நாடும் நடப்பும்

ஒலிம்பிக் சாதனைகள் தொடர ஆடுகளம் அமைப்போம்


ஆர். முத்துக்குமார்


ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து வெற்றி பெற்று பதக்கங்களுடன் ஊர் திரும்பும் வீரர்களை வாழ்த்திக் கொண்டாடும் போதெல்லாம் நம் நாட்டு ஜனத்தொகைக்கும் பெற்று வந்த பதக்க வீரர்களுக்கும் சதவிகித இடைவெளி பற்றிய சிந்தனை அனைவரையும் வாட்டுகிறது.

மனதிற்கு இதமாக பாராஒலிம்பிக் சாதனையாளர்கள் வெவ்வேறு போட்டிகளில் 19 பதக்கங்களைப் பெற்று வெற்றியுடன் திரும்பி யுள்ளார்கள்.

பெண்கள்‌ 10மீ ஏர்‌ ரைபிள்‌ போட்டியில் அவனி லேகாரா, ஆண்கள்‌ ஒற்றையர்‌ பேட்மிண்டனில் பிரமோத்‌ பகத்‌, ஆண்கள்‌ ஒற்றையர்‌ பூப்பந்தில் கிருஷ்ணா நாகர்‌-, ஆண்கள்‌ ஈட்டி எறிதலில்‌ சுமித்‌ ஆன்டில்‌,கலப்பு 50 மீ பிஸ்டலில் மணீஷ்‌ நர்வால்‌ ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

பெண்கள்‌ ஒற்றையர்‌ டேபிள்‌ டென்னிஸில் பவினாபென்‌ படேல்‌, கலப்பு 50 மீ பிஸ்டலில் சிங்ராஜ்‌, ஆண்கள்‌ வட்டு எறிதலில் யோகேஷ்‌ கதுனியா, ஆண்கள்‌ உயரம்‌ தாண்டுதலில் நிஷாத்‌ குமார்‌, மாரியப்பன்‌ தங்கவேலு, பிரவீன்‌ குமார்‌, ஆண்கள்‌ ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா, ஆண்கள்‌ ஒற்றையர்‌ பேட்மிண்டனில் சுஹாஸ்‌ யதிராஜ்‌ ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

பெண்கள்‌ 50மீ ரைபிளில் அவனி லேகாரா, ஆண்கள்‌ தனிநபர்‌ வில்வித்தையில் -ஹர்விந்தர்‌ சிங்‌, ஆண்கள்‌ உயரம்‌ தாண்டுதலில் ஷரத்‌ குமார்‌-, ஆண்கள்‌ ஈட்டி எறிதலில் சுந்தர்‌ சிங்‌ குர்ஜார்‌, ஆண்கள்‌ ஒற்றையர்‌ பாட்மிண்டனில் மனோஜ்‌ சர்கார்‌, ஆண்கள்‌ 10 மீ ஏர்‌ பிஸ்டலில் சிங் ராஜ்‌ -ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

இம்முறை தடகள போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவையும் இதர பதக்கம் வென்ற வீரர்களையும், இந்திய ஆண்கள் ஹாக்கி அணியையும் பாராட்டும்போது பெருமையாகத் தான் இருக்கிறது. இம்முறை பல கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்வந்து ரொக்கப் பரிசுகளையும் தந்து கவுரவித்துள்ளார்கள்.

முத்தாய்ப்பாய் நமது பிரதமர் மோடியும் வென்று வந்த வீரர்களுக்கு காலை டிபன், மீட்டிங் ஏற்பாடு செய்து அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்துள்ளார். வந்திருந்த வீரர்கள் அனைவரையும் தனது தோளில் போட்டிருந்த துண்டில் கையெழுத்து போடச் சொல்லி அதை அணிந்து மகிழ்ந்துள்ளார்.

விளையாட்டு வீரர்களுக்கு ரசிகர்களின் கையெழுத்து வேட்டை பழகிப்போன ஒன்று தான்! ஆனால் நாட்டின் பிரதமர் இப்படி விசேஷமாக தங்களது கையெழுத்தை வாங்கிக்கொண்டு, அதை தனது மேலாடையாக அணிந்து படம் எடுத்துக்கொண்டது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று என்பதில் சந்தேகமே கிடையாது.

நீரஜ் ஈட்டியை எறியும் அந்த மனதை விட்டு நீங்கா நிகழ்வு போட்டோவை அஞ்சல்தலையாக வெளியிட்டால் நல்லது.

மேலும் நமது விளையாட்டு அரங்கங்களில் நிரந்தர புகைப்பட கண்காட்சியாக தெரியும்படி அந்த காட்சியை பார்வைக்கும் வைத்தாக வேண்டும்.

உலகம் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடும் அது, அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்க தேவைப்படும் நல்ல மருந்தாகும்.

ஆனால் மயிரிழையில் பதக்கத்தை வெல்ல முடியாது கண்ணீர் விட்டபடி வெளியேறிய இதர வீரர்களையும் மறந்து விடக்கூடாது.

குறிப்பாக நமது மகளிர் ஹாக்கி அணி செய்த சாதனை பெருமைமிகு ஒன்றாகும். அவர்களையும் பொது மேடைகளில் பாராட்டி மகிழ்ந்தால் தானே அடுத்த தலைமுறை சிறுமிகள் ஊக்கம் பெற்று விளையாட்டுத் துறையில் சாதிக்க முன் வருவார்கள்.

துப்பாக்கி சுடுதலில், கத்திச்சண்டையில், வில்வித்தையில், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், குத்துச் சண்டையில், குதிரை ஏற்றத்தில் மற்றும் கோல்ப் விளையாட்டிலும் கூட நமது வீரர், வீராங்கனைகள் தங்களது திறமையை பிரமாதமாகவே வெளிப்படுத்தி உலக சாம்பியன்களையும் சற்றே கலக்கமடைய வைத்துவிட்டுத்தான் பதக்கச் சுற்றில் தோல்வி அடைந்துள்ளனர்.

இம்முறை கோட்டை விட்டுவிட்டாலும் அவர்களில் பலர் 2024ல் பாரீஸ் ஒலிம்பிக்கில் மிரள வைத்து பதக்கத்தை எட்டிப் பிடிக்க தயாராகிக் கொண்டு தான் இருப்பார்கள்.

ஆனால் குத்துச்சண்டை மேரி கோம், டென்னிஸ் சானியா மிர்சா, டேபிள் டென்னிஸ் சரத் போன்ற பலரும் வயது காரணமாக போட்டியிட முடியாமல் போகலாம்.

ஆனால் அவர்களது அனுபவம் நிச்சயம் அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு மிக அவசியம் தேவைப்படுகிறது.

ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷாவைப்போல் மாநில அரசுகளின் அழைப்பால் அந்த மாநிலத்தில் உள்ள நல்ல போட்டியாளர்களுக்கு மேம்பட்ட பயிற்சி தரும் குழுமத்தை வழி நடத்திச் செல்ல வைத்தால் நல்லது.

இன்று கிரிக்கெட்டில் நாம் தொடர்ந்து சாதித்து வர ஓர் முக்கிய அம்சம் மாநில அளவில் விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகள் ஆகும்.

மாநில அணிகள் மோத ரஞ்சிக் கோப்பை இருந்தது, இன்று அதிவேக டி20 போட்டிகள் மாநிலங்களில் உருவாகியுள்ள பல்வேறு அணிகளுக்கிடையே விளையாடப்பட்டும் வருகிறது.

பல ஆண்டுகளாகவே பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டிகள் மிக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டியாகும்.

இந்த வகையில் இதர விளையாட்டுகளுக்கான போட்டிகள் மாநில அளவில் அதிகம் கிடையாது. இனியாவது இந்நிலை மாற சிந்தித்தாக வேண்டும்.

மகளிர் ஹாக்கி அணி, கோல்ப் வீராங்கனை, டேபிள் டென்னிஸ் சரத், வில் வீரர்களின் போட்டிகளை குறும்படங்களாக உருவாக்கி வெற்றிபெற்ற பதக்க வீரர்களின் சிறப்பு வீடியோ காட்சிகளுடன் திரையிட தயாரிக்கப்பட வேண்டும்.

டிவி சேனல்களில் அவை ஒளிபரப்பப்பட்டால் அது எல்லா தரப்பு குடும்பங்களிலும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும்! தோற்றவர்கள் பற்றி தெரிந்து கொண்டால் நாமும் இவர்களைப் போல் நன்கு விளையாடினால் பதக்கம் கிடைக்கிறதோ இல்லையோ சர்வதேச அரங்கில் ஜொலிக்கலாம் என்ற நம்பிக்கை தரும்!

மத்திய மாநில அரசுகள் பெரும் பணம் செலவழித்து தான் புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் என்பது ஒரு புறம் இருந்தாலும் பலரை ஆடுகளத்தில் விளையாட களமிறங்கிட வைத்துவிட்டால் பல புதிய வீரர்கள் உருவாகும் வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *