சிறுகதை

ஒற்றைச் செருப்பு….

சிறுகதை  ராஜா செல்லமுத்து

ஒன்றைப் பிரிந்தால் இன்னொன்று உயிர்வாழாது அதுவே உயிர் ஒப்பந்தம்…

இடைவெளியே இல்லாமல்…..

ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் தார்ச்சாலையில் அனாதையாய்க் கிடந்தது ஓர் ஒற்றைச் செருப்பு.

சர்சர்ரென விரையும் வாகனங்களின் சக்கரங்களில் அடிபட்டு அடிபட்டு அது கிடந்த இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளியே சென்று கொண்டிருந்தது.

நொடி நேரம் கூட அதற்கு ஓய்வில்லை.

சக்கரங்களில் பட்டுப்பட்டு அது சின்னாபின்னாமாகிக் கொண்டிருந்தது.

பேருந்து வரும் திசையை நோக்கியே பார்த்துக் கொண்டிருந்த என் பார்வை தார்ச்சாலைக்குச் சென்ற போது தான் அந்தச் செருப்பின் அவலம் என் கண்களில் பட்டது.

முதலில் சாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருந்த என் பார்வை அந்த ஒற்றைச் செருப்பையே கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தது.

வேகமாக விரையும் வாகனங்களின் சக்கரங்களின் அடிப்பட்டு அடிபட்டு மேலும் கொஞ்சம் தள்ளிச் சென்றது.

ஆகா இது யாரோட செருப்பா இருக்கும்? உற்றுப் பார்த்ததில் அது ஒரு ஆணின் ஒற்றைச் செருப்பு என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.

இந்தச் செருப்பு தாங்கிய பாதம் யாருடையது?

ஏழையா? பணக்காரனா?

நல்லவனா கெட்டவனா? கிழவனா? இளைஞனா–? என்ற ஆராய்ச்சியில் இறங்கியது என் மனம்.

அதையே கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தேன். ச்சகரங்களில் பட்டுப்பட்டு அது கொஞ்சங்கொஞ்சமாய் இடம் நகர்ந்து கொண்டே இருந்தது. அதன் மேல் சக்கரங்களை ஏற்றுபவன் எவனுக்கும் அதைப் பற்றியான சிந்தனை கொஞ்சம் கூட இல்லவே இல்லை.

அந்தச் செருப்பு பற்றி ஒருவருக்கு கூட உரைக்கவில்லை.

சர்சர்ரென அதை ஏற்றுக் கொண்டே சென்றார்கள்.

இந்தச் செருப்பை எவனவன் இங்கு விட்டுச் சென்றது. ஒரு செருப்பு இங்கே கிடக்கிறது. இன்னொன்று எங்கே கிடக்கும்.

ஒன்று தவறிப் போனால் இன்னொன்றும் உயிர்வாழ முடியாதே ஒன்றைத்தவற விட்டவன் இன்னொன்றையும் இங்கேயே விட்டுட்டு போயிருக்கலாமே காந்திகூட ஒரு முறை அப்படிச் செய்தார் என்று படித்திருக்கிறேன். ஆனா ஒன்ன விட்டுட்டு இன்னொன்ன வச்சிட்டு என்ன பண்ணப்போறான்? இங்க ஒரு செருப்பு இப்படி அனாதையா கெடக்கிறது. அவனுக்கு இஷ்டமா? அடப்பாவி. ஒரு ஜோடிசெருப்ப இப்படி அனாதையாக்கிப் புட்டயே என்ற ஆதங்கம் தான் அந்தச் செருப்பைத் தொலைத்தவன் மேல் எனக்கு வந்தது.

வைத்தகண் வாங்காமல் அந்தச் செருப்பையே பார்த்துக்கொண்டிருந்தேன். அது சக்கரங்களில் படும் அடியை என்னால் தாங்க முடியவில்லை. அப்படிப் பார்த்துக் கொண்டிருந்ததில் நான் இரண்டு மூன்று பேருந்துகளைத் தவறவிட்டிருப்பது எனக்குத் தெளிவாகவே தெரிந்தது.

டங்டங்…. என்ற அடிபடப்பட அதன் ஜோடியைத் தேடின என் கண்கள் இன்னொன்னு எங்க கெடக்கும். தொலை தூரம் வரை தேடியது. என் கண்கள் கண்களுக்கு அகப்படும் தொலைவு வரை அது தென்படவே இல்லை. ஒரு வேளை அந்தச் செருப்பு இதே போல ரோட்டில் கிடந்து அடிப்பட்டுக் கிடக்குமோ என் எண்ணப் பறவைகள் எங்கெங்கோ சென்று மீண்டும் தார்ச் சாலையில் அடிப்பட்டுக்கிடக்கும் ஒற்றைச் செருப்பிடமே திரும்பி வந்தது.

இது சாதாரண செருப்பு தான் ஆனா மனித வாழ்க்கைக்கு எவ்வளவு பெரிய வாழ்க்கைக்கு எவ்வளவு பெரிய உண்மைய விதைச்சு விட்டுட்டு போயிருக்கு. ஒரு செருப்ப பிரிஞ்சா இன்னொரு செருப்பு பிரியாதோ?

ஒரு ஜோடிய மாத்திட்டு இதுல இன்னொரு ஜோடிச் செருப்புல இன்னொன்ன சேத்தாலும் சேத்தாலும் அது சரியா வராது. அந்த நம்பர விட்டு இன்னொரு நம்பரும் சேராது இது எவ்வளவு பெரிய வாழ்க்கைத் தத்துவம் என்ற சிந்தனையில் இருந்த போது என் தோளை யாரோ தொட என்ன பிரதர் யோசனையா இருக்கீங்க? என்று என் முன்னால் வந்தார் பேருந்து நண்பர் .

ஒண்ணுல்ல ரோட்டுல கெடக்குற அந்தச் செருப்பு பாத்தீங்களா?

எங்க? எங்க-? என்று தேடினார். அங்க பாருங்க என்று அதன் இடத்தை அடித்துச் சுட்டிக் காட்டிய போது

அந்தா அங்க கெடக்கே ஒரு ஒத்த செருப்பு அதுவா? என்றார்.

ரொம்ப சாதாரணமாக ஆமா அதே தான்.

ம்

அத பாத்ததும் உங்களுக்கு ஏதாவது தோணுதா? என்றேன்.

நீண்ட பெருமூச்சை விட்டவர்…

ம்ம் எனக்கு அப்படி எதுவும் தோனலையே என்றார்.

ஓ.கோ நீங்க எங்க வேலை பாக்குறீங்க?

ஒரு கம்பெனியில கிரியேட்டிவ் ஹெட்

என்ன ஹெட் ?

கிரியேட்டிவ் ஹெட்

ம் ….எவ்வளவு சம்பளம்-?

ஒரு லகரம் வரும்

ஒரு லகரம் வாங்கிட்டு பஸ்ல வாரீங்களே?

பாஸ் பஸ்ல போறதில ஒரு சுகம் இருக்கு என்றார் .

ஒருமாதிரியாக சரி உண்மையிலயே அந்தச் செருப்ப பாத்திட்டு உங்களுக்கு எதுவும் தோனலையா?

இல்ல பாஸ் என்று சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னார்.

நீங்க வேலைபாக்குற இடமும் அப்படித்தானிருக்கும் . உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டேன்.

பாஸ் பஸ் வந்திருச்சு போகலாமா? என்றார்.

ஓ. போகலாமே இருவரும் பேருந்தில் ஏறினோம்.

பேருந்தில் ஒருவர் அன்றைய நாளிதழைப் படித்துக் கொண்டிருந்தார். அதில் ஏகப்பட்ட கள்ளத் தொடர்பு செய்திகள் மனைவியை விட்டு கணவன் ஓட்டம். கணவனை விட்டு மனைவி ஓட்டம். முறையற்ற காதல் என எத்தனையோ சாக்கடைச் செய்திகள் அதில் இருந்தன.

அட இது தான் மனுச வாழ்க்கை.

பெண் நாய் சினையுற்றால் ஆண் நாய் அதைச் சீண்டாது .

தன் ஜோடியைப் பிரிந்தால் புறா உயிர் வாழாது. வேறு ஜோடியும் சேராது.

துணையைத் துறந்தால் மான் இறந்து போகும் என்று படித்திருக்கோமே .

ஆனால் இந்த மனித இனம் மட்டும் தான் இவ்வளவு கீழ்த்தரமான செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்த வாறே பயணப்பட்டுக் கொண்டிருந்தேன்.

அட…. அங்க பாத்த ஒற்றைச் செருப்போட ஜோடி ஒண்ணு இங்க கெடக்குதே ஜோடியப் பிரிஞ்சு உயிர்வாழ முடியாம தனியா அடிப்பட்டுக் கெடக்கிற சாதாரண இந்தச் செருப்பு நமக்கு எவ்வளவு உயரிய குடும்ப உறவைப் புரியவைக்குது.

யாராவது ரெண்டையும் ஒண்ணா சேர்ப்பாங்களா? என்று நினைத்தக் கொண்டிருந்த போது….

கிரியேட்டிவ் ஹெட் ஹியர் போனில் யாரிடமோ எதையோ பேசிக் கொண்டிருந்தார்.

உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்ட நான் …..

கண்ணிலிருந்து மறையும் வரை தார்ச்சாலையில் கிடக்கும் …..

அந்த ஒற்றைச் செருப்பைப் பார்த்துக் கொண்டே பயணப்பட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *