மூர்த்தி தனது கல்யாணத்திற்கு மேடை மற்றும் எல்லா அலங்கார ஏற்பாடுகளையும் முகுந்தனிடம் ஒப்படைக்க எண்ணி அவரை வரவழைத்தார்.
சமீப காலமாக நல்ல திறமையாக முகுந்தன் செயல்படுவதை அறிந்து அவரிடம் கொடுக்க முடிவு செய்தார் மூர்த்தி.
அலங்கார அமைப்பில் அம்சமாக செய்து வருபவர்களை திணற அடிப்பவர் என்று கூறக் கேட்டு தானும் மிக விமரிசையாக கொண்டாட முடிவு செய்து முகுந்தனிடம் பொறுப்பைக் கொடுத்தார்.
முகுந்தன் மூர்த்தியிடம் சார் நீங்கள் நன்றாக செலவு செய்ய முடிவு செய்திருந்தால் மிகவும் அமர்க்களமாக செய்து விடலாம். சில வல்லுனர்களை பங்கேற்க வைக்க வேண்டுமெனக் கூற, செலவைப் பற்றிக் கவலைப் படாதீர்கள் என்றார் மூர்த்தி. முகுந்தன் சார் நீங்கள் மண்டபம் அலங்காரம் செய்பவர்கள் விலையை ஒப்பிட முடியாது நான் செய்யப் போகும் வேலை என்றும் அதிகப் பணம் தான் தேவைப்படும். ஒரு மினி படம் தான் பார்க்கப் போகின்றீர்கள் என்றார். மூர்த்திக்கு ஆவல் அதிகமானது. என்னப்பா பணம். மண்டபம் வந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் பேச வேண்டும் என்றார். முகுந்தன் மண்டபத்தைக் காண வேண்டமெனக் கூறியவுடன். மூர்த்தி ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.
முகுந்தன் மண்டபத்தைப் பார்த்தவுடன் மூர்த்தியிடம் மண்டபம் ஒரு நாள் முன்னதாக நாங்கள்ஏற்பாடு செய்யத் தருவார்களா என்றதும் மூர்த்தி இந்த மண்டபம் எனது நண்பனுடையது தான்.வாங்கித் தருகிறேன் என்றார். முகுந்தன் சார்கல்யாணம் முடிந்ததும் தான் எவ்வளவு தொகை என்று கூற முடியும் என்றார். நீங்கள் முன்பணமாக நான் கேட்கும் தொகையைத் தாருங்கள். இந்த ஒப்பந்தத்தில் நாம் இருவரும் கையொப்பம் இட்டு ஒரு அசல் என்னிடமும், நகல் உங்களுக்கும் தரப்படும் என்றார். சரியாக இருபது நாட்கள் முன்னால் பணம் தந்தால் போதும். தூள் கிளப்பி விடுவோம் என்றார்.
அன்று முன்பணம் வாங்க வந்த முகுந்தன் மூர்த்தியிடம் சார் பொருட்கள் கொண்டு வந்து எடுத்துச் செல்லும் வண்டி வாடகை மற்றும் கூலி தனியாக தந்து விடுங்கள் என்றார். மூர்த்தி இதோடு சரியா இன்னும் ஏதாவது என்றதற்கு முகுந்தன் சிரிப்பை உதிர்த்தார்.
யானை வாங்க வேண்டுமென முடிவு எடுத்தாச்சு, அங்குசத்திற்கு காசைப் பார்க்கலாமா என்ற சொலவடை தான் மூர்த்திக்கு நினைவு வந்தது.
மூர்த்தியின் தந்தை என்னப்பா முன்பணமே இவ்வளவு கேட்கிறாரே என்றதற்கு மூர்த்தி நீங்கள் தானே அதிவிமரிசையாக நடத்த ஆசைப்பட்டீர்கள். பின் பணத்தைப் பார்க்கலாமா என்றதும் அவர் புதுவிதமாக இருக்க வேண்டும் என மறுபடியும் கூறினார்.
முகுந்தன் தனது குழாக்களுடன் ஆலோசித்து தற்போதுள்ள தொழிற்நுட்பத்தின் மூலம் யாருமே இது வரை நினைத்தப் பார்க்காத அளவிற்கு பண்ண ஆயத்தமானார்கள். முகுந்தன் அந்த மண்டபத்திற்குச் சென்று சில வேலைகள் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் செய்ய உத்தரவைப் பெற்றார். மண்டபத்து உரிமையாளர் மண்டபம் நீங்கள் குறித்த தேதிக்கு முதல் நாள் காலியாகத் தான் இருக்கும். நீங்கள் ஏற்பாட்டை முதல் நாளிலேயே துவங்கலாம் என்றதும் முகுந்தன் மகிழ்வுடன் சரியெனச் சொன்னார்.
திருமண விழாவிற்கு முதல் நாள் காலை முகுந்தன் ஆட்கள் வந்து எந்தத் தொந்தரவும் இல்லாமலும் இடையூறு இல்லாமலும் வேலையை கச்சிதமாக முடித்தார்கள். சரியாக இயங்குகிறதா என ஒத்திகை பார்த்ததும் முகுந்தன் மற்றும் இரண்டு பேர்கள் அனுமதி பெற்று அங்கேயே தங்கி விட்டார்கள். மண்டபத்திற்கு சரியாக மதியம் 12 மணிக்கு மணப்பெண் வீட்டாரும் மதியம் 3 மணிக்கு மணமகன் வீட்டாரும் வந்து சேர்ந்தார்கள்.
மாலை நான்கு மணிக்கு முகுந்தன் மணமகன் மற்றும் மணப்பெண்ணிடம் சில விவரங்களைக் கூறி அதன் படி நடக்க பணித்தார். தான் செய்துள்ள ஏற்பாடுகளை மணமகன் மற்றுமுள்ளவர்களிடம் விவரித்தார். சாயங்காலம் தான் நீங்கள் அழகுற காண முடியும் என்றார்.
மாலை 5.30 மணிக்கே மண்டபத்திற்கு ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். மண்டபம் முகப்பில் மின் விளக்குகளால் மணமகன் மற்றும் மணமகள் படங்கள் சுழற்சி முறையில் வரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. திருமண நாளை மணமகன் மற்றும் மணப்பெண் அறிவிப்பது போன்ற அமைப்பிலும், இருவரும் வருபவரை அழைப்பது போலவும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்படிருந்தது. அதிலும் அவர்கள் மேடையில் தோன்றப் போகும் உடையில் அது அமைக்கப்பட்டிருந்தது. சில தொழில்நுட்பம் மூலம் வருபவர்களுக்கு மண்டபம் நுழைந்தவுடன் மணமக்கள் பன்னீர் தெளிப்பது போன்றும் அங்கு ஒரு நறுமண வாசனை வருமாறும் ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
உள்ளே நுழைபவர்கள் பக்கத்தில் உள்ள திரையில் அவர்கள் அமர எங்கே காலியான இருக்கை உள்ளதென அறியும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் ஒரு மணி நேர அளவில் மண்டபத்தில் எவ்வளவு பேர்உள்ளார்கள் என்ற புள்ளி விவரம் சில மணித் துளிகள் திரையின் கீழே வந்து போகும் வண்ணம் அமைப்பை செய்திருந்தார்கள். வாசலிலிருந்து மேடை வரை செயற்கை வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. நீங்கள் பூக்கள் அருகில் சென்றால் அது விரிந்து ஒரு நறுமணத்தை தெளிக்கும்படி அமைத்திருந்தார்கள். ஹாலில் வலது புறம் மணமகன் அணியும் உடையின் நிறமும் இடது புறம் மணமகள் அணியும் உடையின் நிறமுமாக ஜொலிக்கும் வண்ணம் வடிவமைத்தார்கள். வயதானவர்கள், சிறுவர்கள் அமர தனி வரிசை ஏற்பாடு செய்திருந்தார்கள். மேடையில் சிறப்பு அலங்காரத்தில் வண்ண நிறங்கள் ஹாலில் வலது இடது என்பது மேடையில் இடது வலது என மாறியிருக்கும்படி செய்திருந்தார்கள். நிற வேறுபாடு புகைப்படம் எடுக்கையில் எடுப்பாக இருக்கத்தான் என முகுந்தன் கூறினார். தங்கும் அறைகளில் இருந்தே கீழே நடக்கும் நிகழ்வை காணும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அறைகளிலும் அலங்காரம் செய்யப்பட்டு ஒரு நறுமணம் வலம் வரும் வகையில் செய்திருந்தார்கள். நறுமணங்கள் அதிக அளவில் இல்லாதவாறு பார்த்துப் பார்த்து செய்திருந்தார்கள். நறுமணம் அறைக்கு அறை மாறுபட்டதாக அமைத்திருந்தார்கள். நறுமணம் பிடிக்கவில்லையெனில் அங்குள்ள ஒரு தொடு திரையில் வேண்டிய நறுமணத்தைத் தொட்டு பெறும் வகையில் அமைத்திருந்தார்கள்.
ஹாலில் இரண்டு தற்காலிக அறையில் சில ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். நல்ல விலை உயர்ந்த புடவை மற்றும் நகைகள் அணிய முடியவில்லையே என ஏக்கம் கொண்டவர்கள், அங்குள்ள தொடு திரை முன் நின்றால், அதில் வரும் தங்களது புகைப்படத்தை அலங்காரம் செய்ய அவர்களுக்குப் பிடித்த வண்ண நிறங்கள், நகைகள் இவற்றைத் தொட்டால் வெளியில் திரையில் அவர்கள் அதை அணிந்தது தோன்றும் தோற்றம் சில மணித்துளிகள் வந்து செல்லும். அதை புகைப்படம் எடுத்து அனுபவிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்திருந்தார்கள். சிறுவர்கள் கார்ட்டுனில் வரும் பொம்மை போன்று தங்களை புகைப்படத்தில் மாற்றிக் கொள்ளும் வண்ணம் தொடுதிரை அமைத்திருந்தார்கள்.
மணமக்கள் மேடையில் ஏறியதும் அவர்கள் ஆடையில் உள்ள செயற்கை பூக்கள் நன்கு விரிந்து பூத்து ஒரு ஒலியை எழுப்பி நறுமணத்தை தெளிக்கும் வகையில் செய்திருந்தார்கள். திரையில் நன்கு அனுபவிக்கும் வகையில் அமைத்திருந்தார்கள். இவைகள் அனைத்தும் கிளர்கதிர் ஒளிமின் தொழிற்நுட்பம் மூலம் ஏற்பாடானது,
மேடைக்குச் செல்பவர்கள் சிரமமின்றி செல்ல, வயதானவர்களுக்கு தனி வரிசை,அலவலக நண்பர்களுக்கு தனி வரிசை, உறவினர்களுக்கு தனி வரிசை எனப் பிரித்து எல்லோரும் அதிக நேரம் நிற்கா வண்ணம் செய்திருந்தார்கள். மேடையில் மணமக்களை வாழ்த்துபவர்கள் கூறும் ஒலியோசை ஹாலில் கேட்கும்படி செய்திருந்தார்கள். மேடையில் மணமகன் மற்றும் மணமகள் பக்கத்தில் பெட்டிகள் வைத்திருந்தார்கள். அதில் வருபவர்கள் தாங்களாகவே அளிக்கும் அன்பளிப்பை செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டருந்தது. அதே போன்று மணமகன் மற்றும் மணமகளுக்கு கூகுள் பே செய்ய விரும்பினால் இரண்டு பேர் நின்று அங்குள்ள இயந்திரத்தில் அவர்கள் செலுத்த உதவி செய்யும் வகையில் ஏற்பாடு ஆகியிருந்தது.
சாப்பாட்டு அறை முன்பு இருந்த திரையில் உள்ளே எவ்வளவு பேர் அமர்ந்துள்ளார்கள். அவ்வப்போது காலியாகும் இருக்கை விவரம் வந்த வண்ணம் இருக்குமாறு அமையப் பெற்றிருந்தது. கூட்டமாக வெளியில் நிற்காமல் அங்கு நிறைய இருக்கைகள் போட்டு அமரும் வண்ணம் செய்திருந்தார்கள். வயதானவர்களுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . இங்கும் ஒரு மணி நேர அளவில் திரையில் கீழே எவ்வளவு பேர் வந்தார்கள் என்ற புள்ளிவிவரம் வருமாறு செய்திருந்தார்கள்.
வந்தவர்கள் மிகவும் ஆச்சிரியமுடன் அனுபவித்து பாராட்டி விட்டுச் சென்றார்கள். இது போன்று நாங்கள் அனுபவித்ததில்லை என்றார்கள். மறு நாள் மங்கல நாண் ஏறும் போது மேடையில் தேவர்கள், பறவைகள், மிருகங்கள் வடிவில் பூக்கள் தூவும் வண்ணம் அமைத்து பிரமாதமாக்கியிருந்தார்கள். எல்லா நிகழ்வும் முடிந்ததும் மூர்த்தி மட்டுமல்ல அனைவரும் வந்து ஏற்பாட்டை புகழ்ந்து தள்ளினார்கள்.
முகுந்தனுக்கு அவர் கேட்ட பணத்தை தந்த மூர்த்தி மானசீகமாக நன்றி சொன்னதோடு நாளை வீட்டிற்கு வரும்படி சொன்னார். மறு நாள் வீட்டிற்கு வந்த முகுந்தனிடம் இரண்டு மூன்று செய்தித்தாளில் அவர் செய்த செயற்கை நுண்ணறிவு கொண்ட அலங்காரம் பற்றி செய்தி வந்ததைக் காட்ட முகுந்தனுக்கு பெருமையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் ஒரே நிகழ்வில் இத்தனைப் பத்திரிக்கை செய்தியா என்று நினைத்த நேரத்தில், அடுத்தடுத்து முகுந்தனது கைப்பேசியில் வந்தவர்கள் எங்கள் வீட்டு விழாவிற்கு நீங்கள் தான் செய்ய வேண்டுமென கூறினார்கள். மூர்த்தி முகுந்தனைப் பார்த்து, இனிமேல் ஏற்றம் தான் என்றார். அப்போது அங்கு வந்த மூர்த்தி கம்பெனி மேலதிகாரி முகுந்தனை நாம் நம் கம்பெனியில் சேர்த்து இந்த அலங்கார வேலைகளை நம் கம்பெனி மூலம் முகுந்தனை கொண்டு பெரிய அளவில் செய்தால் என்ன என்றார்,
மேலும் முகுந்தனுக்கு நல்ல சம்பளம் மற்றும் அவர் கேட்கும் வசதிகள் பண்ணித் தந்து விடலாம் என்றதும் மூர்த்தி முகுந்தனைப் பார்க்க, முகுந்தன் மனதிற்குள் நம்மை விலை பேசுகிறாரே என்று எண்ணினார், ஏற்கனவே ஒரு தடவை இவரிடம் ஒரு விழா அலங்காரத்திற்கு கேட்டபோது கத்துக் குட்டிக்கெல்லாம் இங்கு வேலையில்லை என்று சொன்னவர் தானே இவர் என்று நினைவு கூர்ந்து, யோசனை செய்கிறேன் என்றார், மூர்த்தி, முகுந்தனை சம்மதிக்க வைப்பது உன் கையில் என்று கூறி முகுந்தன் முதுகில் ஒரு தட்டு தட்டி விட்டு நகர்ந்தார்மேலதிகாரி, மூர்த்தி இரு தலைக் கொள்ளி எறும்பானார்.