செய்திகள்

ஒலிம்பிக் போட்டிகள்: இந்திய வீரர்கள் அடுத்தடுத்து சாதனை

ஈட்டி எறிதல், மல்யுத்த போட்டிகளில் அபாரம்

டோக்கியோ, ஆக.4–

டோக்கியோ ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ஒரே முயற்சியில் 86.65 மீட்டர் தூரம் அபாரமாக எறிந்து , இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டிகள் இன்று காலை நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இந்த போட்டியில், முதல் வாய்ப்பிலேயே, 86.65 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

தனது முதல் ஒலிம்பிக் தொடரிலேயே, சிறப்பாக விளையாடி இருக்கும் நீரஜ் சோப்ரா , இறுதி போட்டிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை தக்க வைத்துள்ளார். ஒலிம்பிக் தொடரில், இந்திய வீரர் ஒருவர் ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறை.

முன்னதாக, 2016 ம் ஆண்டு 20 வயதிற்குட்பட்டோருக்கான சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் ரெக்கார்டு படைத்தார். அதனை தொடர்ந்து, 2018ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய போட்டிகளில் தங்கம் வென்று அசத்தினார்.

அடுத்தடுத்து சாதனை

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற, 83.50 மீட்டர் தூரம் எறிந்து இருந்தால் போதுமானது. ஆனால், முதல் வாய்ப்பிலேயே 86.65 மீட்டர் தூரம் எறிந்து அசத்தலாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் இளம் வீரர் நீரஜ் சோப்ரா. இன்று நடைபெற்ற க்ரூப் ஏ தகுதிச்சுற்றுப் போட்டியில், நீர்ஜ் சோப்ரா முதல் இடத்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்த ஆடவர் போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். 86 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில், இந்திய வீரர் தீபக் புனியா, சீன வீரரை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளார்.

இதேபோல், 57 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா, பல்கெரிய வீரரை 14-4 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சொல்ல போனால் இன்று இந்தியாவுக்கு சிறப்பான நாள் என்று கூறலாம்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் இதுவரை, பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கமும் அவரைத் தொடர்ந்து மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்றும் சாதனை படைத்துள்ளார். இதேபோல் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் லவ்லீனா, அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி, இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *