செய்திகள்

ஒரே நாளில் சென்னையில் 30 விமானங்கள் ரத்து

சென்னை, ஏப். 23–

கொரோனா கட்டுப்பாடு காரணமாக, நேற்று ஒரே நாளில், சென்னையில் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, விமான பயணிகள் தங்களது பயணங்களை தவிர்த்து வருவதால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து குறைந்த பயணிகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால், நேற்றைக்கு மட்டும் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையிலிருந்து கோவை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம், புவனேஸ்வர், கோவா ஆகிய இடங்களுக்குச் செல்லும் 15 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல அந்த நகரங்களில் இருந்து மீண்டும் சென்னைக்கு திரும்பி வரவேண்டிய 15 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கட்டுப்பாடுகளே காரணம்

இதுதவிர சென்னையிலிருந்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு புறப்பட்ட விமானங்களிலும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன. விமானத்தில் பயணிகளின் வருகை குறைவாக இருப்பதற்கு கொரோனா அச்சம் ஒரு காரணமாக இருந்தாலும், கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய காரணம் இருப்பதாலும் பலர் விமான பயணத்தை தவிர்த்து வருகின்றனர் .

பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருக்க வேண்டும். இ-பாஸ் இருக்க வேண்டும், அதுமட்டுமல்லாமல் விமானத்தின் நடு இருக்கையில் அமரும் பயணிகள் கவச உடை அணிந்து தான் பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட காரணங்களை விரும்பாத பயணிகள் விமான பயணத்தை தவிர்த்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *