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு ஒரு பிரதமர் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருவதாகவும், அதன்படி ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒருவர் பிரதமராக இருப்பார். இவ்வாறு ஓராண்டுக்கு ஒரு பிரதமர் இருந்தால் உலகம் நம்மை பார்த்து ஏளனம் செய்யும். உங்களுக்கு ஓராண்டுக்கு ஒரு பிரதமர் தேவைதானா? என்று தொடர்ச்சியாக பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி விமர்சனம் செய்து பேசி வருகிறார்.
அதற்கு எதிர்வினையாற்றிய எதிர்க்கட்சிகள் சிலர், நாங்கள் ஓராண்டுக்கு ஒரு பிரதமர் கூட ஏற்றுக்கொள்வோம், ஆனால் நிச்சயமாக மோடியை பிரதமராக வர விடமாட்டோம் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்தியா கூட்டணி குறித்து, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அமித்ஷா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பிரதமராக இருப்பார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஓராண்டு பிரதமராக இருப்பார். ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சம் இருந்தால் ராகுல் பிரதமராக இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.