டி எம் எஸ் நூற்றாண்டு விழா குதூகல கொண்டாட்டம்
சென்னை, ஆகஸ்ட் 7–
‘அமரர்’ டிஎம்எஸ்–ன்( டிஎம் சௌந்தரராஜன்) நூற்றாண்டு விழா கொண்டாட்ட திரை இசை விருந்தை அப்பாஸ் கல்ச்சுரல்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி கார்த்தி, தியாகராய நகர், வாணி மகாலில் சிறப்பாக நடத்தினார். உலக கின்னஸ் சாதனையாளர் உதய ராகம் யூகே முரளி குழுவினரின் இசையில் டிஎம் சௌந்தரராஜனின் வாரிசுகள் பால்ராஜ்- – செல்வகுமார் இருவரும் அப்பாவின் பிரபல பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்கள்.
இவர்களோடு பிரபல பாடகர் முகேஷ், ஜானகி, கங்கா, “வாவ் ”கார்த்திக், ‘யூடியூப்’ புகழ் மாஸ்டர் சூரிய நாராயணன், க்ருசாங், சப்னா சௌந்தர்ராஜன் ஆகியோரும் பாடி ரசிக்க வைத்தார்கள்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் ஒய் ஜி மகேந்திரன்,“ யார் அந்த நிலவு…” பாடலை பின்னணியில் விசில் அடித்து பாடினார். அடுத்து மாஸ்டர் ரித்விக், 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த “அம்பிகாபதி படத்தில் (சிவாஜி கணேசன் -பானுமதி ஜோடி, இசை: ஜி ராமநாதன், இயக்கம்: ப. நீலகண்டன்) இடம் பெற்ற “சிந்தனை செய் மனமே…. செய்தால் தீவினை அகன்றிடுமே…” பாடலைப் பாடி தனி வரவேற்பை பெற்றார்.
அப்பாடலின் போது, ஒய். ஜி. மகேந்திரன் தபேலா வாசித்து பெருத்த கைதட்டலைப் பெற்றார். ஒய். ஜி. மகேந்திரனின் பேரன், ஒய். ஜி. மதுவந்தியின் மகன் ரித்விக் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து மேடை ஏறினார் ஒய்.ஜி. மதுவந்தி. இவர் எல். ஆர். ஈஸ்வரியின் பரம ரசிகை. அதனாலேயே முகேஷ் உடன் சேர்ந்து “முத்துக் குளிக்க வாரீகளா …முத்தெடுக்க வாரீகளா…?” (1967ல் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “அனுபவி ராஜா அனுபவி” படத்தில் இடம்பெற்ற பாடல், நாகேஷ் – மனோரமா ஜோடி, பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரபலமான பாடல்) பாடலைப் பாடினார்.
எல். ஆர். ஈஸ்வரி அந்தப் பாடலை எப்படி ஏற்ற இறக்கத்தோடு அனுபவித்து பாடி இருப்பாரோ… அதே பாணியில் மதுவந்தி தன் கழுத்தை மட்டும் தனியாக அசைத்து கையை உயர்த்திப் பிடித்து பாடி முடித்த போது (காது கம்மல் ஜிமிக்கியும் உடன் ஆடியது தனி அழகு) பலத்த கைதட்டல் எழுந்தது.
ஒய் ஜி பார்த்தசாரதி தம்பதி, அடுத்து ஒய். ஜி. மகேந்திரா, அதற்கடுத்து ஒய். ஜி. மதுவந்தி, இப்போது ரித்விக்… நாலாவது தலைமுறை கலை உலகில் கால் பதித்து இருப்பது பெருமைக்குரியது.
தமிழ் சினிமாவின்
பொற்காலம்…
‘‘50 ஆண்டுகளுக்கு முன்னால் டி எம் எஸ் இன் அமரத்துவம் பெற்ற பாடல்களை இன்றைய தலைமுறையினர் ரித்விக், சூரிய நாராயணன், க்ருசாங் ஆகியோர் பாடுவதுதான்… எம்ஜிஆர், சிவாஜி, மெல்லிசை மன்னர்கள் எம். எஸ். விஸ்வநாதன் –- ராமமூர்த்தி, மற்றும் கவியரசு கண்ணதாசன் கூட்டணியின் தனிச்சிறப்பு. உண்மையில் சொல்லப் போனால் இவர்களின் காலம்தான் தமிழ் சினிமாவின் பொற்காலம். அந்தக் காலத்தில் அத்தகைய வரலாற்று சாதனையாளர்களோடு நாமும் வாழ்ந்தும் என்பது தான் நமக்கெல்லாம் இருக்கும் தனிப் பெருமை, மகிழ்ச்சி, குதூகலம், கொண்டாட்டம்…’’ என்று அனுபவம் பேசினார் ஒய் ஜி மகேந்திரன்.
இசைக்கவி ரமணன்
டி. எம். எஸ். புகழ் பாடும் கவிதையை எழுதி அதை தன் வசீகர கம்பீரக் குரலில், உணர்ச்சித் ததும்பும் உச்சரிப்பில் வாசித்து, அன்பு பரிசாக டிஎம்எஸ் புதல்வர்கள் இருவருக்கும் தனித்தனியாக வழங்கி புகழஞ்சலி செலுத்தினார் இசைக்கவி ரமணன். மகாகவி பாரதியாராகவே மேடையில் வாழ்ந்தவர். கவியரசு கண்ணதாசன் பாடல்களின் அருமையயை – பெருமையை – கவிஞரின் திறமையை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளியின் ஆதரவோடு வாராவாரம் எடுத்துச் சொல்லி வரும் பாடும் வானம்பாடி இவர்.