ஜானதிபதி, பிரதமர் வாழ்த்து
பாரீஸ், ஆக. 10–
33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமன் ஷெராவத், முன்னாள் உலக சாம்பியன் ரெய் ஹிகுச்சியை எதிர்கொண்டார்.இந்தப் போட்டியில் அமன் ஷெராவத் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.இறுதியில், அமன் ஷெராவத் 12–-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு அரையிறுதி போட்டி நடைபெற்றது.
அப்போது, ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராத் அரையிறுதியில் ஜப்பான் வீரரிடம் 10-–0 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தார். இதையடுத்து, அரையிறுதியில் தோல்வி அடைந்த அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தம் (ஆண்கள் 57 கிலோ எடைபிரிவு பிரீஸ்டைல்) போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத், பியூர்டோரிகோவின் டேரியன் கிரஸ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமன் செஹ்ராவத் 13–-5 என்ற புள்ளிக்கணக்கில் டேரியன் கிரஸை வீழ்த்தி வெண்கலப் பத்தக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக (1 வெள்ளி, 5 வெண்கலம்) உயர்ந்தது.
நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற மல்யுத்த அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு, அமன் ஷெராவத்தின் எடை 57 கிலோவில் இருந்து 61 புள்ளி 5 கிலோவாக அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வெந்நீரில் குளித்த அமன் ஷெராவத், நள்ளிரவு 12.30 மணிக்கு ஒரு மணிநேரம் டிரெட் மில்லில் தொடர்ச்சியாக ஓடியுள்ளார். அதன் பிறகு, அமன் ஷெராவத்தின் எடை 57 கிலோ 900 கிராமாக குறைந்துள்ளது. எடையை மேலும் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அமன் ஷெராவத், 5 முறை 15 நிமிட தொடர் ஓட்டம் மேற்கொண்டுள்ளார். இதனிடையே, எலுமிச்சை மற்றும் தேன் கலந்த வெந்நீர், சிறிது அளவு காபி குடித்த அமன் ஷெராவத், இரவு முழுவதும் தூங்காமல், மல்யுத்தம் தொடர்பான வீடியோக்களை பார்த்து வந்தார். இதன் விளைவாக, வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு அமன் ஷெராவத்தின் எடை 56 கிலோ 900 கிராமிற்கு குறைந்துள்ளது. 10 மணிநேரத்தில் 4 கிலோ 600 கிராம் எடை குறைத்த அமன் ஷெராவத், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். எடை அதிகரிப்பு காரணமாக மேலும் ஒரு பதக்கத்தை இந்தியா தவறி விடக்கூடாது என்ற முனைப்பில் அமன் ஷெராவத் மீது பயிற்சியாளர்கள் கூடுதல் கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி வாழ்த்து
இந்த நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இளம் மல்யுத்த வீரர்களில் ஒருவரான அவர், தனது முதல் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார்.எதிர்காலத்தில் அவர், இந்தியாவுக்காக பல பதக்கங்களையும் பாராட்டுக்களையும் வெல்வார். அவரது வெற்றியின் மூலம், மல்யுத்தத்தில் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் பாரம்பரியத்தை இந்தியா தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
மேலும், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு வாழ்த்துகள். அவருடைய அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் தெளிவாகத் தெரிகிறது. இந்த அற்புதமான சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது என்று தெரிவித்துள்ளார்.