பிரதமர் மோடி வாழ்த்து
பாரீஸ், ஆக. 9–
ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளி பதக்கத்தை வென்றிருக்கிறார். அவருக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தொடர் சாதனைகளை புரிந்து வருகிறது. குறிப்பாக ஈட்டி எறிதலில் கடந்த முறை தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இந்த முறை வெள்ளி வென்றிருக்கிறார். இப்போட்டியின் தொடக்கத்தில், தகுதிச் சுற்றில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றிருந்தார். முதல் வாய்ப்பிலேயே அதிக தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா முன்னேறினார். தகுதிச் சுற்றில் 84 மீட்டர் தூர இலக்கு உள்ள நிலையில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா அசத்தினார். எனவே இந்த முறையும் தங்கம் கன்பார்ம் என்று நம்பிக்கை இருந்தது.
ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், செக் குடியரசு வீரர் யாகூப் வட்லெஜ்ச், ஜெர்மனியின் ஜூலியன் வெபர், கிரனேடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒவ்வொரு வீரருக்கும் ஆறு முயற்சிகள் வழங்கப்பட்டன. அதன் படி இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது முயற்சியில் எல்லைக் கோட்டை தாண்டி சென்றதால் அவருக்கு சிவப்புக் கொடி காட்டப்பட்டது. எனினும் தனது இரண்டாவது முயற்சியில் 89.45 மீட்டர் தூரம் எறிந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
அடுத்தபடியாக இறங்கிய பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தனது முதல் முயற்சியில் எல்லைக் கோட்டை தாண்டியதாக் சிவப்புக் கொடி காட்டப்பட்டார். ஆனால் இரண்டாவது முயற்சியில் ஒலிம்பிக்கில் யாரும் இதுவரை தொடாத 92.97மீ எறிந்து சாதனை படைத்தார். இதுவரை ஈட்டி எறிதலில் அதிகபட்ச தூரம் 90.57 மீட்டர் ஆகும். தற்போது அதனை அர்ஷத் முறியடித்துள்ளார்.
ஜெர்மனியின் ஜூலியன் வெபர், கென்யாவின் ஜூலியஸ் யேகோ, செக் குடியரசின் யாகூப் வட்லெஜ்ச் என யாராலும் அர்ஷத் மற்றும் நீரஜ் சோப்ராவின் தூரத்தை நெருங்க இயலாத நிலையில், ஆறாவது சுற்றில் மீண்டும் 90 மீட்டருக்கு மேல் எறிந்தார் அர்ஷத். இதன் மூலம் பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 88.54 மீ வீசிய கிரனேடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் வெண்கலம் வென்றார்.நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதையடுத்து, ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள கந்த்ரா கிராமத்தில் உள்ள நீரஜ் சோப்ராவின் வீட்டில் இருந்தவர்கள் கொண்டாடத் தொடங்கினர். நீரஜ் சோப்ரா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
வெள்ளிப்பதக்கம் வென்ற பிறகு பேசிய நீரஜ் சோப்ரா, நாட்டிற்காக எப்போதெல்லாம் பதக்கம் வெல்கிறோமோ அப்போதெல்லாம் மகிழ்ச்சியாக உணர்வோம். நான் எனது சிறந்த திறனை வெளிப்படுத்தினேன். இன்று போட்டி நன்றாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு தடகள வீரர்களுக்கும் அவர்களுக்கான நாள் இருக்கும். இன்று அர்ஷத் நதீமின் நாள். எனது சிறந்த திறனை வெளிப்படுத்தினேன். ஆனால் சில விஷயங்களை கவனத்தில் கொண்டு அதை மேம்படுத்த வேண்டும். நமது தேசிய கீதம் ஒன்று ஒலிபரப்பப்படாமல் இருந்திருக்கலாம், ஆனால், எதிர்காலத்தில் நிச்சயம் வேறு எங்காவது ஒலிபரப்பப்படும் என்று கூறினார்.
பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பதிவில், “நீரஜ் சோப்ரா சிறந்த ஆளுமை! மீண்டும் மீண்டும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மீண்டும் ஒலிம்பிக்கில் அவர் வென்றிருப்பதால் இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். வரவிருக்கும் எண்ணற்ற தடகள வீரர்கள் அவர்களின் கனவுகளை நனவாக்கவும், நமது தேசத்தை பெருமைப்படுத்தவும் அவர் தொடர்ந்து ஊக்குவிப்பார்” என்று கூறியுள்ளார்.
அதேபோல பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024ல் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் அற்புதமான சாதனையை நிகழ்த்தி வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உருவகம்தான் அவர். இந்த வெற்றி ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இது குறித்து கூறுகையில், “நீரஜ், நீங்கள் ஒரு அற்புதமான விளையாட்டு வீரர். பாரிஸ் ஒலிம்பிக்ஸில் சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள். இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தி உள்ளீர்கள்” என்று கூறியுள்ளார்.
தாய் பெருமிதம்
நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நீரஜ் சோப்ராவின் அம்மா சரோஜ் தேவி, மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார். வெள்ளி பதக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிய அவர், தங்கப் பதக்கம் வென்றவரும் (அர்ஷத் நதீம்) என் மகன்தான். அந்த வெற்றிக்குப் பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.கடந்து வந்த பாதை
நீரஜ் சோப்ரா, ஹரியானாவின் பானிபட்டில் உள்ள கந்த்ரா கிராமத்தில் பிறந்தவர். விவசாயத்தை அடிப்படையாக கொண்ட குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். 13 வயதில் இருந்தே ஈட்டி எறிதல் போட்டிகளுக்காக பயிற்சி பெற்று வருகிறார் நீரஜ் சோப்ரா. உடல் எடை தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்வதற்காகவும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் இந்த விளையாட்டை தேர்வு செய்தார் அவர் என்று ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதன்முறையாக பானிபட்டில் உள்ளா சிவாஜி மைதானத்தில் ஈட்டி எறிதல் போட்டியை பார்த்து உத்வேகம் அடைந்தார் அவர். இந்திய ஈட்டி எறியும் வீரரான ஜெய்வீர் சவுத்ரி, நீரஜிடம் இருந்த திறமையை பார்த்து வியந்து போனார். பிறகு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தேவையான பயிற்சிகளையும் வழி காட்டுதல்களையும் வழங்கினார் ஜெய்வீர் சவுத்ரி. அதன் பின்னர் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற துவங்கினார் நீரஜ்.
தங்கப் பதக்கம்
வென்று சாதனை
2016ம் ஆண்டு போலாந்து நாட்டில் நடைபெற்ற 20 வயதினருக்கான ஐ.ஏ.ஏ.எஃப். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 86.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்தார் நீரஜ். இந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படாத ஒன்றாக உள்ளது. அதன் பின்னர் 2017ம் ஆண்டு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றார். பிறகு 2018ம் ஆண்டு கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளிலும், 2018ம் ஆண்டு ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளிலும் தங்கம் வென்று புதிய சாதனை படைத்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த அவர், 2022ம் ஆண்டு ஓரிகானில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். 2023ம் ஆண்டு புதாபெஸ்ட்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்று அசத்தினார். அதே ஆண்டு ஹாங்க்ஜூவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் தங்கம் வென்றார்.
துப்பாக்கி சுடும் வீரரான அபினவ் பிந்திராவை தொடர்ந்து தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா ஆவார். 120 ஆண்டு கால வரலாற்றில், ட்ராக்-அண்ட்-பீல்ட் (track-and-field) பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் டோக்கியோ ஒலிம்பிக்கில் படைத்தவர் நீரஜ் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கில்
பல பதக்கங்கள்
பாரிஸில் வெள்ளி வென்றதன் மூலம், நீரஜ் சோப்ரா இப்போது ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை வென்ற 5வது இந்தியர் ஆவார். அவர் பிரிட்சார்ட், மல்யுத்த வீரர் சுஷில் குமார் (வெண்கலம் 2008, வெள்ளி 2012), ஷட்லர் பி.வி.சிந்து (வெள்ளி 2016, வெண்கலம் 2020) மற்றும் துப்பாக்கி சுடுதல் மனு பாக்கர் (2 வெண்கலப் பதக்கங்கள் 2024) ஆகியோருடன் இணைகிறார் .நீரஜ் சோப்ரா தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 4வது பதக்கத்தையும் வழங்கினார்.தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு இது மூன்றாவது வெள்ளிப் பதக்கம்.