பிரிஜ் பூஷன் சிங் முகத்தில் விழுந்த அடி; பயிற்சியாளர் மகாவீர் சிங் விமர்சனம்
பாரீஸ், ஆக. 7–
பாரீஸ் ஒலிம்பிக்கில் 4 வது பதக்கத்தை இந்திய மல்யுத்த வீராங்கனை உறுதி செய்துள்ளார்.
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் 2024 ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 63 வது இடத்தில் உள்ளது. எனினும், தங்கமோ, வெள்ளியோ கைப்பற்றவில்லை. இந்நிலையில் இந்தியாவிற்கு வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யு சுசாகியுடன் மோதினார். ஜப்பான் வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினாலும், தொடர்ந்து போராடிய வினேஷ் போகத் 16-ஆவது சுற்றில் ஜப்பான் வீராங்கனையை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் வினேஷ் போகத் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
பதக்கம் உறுதி
இதன்மூலம் யு சுசாகியை தோற்கடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். தொடர்ந்து இதே எடைப்பிரிவில் காலிறுதி போட்டியில் உக்ரைனை சேர்ந்த ஒக்ஸானா லிவாச் என்பவரை எதிர்கொண்டார். இதில் 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். தொடர்ந்து அதிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மகளிர் மல்யுத்தத்தில் பதக்கம் உறுதியாகி உள்ளது.
இதற்கிடையில், வினேஷ் போகத் செய்த இந்த சாதனை பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் முகத்தில் அறைந்ததாக அவரது மாமாவும் குருவுமான மஹாவீர் சிங் போகட் கூறியுள்ளார். மஹாவீர் சிங் போகட் கூறுகையில், ‘வினேஷ் போகத், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனின் முகத்தில் அறைந்துள்ளார். எங்கள் மகள் செய்ததை பிரிஜ் பூஷன் சிங்கால் செய்யவே முடியாது. அவர் வினேஷுக்கு நிறைய தீங்கு விளைவித்துள்ளார். ஆனால் பொதுமக்கள் வினேஷுடன் உள்ளனர். என் கனவை என் மகள் நிறைவேற்றிவிட்டாள். கடவுள் வினேஷை மேலும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என் கூறினார்.