சிறுகதை

ஒரு ரூபாய் | ராஜா செல்லமுத்து

அவ்வளவாக ஆட்கள் இல்லாத அந்தப் பேருந்து பேருந்து நிலையத்திலிருந்து மெல்ல நகர்ந்தது.

டிக்கெட் ,டிக்கெட் டிக்கெட் என்று பயணிகளிடம் வசூலித்துக் கொண்டிருந்தார் நடத்துனர் .

எனக்கு ஒரு கோடம்பாக்கம், எனக்கு ஒரு ஸ்டெர்லிங் ரோடு, எனக்கு ஒரு காலேஜ் ரோடு, கோ-ஆப்டெக்ஸ் என்று டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டிருந்தனர் பயணிகள்.

பயண சீட்டு வாங்கிய அத்தனை பேருக்கும் ஒரு ரூபாய் பாக்கி தருவதாக சொல்லிக் கொண்டே சென்றார் நடத்துனர்

ஏன் சார்? ஒரு ரூபாய் இல்லையா? என்று ஒரு பயணி கேட்க

ஏப்பா, நான் இருந்தா தர மாட்டேனா? அதான் இல்லையே என்று நடத்துனர் முறைக்க

ஒரு ரூபாய் எல்லாம் நீங்க தர மாட்டீங்க. கேட்டதான் தருவீங்க என்று அந்த பயணி முறைக்க, நடத்துனர் கொஞ்சம் கடுப்பாக

ஏப்பா சில்லற இல்லைங்கிறேன். என்னைநீ முறைக்கிற? தப்பு என்று அந்த பயணியிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார் நடத்துனர்.

டிக்கெட், டிக்கெட் என்று பேசிக்கொண்டே பேருந்தில் வசூல் செய்து கொண்டிருந்தார் . பேருந்தில் இருந்த அத்தனை பேருக்கும் ஒரு ரூபாய் பாக்கி வைத்தார் நடத்துனர். ஒரு சிலர் வாய்விட்டு ஒரு ரூபாய் சில்லறை கேட்டனர். ஒரு சிலர் இது போய் பெரிய விஷயமா? என்று அவர்களுக்கு வரவேண்டிய ஒரு ரூபாயை கேட்காமல் இருந்தனர்.

இதை சாதகமாக பயன்படுத்திய அந்தப் பேருந்து நடத்துனர். ஒரு ரூபாய் பாக்கியை பேருந்தில் பயணம் செய்த அத்தனை பேருக்கும் தரவில்லை. கோடம்பாக்கம் தாண்டிய பேருந்து பெரியார்ரோடு நெருங்கியது.

பெரியார் ரோட்டில் மூட்டை முடிச்சுகளுடன் வயதான ஒரு பெண்மணி பேருந்தில் ஏறினார். அவரை பார்த்ததும் பயணிகள் முகம் சுளித்தனர். நடத்துனர் அந்த கிழவியை நடத்தும் விதமே வேறு மாதிரி இருந்தது.

அந்த பக்கம் போய் உட்கார். மூட்டை முடிச்சுகள தூக்கிட்டு எங்க போற ?என்று கடிந்து கொண்டார். நம்மை ஏதோ திட்டுகிறார்கள். கேலி செய்கிறார்கள் என்று நினைத்த அந்த பெரிய மனுஷி ஒரு ஓரமாக போய் அமர்ந்து எக்மோர் போகணும். டிக்கெட் ஒண்ணு கொடுங்க என்று தன் சுருக்கு பையில் இருந்த அத்தனை பைசா களையும் எண்ணிக் கொடுத்தார்

அதை மொத்தமாக வாங்கிய நடத்துனர் எண்ணிப்பார்த்து

ஒரு ரூபாய் குறைவதாக கடிந்துகொண்டார்

என்கிட்ட அவ்வளவு தான் இருக்கு சாமி. டிக்கெட் கொடு என்று கேட்க

அதெல்லாம் கொடுக்க முடியாது கீழ இறங்கி போ என்று ரொம்பவே கேவலமாக திட்டினார் நடத்துனர்.

சாமி, நீ நல்லா இருப்ப அவ்வளவுதான் காசு இருக்கியா நான் எக்மோர் போனா தான் சாப்பிட முடியும். இப்போ பசி கண்ண கட்டுது. ஒரு ரூவா தான குறைஞ்சிருக்கு. டிக்கெட் குடுய்யா என்று கேட்டார்.

விர் என்று விசில் ஊத, நடு ரோடு என்று கூட பார்க்காமல் அந்த ஓட்டுனர் பஸ்சை நிறுத்தினார்.

இவ்வளவு மூட்டை முடிச்சுக்களை தூக்கிட்டு எவ்வளவு தைரியமா பஸ் ஏறிட்டே. அதுவும் பஸ்சுக்கு கூட ஒரு ரூபா குறையுது. போ, உங்க அப்பன் வீட்டு வண்டி மாதிரி ஏறி உட்கார்ந்து இருக்கிறே? எறங்கு என்று அந்த பெரிய மனஷி இடம் தகராறு செய்து கொண்டிருந்தார் அந்த நடத்துனர்

ஐயா மகராசா சாமி, ஒரு ரூபா தான குறையுது. அடுத்த தடவை வரும் போது தரையா என்று எவ்வளவோ கெஞ்சி பார்த்தாள் அந்த பெரிய மனஷி.

ஆனால் அந்த நடத்துனர் விடவேயில்லை .அந்த பெரிய மனுஷியை கீழே இறக்கி விடுவதிலேயே குறியாக இருந்தார்.

தான் வரும்போது கொண்டு வந்த அத்தனை மூட்டை முடிச்சுகளையும் அள்ளிக் கொண்டு, அந்த பெரிய மனுஷி இறங்க எத்தனித்தபோது

அம்மா, கொஞ்சம்அப்படியே நில்லுங்க என்று ஒரு குரல் கேட்டது.

முருகன் அந்த கிழவியின் அருகில் வந்தான்

என்னம்மா ஒரு ரூபாய் குறையுதா? என்று கேட்டான்.

ஆமா சாமி ஒரு ரூபா குறையுது. இந்த சாமிதான் என்னைய வண்டியை விட்டு இறங்க சொல்வது என்று அழுதுகொண்டே சொன்னாள் அந்த பெரிய மனுஷி நடத்துனரை பார்த்த முருகன்

வண்டியில இத்தனை பேர் இருக்கோம். அத்தனை பேருக்கும் நீங்க ஒரு ரூபா பாக்கி தரனும். கேட்டா சில்லற இல்லன்னு , சொல்லிட்டீங்க. அது சரி எங்களுக்கு தர வேண்டிய ஒரு ரூபாயை நீங்க தராம எங்ககிட்ட உங்க ஞாயத்தை பேசினீங்க . ஆனா இந்த பெரிய மனுஷி கிட்ட ஒரு ரூபாய் கேட்டு நீங்க சண்டை போடுறீங்க. எனக்கு ஒரு ரூபா மத்தவங்களுக்கு ஒரு, ஒரு ரூபாய் என்ன மொத்தம் எவ்வளவு ரூபா இருக்கும் நீங்களே கணக்குப் போடுங்க. இந்த பஸ்ல மொத்தம் முப்பது பேர் இருக்காங்க.

30 ஒரு ரூபா 30 ரூபா. அத, நீங்க யாருக்கும் தராம அப்படியே வீட்டுக்கு எடுத்துட்டு போய் இருக்கீங்க. இல்ல எங்களைத் தேடி வந்து மறுநாள் குடுப்பீங்களா? எப்படி உங்களுக்கு எங்களைத் தெரியும். நிறைய தப்பு பண்றீங்க .நீங்க எங்களுக்கு சேரவேண்டிய முப்பது ரூபாய் நீங்க என் கையில கொடுங்க என்ற முருகன் கண்டக்டர் நமக்கு தரவேண்டிய ஒரு ரூபாய் எல்லாம் என்கிட்ட கொடுக்கிறதில்லை உங்களுக்கு சம்மதமா? என்று பேருந்தில் இருந்த பயணிகள் இடம் கேட்டான் .

அத்தனை பயணிகளும், ஓகே முருகன் இடமே கொடுங்க என்று ஒரு மனதாக சொன்னார்கள்.

கோபத்தோடு முருகன் கையில் 30 ரூபாயை திணித்தார் நடத்துனர். அந்த முப்பது ரூபாயை வாங்கி, அந்த பெரிய மனுசி கையில் கொடுத்து நீங்க உட்காருங்க என்று அமரவைத்து ஒரு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொடுத்தான் முருகன்.

அதுவரை அமைதியாக இருந்த நடத்துனர், முருகன் செய்த வேலை அவருக்கு எரிச்சலை தந்தது. பேருந்து நகர்ந்து ஒவ்வொரு நிறுத்தங்களிலும் நின்று நின்று போன போது முருகனை முறைத்துப் பார்த்துக் கொண்டே வந்தார் நடத்துனர்

என்ன சார் ஏன் இப்படி என்னை முறைச்சு பாக்குறீங்க? நான் ஒன்னும் தப்பா உங்க கிட்ட பணம் வாங்கலையே. எங்களுக்கு கொடுக்க வேண்டிய ஒரு ரூபாய் தானே நீங்க கொடுத்தீங்க. அதுக்கு ஏன் இவ்வளவு முறைக்கிறீங்க? இது தவறு உங்களுக்கு ஒரு ரூபா குறை இருந்தா அது நஷ்டம் . பாட்டியை கீழே இறக்கிவிட கூட நீங்கள் துணிந்து விட்டீங்க.

ஆனா எங்களுக்கு வர வேண்டிய காசு நீங்க தரலைன்னா. நீங்க வண்டியை விட்டு கீழ இறங்கிச் சொல்வீங்களா? உங்களுக்கு ஒரு நியாயம்? எங்களுக்கு ஒரு நியாயமா? இது தவறு என்று முருகன் சொன்னபோது ,

அந்த நடத்துனரின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தது போல் இருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *