செய்திகள்

ஒரே நாளில் 28½ லட்சம் பேருக்கு தடுப்பூசி: தமிழக அரசு புதிய சாதனை

சென்னை, செப்.13-

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு நேற்று புதிய சாதனை படைத்தது. ஒரே நாளில் 28½ லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கொரோனா பரவலை தடுப்பதற்கு ஒரே வழி கொரோனா தடுப்பூசி என்பதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் போலியோ சொட்டு மருத்து போடும் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்காக தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கு 29 லட்சம் தடுப்பூசி பகிர்ந்து வழங்கப்பட்டது. சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்க தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மேற்கொண்டனர்.

தமிழகத்தில் நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியது. மதியம் 1.20 மணி நிலவரப்படி 11.06 லட்சம் பேருக்கும், மாலை 3.15 மணி நிலவரப்படி 17.04 லட்சம் பேருக்கும், மாலை 6 மணி நிலவரப்படி 23 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

நேற்று இரவு 7 மணிக்கு இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் முடிவுக்கு வந்தன.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம் மூலம் 28 லட்சத்து 36 ஆயிரத்து 776 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 21 லட்சத்து 7 ஆயிரத்து 309 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 7 லட்சத்து 29 ஆயிரத்து 467 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 370 பேரும், கோவையில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 685 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

தடுப்பூசி போடுவதில் தமிழக அரசு சாதனை படைத்து இருப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் சிறப்பு முகாம்களுக்கு வந்ததே காரணம் ஆகும்.

ஸ்டாலின் வாழ்த்து

சிறப்பு தடுப்பூசி முகாமையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவை தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. ஒரே நாளில் 28 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்திய சாதனை. இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை.

மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும், மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் எனது நன்றி. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் செலுத்திக்கொள்ளுங்கள். நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 1,150 இடங்களில் நடந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் 85,105 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த முகாமில் சுகாதாரத்துறை மட்டுமின்றி, அனைத்துத்துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தொடங்கி வைத்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடந்த முகாமை டீன் குந்தவிதேவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

செஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். தாசில்தார் ராஜன், முன்னால் எம்.எல்.ஏ,, செந்தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, சுப்பிரமணியன், செயல் அலுவலர் ராமலிங்கம், நகர தலைவர் பார்சு துரை, டாக்டர்கள் பாலாஜி, பத்மபிரியா, வருவாய் ஆய்வாளர் கண்ணன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் பார்கவி, துப்புரவு பணி மேற்பார்வையாளர் ரமேஷ் மற்றும் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

விக்கிரவாண்டி அருகே பனையபுரத்தில் நடந்த முகாமிற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ.அரிதாஸ் முன்னிலை வகித்தார். தாசில்தார் தமிழ்செல்வி வரவேற்றார். இதில் புகழேந்தி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இதில் சப்–கலெக்டர் கதிரேசன், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் பொற்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், குலோத்துங்கன், வட்டார மருத்துவ அலுவலர் வினோத், குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் சாமுண்டீஸ்வரி, உள்பட பலர் கலந்து கொண்டனர். பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கலெக்டர் மோகன் பாராட்டு தெரிவித்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்திலும் 1029 முகாம்கள் வாயிலாக 4000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு 1 லட்சத்து 28 ஆயிரத்து 751 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி சமுதாய கூடம், புதுப்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அங்கன்வாடி மையம் மற்றும் திருவள்ளூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மருத்துவர்கள், செவிலியர்கள், நகர்ப்புற சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை பணியாளர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ஜவஹர்லால், நகராட்சி ஆணையர் சந்தானம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *