செய்திகள்

ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மது விற்பனை

சென்னை, ஏப்.4–

டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று (4–ந்தேதி) முதல் 6-ந்தேதி வரை 3 நாட்களுக்கு ‘டாஸ்மாக்’ கடைகளை அடைக்க அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையொட்டி நேற்று இரவு தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்க டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் குவிந்தனர்.

ஒவ்வொரு மதுக்கடைகளிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது. துரைப்பாக்கம், கிண்டி, குன்றத்தூர், மாதவரம், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, கோடம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி, ஆவடி, திருமுல்லைவாயல் உள்பட பல இடங்களில் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

தற்போது தேர்தல் நடைபெறுவதால் யாருக்கும் 5 பாட்டில்களுக்கு மேல் விற்ககூடாது என்று தேர்தல் கமி‌ஷன் கட்டுப்பாடு விதித்திருந்தது. இதனால் 4 பாட்டில்கள் வரை மதுவை கேட்டு வாங்கிச் சென்றார்கள்.

நேற்று ஒரேநாளில் மட்டும் ரூ.160 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக ‘டாஸ்மாக்’ அதிகாரி தெரிவித்தார்.

வழக்கமாக ஒவ்வொரு நாளும் ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி வரை மதுபாட்டில்கள் விற்பனையாவது வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *