நாடும் நடப்பும்

ஒரு லட்சம் புள்ளிகளை நோக்கி நடைபோடும் பங்கு குறியீடு

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களின் ஸ்திரமான நிதிநிலை


-:ஆர். முத்துக்குமார்:-


பங்கு மார்க்கெட் குறியீடு 52,000 புள்ளிகளை தாண்டிய நாளாய் சற்றே சரிவதும் மீண்டும் அதே அளவு ஏறுவதுமாக இருக்கிறது. கடந்த வாரம் முழுவதும் பங்குகளின் விலைகள் சரிவு கண்டாலும் தொலைநோக்கில் முதலீடு செய்து வந்தவர்கள் இது பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள்.

ஆனால் 52,300 புள்ளிகள் வந்தால் சரிவு கண்டாலும் 52,000 புள்ளிகளை விட குறைய வில்லை. நேற்று துவக்கம் முதலே பங்கு மார்க்கெட் குறியீடு 52,500 புள்ளிகளை தாண்டியே தான் இருந்தது.

3 டிரில்லியன் டாலர் வர்த்தகத்தை கண்டு வரும் நமது பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தை வெகுவாகவே கவர்ந்துள்ளதால் பங்கு விலைகள் சரியும் போதெல்லாம் நெடுநாள் முதலீடாய் வாங்கி வருவதாக முன்னணி முதலீட்டு நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது.

நமது அந்நிய செலாவணி கையிருப்பு உலகிலேயே மிக அதிகமாக இருப்பதாக ரிசர்வ் வங்கியும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அது எப்படிச் சாத்தியம்? ஏற்றுமதிகள் அதிகரிக்க வாய்ப்பில்லை. கொரோனா ஊரடங்கு காரணங்கள் தான்.

பெட்ரோல் விலை ரூ.100 தொட்டுவிட்ட போதும் மத்திய அரசு விலைகளை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்க முற்படவே இல்லை.

கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் விலை மிக குறைந்து 20 டாலர் வரை பீப்பாய் விலை இருந்த போது அதிகமாக வாங்கும் சக்தி நமக்கு இருந்தது. இந்த வாரம் முழுவதும் டாலர் 73 என்ற அளவில் இருந்தது.

இந்நிலையில் நாம் பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதன் காரணமாக மத்திய அரசின் கஜானா நிரம்பிய நிலையிலேயே தொடர்வதை பார்க்கிறோம்.

கொரோனா பாதிப்பால் வங்கிகளின் வர்த்தகம் குறைந்து இருக்குமே? என்றால் அது தான் இல்லை. எல்லா வங்கிகளும் கடன் வட்டியை குறைத்து விட்டாலும் நிதிநிலை ஸ்திரமாகவே இருப்பது வங்கிகளின் சமீப நிதிநிலை அறிக்கைகள் சுட்டிக் காட்டுகிறது. அது நம் நாட்டின் பொருளாதார பலமாகத்தான் பார்க்கப்பட வேண்டும்.

நிதி நிறுவனங்களில் காப்பீட்டு நிறுவனங்களின் பங்களிப்பும் இந்த வருடத்தில் மிக சாதகமாக இருக்கப் போகிறது.

மருத்துவ காப்பீடுகள், ஆயுள் காப்பீடுகள் கடந்த 15 மாதங்களில் என்றுமில்லாத அளவிற்கு அதிகமாக காப்பீட்டாளர்களுக்கு செலவு செய்து வருகிறார்களே, அது அவர்களது நிதி நிலையை பாதிக்குமே? என்று யோசிப்பவர்கள் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது புரிகிறது.

ஆனால் நம் நாட்டில் மிகச் சிறிய சதவிகிதம் பேர் தான் மருத்துவ காப்பீடு வைத்திருக்கிறார்கள். அவர்களும் சராசரியாக மாதம் ரூ.1000 என்ற அளவுக்குத்தான் செலவு செய்து வருகிறார்கள்.

ஆனால் கொரோனா பாதிப்பு தாக்கியபோது குடும்பத்தார் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு அவசியம் என்பதை பெருவாரியான மாத சம்பளதாரர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்து வருவதால் இது காப்பீடு நிறுவனங்களுக்கு சாதகமான ஒன்றாக மாறி விட்டது.

கொரோனா போன்ற பெரும் தொற்றை முழுமையாக எதிர்கொள்ள வேண்டிய செலவுகளை முழுவதும் மேற்கொள்ள முந்தைய மாதம் ரூ.1000 என்பது சற்றே அதிகரித்து ரூ.1400 வரை என உயர்ந்து விட்டது. மேலும் குடும்பத்தார் அனைவருக்கும் என்பதால் குறைந்தது ஒருவருக்கு அதிகப்படியாக காப்பீடு எடுக்கப்படுவதால் காப்பீடு நிறுவனங்களின் வருவாய் கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்து விடும்!

அதுபோன்றே ஆயுள் காப்பீடு முகவர்களும் தங்களால் எளிதில் புது பாலிசி தாரர்களை பிடித்துவிட முடிகிறது என மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்கள்.

இப்படியாக நிதித் துறையின் ஆதாரமாக இருக்கும் வங்கிகளும் காப்பீடு நிறுவனங்களும் பசுமையான நாட்களுக்கு தயாராகி விட்டது. அதன் காரணமாக அந்நிறுவன பங்குகளின் விலைகளும் அதிகரித்து வருவதால் தான் பங்குச் சந்தை குறியீடு மேல் நோக்கி நகர்ந்து வருகிறது.

வங்கி செயல்பாடுகள் இப்படி நன்றாக இருப்பதால் மிக குறைந்த வட்டிகளை ஈட்டும் வைப்பு நிதிகளின் வட்டி விகிதம் இனி அதிகரிக்குமா?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மனதில் என்ன எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும்? பிரதமர் மோடி உள்நாட்டு உற்பத்திக்கும், புதிய தொழில் தொடங்கும் முனைவோர்களுக்கும் ஊக்கம் என்று களப்பணிகளை முடுக்கிவிட்டு செயல்பட வைத்திருக்கும் நிலையில் வயதானவர்கள், குடும்ப தலைவிகளின் முதல் விருப்பமான வங்கிகளில் வைப்பு நிதிகளுக்கு முக்கியத்துவம் தருவாரா? என்பது சந்தேகமே.

அவர் மனதில் வங்கியில் வைப்பு நிதியாக இருந்தால் மாதாமாதம் ஓர் நிரந்தர ஊதியமாய் வட்டி வரவு இருக்கும், ஆனால் வங்கிகளின் தலையில் அது சுமையாகும்.

ஒரு தொழிலதிபர் கடன் வாங்கினால் 8% வங்கிக்குத் தருவார்; ஆனால் அவரே வைப்பு நிதியாக முதலீடு செய்தால் வங்கி அவருக்கு 6% வரை தர வேண்டும் அல்லவா?

ஆகவே நிதிதுறைக்கு புதுப்புது பங்கு வெளியீடுகளுக்கும் உரிமை பங்கு வெளியீடுகளுக்கும் முன்னுரிமை தந்து வருகிறது. இந்த மாற்றமான முதலீடுகள் நாட்டில் மிக அதிகமானோருக்கு அச்சத்தை தரும் ‘ரிஸ்க்’ முதலீடாகவே இருக்கிறது.

தங்களது கையிருப்பை இப்படி சூதாட்ட பிணையாக வைக்க முன் வரப்போவது கிடையாது! ஆனால் அது இனி தவறான முடிவாகவே இருக்கும்.

வங்கிகளில் சேமிப்பு கணக்கும் வைப்பு நிதிகளும் தந்த நிரந்தர தன்மை தற்போது பங்கு முதலீடுகளிலும் வந்து விட்டது.

ஆனால் நொடிக்கு நொடி பங்கு விலைகளை கண்காணித்து விற்கவும் வாங்கவும் வேண்டுமே என்ற கவலை இருப்பதும் நிஜம் தான்.

அந்நிலையில் நல்ல மாற்றுத் திட்டம் மியூட்சுவல் பண்ட் திட்டங்கள் ஆகும். அவை வரும் காலத்தில் மாதாந்திர வட்டி வருவாய்க்கு நிகராக நல்ல தொகையைத் தரும் உத்திரவாதத்துடன் இருக்கிறது.

35,000 புள்ளிகளில் முதலீடு செய்தவர்கள் பங்கு குறியீடு 52,000 எட்டிய நிலையில் 40% வளர்ச்சியை தங்களது முதலீடுகளில் கண்டனர். அந்த 15,000 புள்ளிகள் அதிகரிப்பு 20 மாதங்களில் வந்து விட்டது!

தற்போதுள்ள நிலையில் முதலீட்டாளர் நுழைந்தால் அதாவது 52,000 புள்ளிகள் என்ற நிலையில் நுழைந்தால் கோவிட் பெரும் தொற்று பரவல் முழு கட்டுப்பாட்டிற்கு வரும் முன் நமது நாட்டில் உள்ள பல நிறுவனங்களின் நிதிநிலை சத்தானதாக உயர ஆரம்பிக்கும்.

ஆக சென்செக்ஸ் விரைவில் 60,000 புள்ளிகளைத் தாண்டிவிடும் என்று கூறுவது ஆருடம் கிடையாது; நிதர்சனமான உண்மை.

தொலைநோக்கில் மியூட்சுவல் பண்டுகளில், பங்குகளில் முதலீடு செய்பவர்கள் எதிர்பார்ப்பது பங்குக் குறியீடு ஒரு லட்சம் புள்ளிகளை அடுத்த 20 மாதங்களில் தாண்டிவிடும் என்பதாகும்.

ஆகவே இனியும் வங்கி வட்டிகளை எதிர்பார்த்து வைப்பு நிதியாக முதலீடு செய்வதை விட நிபுணத்துவத்துடன் பங்கு முதலீட்டாளர்களாக மாறுவதே சரியான முடிவாக இருக்கும். அதுவே இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *