செய்திகள்

ஒரே நாளில் 33,675 பரிசோதனை: 3645 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக உயர்வு

ஒரே நாளில் 33,675 பரிசோதனை:

3645 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகம் முழுவதும் 41 ஆயிரத்து 357 பேர் டிஸ்சார்ஜ்

 

சென்னை, ஜூன்.27-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,645 பேரை கொரோனா தாக்கியது. பாதிப்பு எண்ணிக்கை 74 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 3 ஆயிரத்து 523 பேர், வெளிநாடுகளில் இருந்து வந்த 26 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 96 பேர் என மொத்தம் 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 2 ஆயிரத்து 211 ஆண்களும், 1,434 பெண்களுக்கும் அடங்குவர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 152 குழந்தைகளும் இடம் பெற்றுள்ளனர். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 74 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 31 பேர் அரசு மருத்துவமனையிலும், 15 பேர் தனியார் மருத்துவமனையிலும் என 46 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதில் 44 பேர் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பிடியில் சிக்கியதால் உயிரிழந்து உள்ளனர். 2 பேர் கொரோனா தாக்குதலில் சிக்கி இறந்து உள்ளனர். சென்னையில் 37 பேர், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 3 பேர், மதுரையில் 2 பேர், விருதுநகரில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 730 பேர் இறந்துள்ளனர்.

சென்னையில் 28 ஆயிரத்து 823 பேர் உட்பட தமிழகம் முழுவதும் இதுவரை 41 ஆயிரத்து 357 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து நேற்று 1,358 மீண்டனர். சிகிச்சையில் 32 ஆயிரத்து 305 பேர் உள்ளனர்.

நேற்று 36 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதில் சென்னையில் 1,956 பேரும், செங்கல்பட்டில் 232 பேரும், மதுரையில் 194 பேரும், திருவள்ளூரில் 177 பேரும், வேலூரில் 149 பேரும், சேலத்தில் 111 பேரும், காஞ்சீபுரத்தில் 90 பேரும், ராமநாதபுரத்தில் 72 பேரும், திருவண்ணாமலையில் 70 பேரும், கள்ளக்குறிச்சியில் 58 பேரும், ராணிப்பேட்டையில் 53 பேரும், கோவையில் 43 பேரும், தேனியில் 40 பேரும், தூத்துக்குடியில் 37 பேரும், விருதுநகரில் 33 பேரும், திருச்சியில் 32 பேரும், கன்னியாகுமரியில் 28 பேரும், தஞ்சாவூரில் 25 பேரும், நெல்லையில் 19 பேரும், திருவாரூரில் 18 பேரும், விழுப்புரம், நாகப்பட்டினம், கடலூரில் தலா 17 பேரும், திருப்பூர், கிருஷ்ணகிரியில் தலா 14 பேரும், தென்காசியில் 12 பேரும், புதுக்கோட்டையில் 10 பேரும், நீலகிரி, சிவகங்கையில் தலா 7 பேரும், தர்மபுரி, ஈரோடு, நாமக்கலில் தலா 6 பேரும், அரியலூர், திருப்பத்தூரில் தலா 4 பேரும், திண்டுக்கல், கரூரில் தலா இருவரும் அடங்குவர்.

தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 3 ஆயிரத்து 633 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 350 பேரும், வெளிமாநிலத்தில் இருந்து விமானம் மூலம் வந்த 258 பேரும், ரெயில் மூலம் வந்த 402 பேரும், சாலை மார்க்கமாக வந்த 1,985 பேரும், கடல் மார்க்கமாக வந்த 14 பேர் என மொத்தம் 3 ஆயிரத்து 9 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 33 ஆயிரத்து 675 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 10 லட்சத்து 42 ஆயிரத்து 649 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 49,690 பேரும், செங்கல்பட்டில் 4,651 பேரும், திருவள்ளூரில் 3,277 பேரும், காஞ்சிபுரத்தில் 1,580 பேரும், திருவண்ணாமலையில் 1,498 பேரும், மதுரையில் 1,477 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26.5.20 முதல் நேற்று வரை விமானம் மூலம் 76,660 பயணிகள் தமிழகம் வந்தனர். இதில் பரிசோதனை மேற்கொண்டதில் 258 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதவிர சர்வதேச விமான நிலையத்தில் 9.5.20 முதல் இதுவரை 16,342 பேர் தமிழகம் வந்தனர். இதில் 350 பேருக்கு கொரோனா இருந்தது.

14.5.20 முதல் ரெயில் மூலம் 16,666 பேர் வந்ததில் 402 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 19.5.20 முதல் சாலை மார்க்கமாக சொந்த வாகனங்களில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 449 பேர் வந்தனர். பஸ்களில் 39,480 பேர் வந்தனர். இவர்களில் 1985 பேருக்கும், கப்பல் மூலம் வந்த 1763 பேரில் 14 பேருக்கும் கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்த்தில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 360 பேர் வந்ததில், 3 ஆயிரம் பேருக்கு கொரோனா இருந்தது.

25–ந் தேதி வரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி விமான நிலையங்களுக்கு 1134 விமானங்கள் வந்தன. இதில் 76,660 உள்நாட்டு பயணிகள் வந்தனர். இதில் 258 பேருக்கு பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. சென்னைக்கு மட்டும் 842 வாகனங்களில் 51 ஆயிரத்து 221 பயணிகள் வந்தனர். இதில் 116 பேருக்கு கொரோனா இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *