செய்திகள்

ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது

Makkal Kural Official

ஜனாதிபதி, பிரதமர், தலைவர்கள் வாழ்த்து

பாரிஸ், ஆக. 9–

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 2–-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில் இந்திய அணி 3-–2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் போராடி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, நேற்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஸ்பெயினை இந்திய அணி எதிர்கொண்டது. முதல் கால் பகுதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை. இரு தரப்புக்கும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு முதல் பாதியின் 2 நிமிடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை அவர்கள் கோலாக மாற்றத் தவறினர்.

18-வது நிமிடத்தில் தனது கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை பயன்படுத்தி ஸ்பெயின் கேப்டன் மார்க் மிரல்லஸ் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து இரண்டாவது கால் பகுதி முடியும்போது, 30-ஆவது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீதீ சிங் முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் 1-–1 என்ற நிலையில் இரு அணிகளும் சமனநிலையில் இருந்தன.

33-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் மற்றொரு கோலை அடித்து 2-–1 என்ற கணக்கில் இந்திய அணியை முன்னிலை பெற வைத்தார். இதையடுத்து ஸ்பெயின் அணி வீரர்கள் கோல் அடிக்க போராடினார். அதனை இந்திய வீரர்கள் சாமர்த்தியமாக தடுக்க இறுதியில் 2–-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

52 ஆண்டுகளுக்குப் பிறகு

இதற்கு முன் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. 1972-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கோல் கீப்பர்

ஸ்ரீஜேஷ் ஓய்வு

4-வது முறையாக ஒலிம்பிக்கில் தடம் பதித்த 36 வயது கோல் கீப்பரான ஸ்ரீஜேஷ் இந்த ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதனால் அவருக்கு இதுவே கடைசி சர்வதேச போட்டியாகும். அவர் தனது ஆட்டத்தை என்றும் நினைவு கூறும் வகையில் தித்திப்பாக நிறைவு செய்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜேஷ் 18 ஆண்டுகளில் 336 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்ததும் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட ஸ்ரீஜேஷ் கோல் கம்பத்தின் அருகே தரையில் விழுந்து தனது கையுறையை வணங்கினார். அதன் பிறகு கோல் கம்பத்தின் மீது ஏறி அமர்ந்து அனைவரையும் நோக்கி கையசைத்து விடைபெற்றார். இந்த வெற்றியை அவருக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அவரை தனது தோளில் சுமந்தபடி மைதானத்தில் உற்சாகமாக வலம் வந்தார். நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவின் 4-வது பதக்கம் இதுவாகும்.

ஜனாதிபதி

ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு இதயபூர்வமான வாழ்த்துகள். 5 தசாப்தங்களுக்குப் பிறகு அடுத்தடுத்து இரண்டு வெண்கல பதக்கங்களை வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இந்திய அணிக்கு வாழ்த்துகள். அணியின் நிலைத்தன்மையும், திறமையும், ஒற்றுமையும், போராடும் குணமும் நமது இளைஞர்களை ஊக்குவிக்கும்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர்

பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தலைமுறைகள் போற்றும் சாதனை இது. இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பிரகாசமாக ஜொலித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. ஒலிம்பிக்கில் தொடர்ச்சியான இரண்டாவது பதக்கம் என்பதால் இது மிகவும் ஸ்பெஷலானது. திறமை, விடாமுயற்சி மற்றும் குழுவின் உழைப்பால் சாத்தியமான வெற்றி இது. சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் ஹாக்கியுடன் எமோஷனலான தொடர்பை கொண்டுள்ளனர். இந்த சாதனை நம் நாட்டு இளைஞர்களிடையே ஹாக்கியை மேலும் பிரபலமாக்கும்” என தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் “என்ன ஓர் அற்புதமான ஆட்டம். ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற நமது ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். உங்களின் ஆற்றல் நிரம்பிய செயல்திறன் மற்றும் குறை சொல்ல முடியாத விளையாட்டுத் திறன் ஆகியவை விளையாட்டின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது. உங்கள் சாதனை நாட்டை பெருமைப்படுத்தியுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், “அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது பெருமை அளிக்கிறது. நன்றி ஸ்ரீஜேஷ்… உங்களின் இடைவிடாத உன்னதமான அர்ப்பணிப்பு எங்களை ஊக்கப்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

இந்தியா இதுவரை பாரிஸ் ஒலிம்பிக்கில் மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளது கவனிக்கத்தக்கது. இந்திய வீராங்கனை மனு பாகர் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவு மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி என இரண்டிலும் வெண்கலம் வென்றார். அவரைத் தொடர்ந்து ஆடவர் 50 மீட்டர் (3P) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே (Swapnil Kusale) வெண்கலப் பதக்கம் வென்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *