செய்திகள்

ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம்; கற்றைக் குச்சிகளை முறிப்பது கடினம்

ஒன்றிணைவோம்: தொண்டர்களை தோல்விக்கு பழக்குவது பாவம் எனவும் ஓபிஎஸ் அழைப்பு

சென்னை, ஜூன் 6–

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில், ஒன்றிணைவோம், தொண்டர்களை தோல்விக்கு பழக்குவது பாவம் என கூறி, அதிமுகவினர் ஒன்றிணைய ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிமுகவினருக்கு நேற்று சசிகலா அழைப்பு விடுத்துள்ள நிலையில் இன்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளாரான ஓபிஎஸ் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கூறி இருப்பதாவது:–

“எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒற்றுமையால் மீட்டெடுக்க அறைகூவல்” என்ற தலைப்புடன் மேலும் கூறும்போது,

தோல்விக்கு பழக்குவது பாவம்

“ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்.” இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். “தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே” என்னும் கழக நிறுவனர், புரட்சித் தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம்.

நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சரியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். நம் அம்மா உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்”, என அறிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *