செய்திகள்

ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Makkal Kural Official

புதுடெல்லி, டிச.13

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சிகளுக்கு என அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதால் அரசுக்கு பெரும் பணச்செலவும், பணியாளர்களின் நேர விரயமும் ஏற்படுகிறது.

எனவே மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆணைய முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் கே காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

ராம்நாத் கோவிந்த் குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. மக்களவை, மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். இந்த தேர்தலுக்கு பிறகு அடுத்த 100 நாட்களில் நாடு முழுவதும் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். ஒரே வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை ராம்நாத் கோவிந்த் குழு அளித்துள்ளது.

இந்த குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு கடந்த செப்டம்பரில் ஏற்றுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதா வரையறுக்கப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அடுத்த வாரம் நாடளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பா.ஜ.க கூட்டணி வரவேற்பு

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதை பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் வரவேற்று உள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *