செய்திகள் வர்த்தகம்

ஒரே மாதத்தில் 15 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னை, மே.30–

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டி, பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 95.51க்கும் டீசல் ரூ.89.65க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் எண்ணெய் விலைக்கு ஏற்ப நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று மத்திய பாஜக அரசு அனுமதி அளித்தது. அதன்படி பெட்ரோல், டீசல் விலை மே மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தான், மராட்டியம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையச் செய்தது.

பெட்ரோல் 100 ரூபாய்

மராட்டிய மாநிலம் தானே நகரில் 100 ரூபாயைக் கடந்த பெட்ரோல், மும்பையில் 99.94 ரூபாய்க்கு விற்பனையானது. டீசல் விலையும் கணிசமாக அதிகரித்தது. சென்னையிலும் பெட்ரோல் விலை ஏறக் கூடும் எனக் கூறப்பட்ட நிலையில், கொரோனா பேரிடர் காலத்தில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருவதைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென பலரும் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டி, பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 95.51க்கும் டீசல் ரூ.89.65க்கும் விற்பனையாகிறது. தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்தே விலையேற்றம் செய்யப்பட்டிருக்கும் பெட்ரோல், இந்த மாதத்தில் மட்டுமே தொடர்ந்து 15 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *