செய்திகள்

ஒரே நேரத்தில் 2 வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பெண் டாக்டர்

அசாம், ஜூலை 21–

அசாம் மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னும் ஆல்பா மற்றும் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அசாம் மாநில பெண் மருத்துவர் ஒருவருக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். ஆனாலும் அந்த மருத்துவருக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் திப்ருகரில் உள்ள பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், இவர் அல்பா மற்றும் டெல்டா வகை என இரண்டு வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இவர் இரண்டு வகை வைரஸாலும் பாதிக்கப்பட்டிருந்தாலும், இவருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருந்துள்ளது. எனவே இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் வீட்டிலிருந்தபடியே குணமடைந்துள்ளார்.

2–வகை கொரோனா எப்படி?

இது குறித்து, ஆர்.எம்.ஆர்.சி.யின் மூத்த விஞ்ஞானி கூறுகையில், இரண்டு வகை வைரஸ் ஒரே நேரத்தில் அல்லது மிகக் குறுகிய காலத்திற்குள் ஒரு நபரை பாதிக்கும்போது இரட்டை தொற்று ஏற்படுகிறது. இது பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து ஏற்படுகிறது.

ஆனால் நோய்த்தொற்றின் இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் மற்றும் ஆன்டிபாடிகள் உருவாவதற்கு முன்பு, மற்றொரு தொற்று பாதித்த நபரிடமிருந்து வேறு வகை கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம். இதனால் தான் இருவகை கொரோனா வைரஸும் அந்த பெண் மருத்துவரின் உடலில் இருந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *