சில வருடங்களுக்கு முன் ஒரு அழகிய ஊர் தமிழ்நாட்டின் தென் பகுதியில் இருந்தது. அங்கு ஒரு ஜமீன்தாரர் ஒரு அரண்மனை போன்ற வீட்டில் வாழ்ந்து வந்தார். அவர் அரண்மனையின் அருகிலேயே விவசாயி கந்தன் ஒரு சிறிய ஓட்டு வீட்டில் வாழ்ந்து வந்தான்.
அந்த விவசாயி வீட்டின் கொல்லைப் பகுதியில் வீட்டிற்குத் தேவையான காய்களை விளைவித்து வந்தான். சில பூசணி விதைகளையும் விதைத்தான். ஆடி பட்டம் தேடி விதைத்ததால் முளை விட்டு செடியும் வந்தது. நன்றாக பராமரித்தும் வந்தான். செடியும் கொடியாக வளர்ந்தது. திடீரென கொடியும் பூக்க ஆரம்பித்தது. ஒரு பூவிலிருந்து ஒரு பிஞ்சும் வந்தது. விவசாயி ஆனந்தமடைந்தான்.
பூசணிப் பிஞ்சும் நன்றாக வளர்ந்து வந்தது. காயாக மாறிய பிஞ்சும் உருவத்தில் பருக்க ஆரம்பித்தது. பூசணியின் அளவைப் பார்த்த விவசாயி கந்தன் தன் கண்ணே பட்டுவிடும் என்று எண்ணினான். நல்ல கனத்துடன் மினுமினு என்று ஜொலித்தது. இந்த பூசணியை தைப் பொங்கலுக்குத்தான் அறுக்க வேண்டும், தன் வீட்டுக்குப் போக மீதியை தன் உறவினர் வீட்டிற்குக் கொடுக்க வேண்டும் எனத் தீர்மானித்தான்.
அந்த வழியாக வந்த ஜமீன்தார் அந்தப் பூசணிக்காயை பார்த்து விட்டார். கந்தனும் முன்னெச்சரிக்கையாக பூசணியை தன் வீட்டிலிருந்த மரத்தில் கயிற்றைக் கட்டி அதில் ஏற்றி விட்டான். கொடி மட்டும் கீழே ஓடிக் கிடந்தது. தன் மகனிடம் ஒரு விடுகதை கேட்பான். ஆனை கட்டிக் கிடக்க கயிறு ஓடிக் கிடக்கு. அது என்ன? என்பான். மகன் பதில் தெரியாமல் விழிப்பான். மகனும் தன் நண்பர்களிடமும் இதே விடுகதையைக் கேட்பான். அவர்களுக்கும் புரியவில்லை. தன் வீட்டின் கொல்லைப்புறம் அழைத்துச் சென்று விடை இங்கே தான் உள்ளது என்பான் கந்தன். அப்பவும் விடை தெரியவில்லை மகனுக்கு. பிறகு சொன்னான் பார், மரத்தின் மேல் பூசணி என்ற ஆனை கட்டியுள்ளது; கிழே கயிறு என்ற கொடி ஓடியுள்ளது. இது தான் அந்த விடுகதை என்று பதிலளித்தான் விவசாயி.
நம் ஜமீன்தாருக்கு அந்த பூசணியைப் பார்த்ததிலிருந்து பூசணிக்காயைப் பறித்து தன் வீட்டில் சாம்பார் வைத்து சாப்பிட வேண்டும் என்று மனம் மிகவும் எண்ணியது. அதைப் பறிப்பது எப்படி என்று திட்டமிட்டார்.
யாரும் வராத பார்க்காத, நடு நிசி நேரமாகப் பார்த்து ஜமீன்தார் பூசணிக்காயை வெட்டி கோணிக்குள் போட்டு கொண்டுப் போனார் வீட்டுக்கு. அந்த பெரியவர் ஆனாலும் எப்படியோ ஒரு பெண்மணி அவரின் செய்கைகளைப் பார்த்து விட்டாள். அதனால் மறுநாள் முழுவதும் ஊர் முழுவதும் இதே பேச்சு தான். நம் ஜமீன்தார் பூசணிக்காயை திருடி விட்டார் என்று கேலி பேசினார்கள். அவர் குடும்பத்திற்கு ‘‘பூசணிக்காய் திருடும் குடும்பம்’’ என்ற பெயரிடப்பட்டது. ஜமீன்தார் சிறிது நாட்கள் வெட்கப்பட்டார். பிறகு அவர் மறைவுக்குப் பின்னும் ‘பூசணிக்காய் திருடிய கூட்டம்’’ என்ற பெயர் நிலைத்து விட்டது. எங்கும் விலாசம் கண்டுபிடிக்கவும் பூசணிக்காய் திருடிகள் வீட்டிற்கு எதிர் சந்து, அடுத்த தெரு, பக்கத்து சந்து என்று சொல்லும் அளவுக்கு பெயராகி விட்டது.
இப்படியே 4 தலைமுறை சென்று விட்டது. 5வது தலைமுறையைச் சேர்ந்த மகேஷ் அமெரிக்காவில் பி.எச்டி., பட்டம் பெற்று தாய்நாடு திரும்பினான். அவனுக்கு அவன் அம்மா சொந்த ஊரில் பெண் பார்த்து தன் மகனுக்கு மணமுடிக்க நினைத்தாள். அதனால் உள்ளூர் கல்யாண புரோக்கரிடம் மகனின் பயோடேட்டாவைக் கொடுத்தாள். எல்லா விவரங்களையும் சேகரித்தவர் உங்கள் குடும்ப் பெயர் என்ற இடத்தில் என்ன போட வேண்டும் என்று கேட்டார். அம்மா சொன்னாள் ‘பூசணிக்காய் திருட்டு கூட்டம்’’ என்றாள். உடனே புரோக்கரும் அதை குறித்துக் கொண்டார். அவரும் அவரிடமிருந்த பெண்கள் லிஸ்டை கூறினார்.
இந்த ஊரில்,
1) கன்னு திண்ணி (ஆட்டுக்குட்டி) என்று ஆட்டுக்குட்டியை வெட்டி சமைத்தவர் கூட்டம்
2) மொட்டாக்கு (இரவில் பெண்களின் தண்டட்டியை கத்தரித்து எடுத்து விட்டு தன்னை அடையாளம் தெரியாமல் இருக்க மொட்டை அடித்துக் கொள்வான் கூட்டம்.
3) வழி மறிச்சான் வீடு (பெண்களிடம் வழி மறித்து திருடும் வழக்கமுடையவன்)
4) கல்காளை (அந்த காலத்தில் தெருவில் பெரிய கல்தூணில் விளக்கு ஏற்றுவார்கள். அந்த கல்தூணை அவன் ஒருவனே தூக்கி நிறுத்தி விடுவான்) வீடு
5) இது தவிர கரடி வீட, பூட்ஸ் வீடு இப்படி பல குடும்பங்கள் உள்ளன. இதே உனக்கு ஏற்ற பெண்ணை நீங்களே தேர்ந்தெடுத்து வாருங்கள் அம்மா என்று பெண்களின் பட்டியலை நீட்டினார் அந்த புரோக்கர்.
மகேஷ் மலைத்து விட்டான். நம் குடும்ப பெயர் என்ற இடத்தில் ‘‘பூசணிக்காய் திருடும் கூட்டம்’’ என்று உள்ளதே! இதன் காரணப் பெயர் என்ன என்று அறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டான் நம் மகேஷ். அவன் விசாரித்ததில் உங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வயதான பெயவர் உள்ளார். அவரிடம் விசாரியுங்கள் என்றான்.
மகேஷ் ஒரு நாள் அவர் வீட்டிற்கு சென்றான், விசாரித்தான். அவருக்கு கண் கூட சரியாகத் தெரியவில்லை. என்னுடைய தாத்தா தான் எனக்குச் சொன்னார் என்று இந்த பூசணிக்காய் திருடிய கதையைச் சொன்னதாக கூறினார். அப்போது தங்கள் குடும்பத்திற்கு ஆணைகட்டி வீடு என்ற பெயர் வரக் காரணத்தையும் சொன்னதாக அந்தப் பெயரியவர் கூறினார்.
இந்த பூசணி திருட்டு கூட்டம் என்ற பெயரை நம் தலைமுறையில் மாற்ற வேண்டுமென உறுதி பூண்டான் மகேஷ். நண்பர்களுடன் விவாரித்து ஒரு முடிவெடுத்தான்.
மறுநாளில் ஒரு போஸ்டர் ஊரெங்கும் ஒட்ட ஏற்பாடு செய்தான். தினமும் தன் வீட்டில் சோறு போடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தான்.
எல்லோரும் சோறு சாப்பிட வந்தார்கள். இப்படியே ஓரிரண்டு மாதங்கள் சென்றன. விளைவு! எல்லோரும் ‘‘சோறு போடும் வீடு’’ என்று அடையாளம் காட்ட ஆரம்பித்து விட்டார்கள் இது தான்
‘‘முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக’’ என்ற பழமொழி உருவான கதை.