செய்திகள்

ஒலிம்பிக் மல்யுத்தம்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் பஜ்ரங் புனியா

டோக்கியோ, ஆக. 6–

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு பதக்கங்களை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று காலை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிர்கிஸ்தான் அணி வீரர் எர்ணாஸரை வீழ்த்தி இந்தியாவின் பஜ்ரங் புனியா வெற்றி பெற்றுள்ளார்.

அதன்பின்னர் நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டத்தில், ஈரான் வீரர் மோர்டேசா காசாவை எதிர்த்து இந்திய வீரர் பஜ்ரங் புனியா களமிறங்கினார். ஆட்டத்தின் தொடக்கத்தில் காசா முன்னிலை வகித்த நிலையில் அதிரடியாக விளையாடிய பஜ்ரங் புனியா, காசாவை வீழ்த்தி காலிறுதியில் வெற்றி பெற்றார். அரையிறுதியில் அஜர்பைஜான் மல்யுத்த வீரர் ஹாஜி அலியேவ் என்பவரை எதிர்த்து போட்டியிடவுள்ளார்.

இந்தியாவின் பஜ்ரங் புனியாவுக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும். தனது முதல் போட்டியிலேயே அரையிறுதி வந்து சாதனை படைத்தது உள்ளார். 27 வயதான பஜ்ரங் புனியா, இரண்டு முறை உலக சாம்பியன் பதக்கம் வென்றுள்ளார். காமென்வெல்த் போட்டியில் தங்கமும் வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரையான பதக்கங்கள்

இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை வாங்கிய பதக்கங்கள்:–

* பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

* இன்று இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

* மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

* குத்துசண்டை போட்டியில் இந்தியாவுக்கு லவ்லீனா வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

* ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய ஆண்கள் அணி, இன்று நடைபெற்ற வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனி அணியை 5 -4 என்ற கணக்கில் வீழ்த்தி பதக்கம் வென்றுள்ளது. 1980 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவு போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்க வாய்ப்பை பெற்று தந்திருக்கிறார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *