சிறுகதை

ஒரு தாய் மக்கள் நாம் என்போம் | ஆர். வசந்தா

பள்ளிக் கூட தலைமையாசிரியரின் முக்கிய அறிவிப்பை கேட்டதும் அந்தப் பள்ளி மிகவும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியது.

ஆம் . அடுத்த வாரம் வரப்போகும் குழந்தைகள் தின விழாவைச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற உத்தரவு தான் அந்த முக்கிய அறிவிப்பு. ஒவ்வொரு வகுப்பும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் அவர் கட்டளையிட்டார்.

பரிசுகள் வழங்கப் போவதாகவும் தலைமையாசிரியர் அறிவித்தார். அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் உடனே செயல்பட ஆரம்பித்தார்கள். குழு நடனம், சிறிய ஓரங்க நாடகம், வில்லுப்பாட்டு, கோலாட்டம் போன்றவை இடம் பெற்றன. 7வது வகுப்பிற்கு உடற்பயிற்சி, யோகாசனம் போன்றவை இடம் பெற்றது.

அந்த வகுப்பு ஆசிரியர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். மாணவர்கள் பிரமிட் போன்ற பல நிலைகளில் நிற்கும் உடற்பயிற்சியை செயல்படுத்தப் பழகிக் கொண்டிருந்தார்கள்.

மாணவிகள் முக்கியமான ஆசனங்களை நடனமாடுவது போல் பழகினார்கள். அப்போது தான் மாணவன் சந்தோஷ் பள்ளிக்கு ஓரிரு வாரங்களாக வராமல் இருப்பது தெரிந்தது. உடல் நலம் சரியில்லை என்று மட்டும் லீவு லெட்டர் கொடுத்திருப்பது நினைவுக்கு வந்தது.

மாணவன் சந்தோஷ் நல்ல படிப்பு, ஒழுக்கமுடையவன். மற்றும் ‘‘மல்லர் கம்பு’’ ஏறி சாகசம் செய்யும் தனி நிகழ்ச்சியில் சிறந்தவன். அவனைப் பற்றி மிகவும் கவலைப்பட்டனர். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களும் அவன் வராதது குறித்து வீட்டிற்குப் போய் விசாரிக்கும்படி சந்தோஷின் நெருங்கிய நண்பர்களை அனுப்பினர்.

பள்ளி முடிந்ததும் நண்பர்கள் முத்துவேலன், சாம்குமார், கதிரவன் ஆகியோர் சந்தோஷ் வீட்டிற்கு சென்றனர். அவர்களுக்கு மிகவும் கவலையுடன் சந்தோஷ் இருப்பது வேதனையாக இருந்தது.

ஏன் இப்படி இருக்கிறாய் என்று அன்புடன் வினவினார்கள்?

எனக்கு புற்று நோய் ஆரம்ப நிலையில் இருக்கிறது என்று டாக்டர்கள் கண்டுபிடித்ததை நண்பர்களிடம் சொல்லி வேதனைப்பட்டான். அதற்குரிய சிகிச்சையை ஆரம்பித்து விட்டதாகவும் கூறினான்.

” கீமோ தெரபி” அளிக்கப்பட்டது. அதனால் என்னுடைய தலை முடி எல்லாம் கொட்டி மொட்டைத் தலை ஆகிவிட்டது’’ என்று கூறி வேதனைப் பட்டான்.

மொட்டைத் தலையுடன் பள்ளி வர வெட்கப்பட்தைப் பற்றிச் சொன்னான்.

மேலும் தான் மற்ற மாணவர்களை எப்போதும் கேலி செய்தது நினைவுக்கு வந்தது. குண்டு யானை, ஒட்டடைக் குச்சி என்று மற்றவர்களை கேலி செய்தது அவனுக்கு இப்போது வேதனையாக இருப்பதாக சொன்னான். தன்னை மொட்டை என்று கேலி செய்வார்களே என்று சொல்லி வருந்தினான்.

அப்போது நண்பன் முத்து வேலன் இது தானா விஷயம். நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கண்டிப்பாக குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் உன் தனித் திறமையான “மல்லர் கொம்பு” செய்து காட்ட வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டான்.

சந்தோஷ் வீட்டிலிருந்தே பயிற்சியில் ஈடுபட்டான். அப்போது நண்பர்களுடன் கலந்து யோசித்தான். தேகப் பயிற்சியிலும் கலந்து கொண்டான். அவன் யோசனைப்படி மாணவிகளும் நாட்டியமாக ஆசனங்களை செய்து பழகினார்கள்.

நேரு பிறந்த நாள், குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வகுப்பும் அணி அணியாக வந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். ஒவ்வொன்றும் சிறப்பாக அமைந்திருந்தது.

அடுத்து 7 ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று ஆசிரியர் அறிவித்தார்.

திடீரென மாணவர்கள் உள்ளே இருந்து வந்தனர் மொட்டை தலையுடன். ஒரே கரகோஷம். ஏன் என்று தெரியாமலேயே. ஆசிரியருக்கும் ஒரே ஆச்சரியம் காரணம் புரியவில்லை. ஆனால் அனைவரும் ஒரே மாதிரியாக அற்புதமாக செய்து காட்டினார்கள்.

அதில் அதிசயம் என்னவென்றால் மாணவியரும் மொட்டை தலையுடன் நடனமாடினார்கள். சந்தோஷ் என்ற மாணவன் நமக்காக “மல்லர் கொம்பு” என்ற நீண்ட கம்புடன் அதன் உச்சியில் ஆசனங்கள் செய்து நம்மை அசத்துவான் என்று வகுப்பு ஆசிரியர் அறிவிப்பு செய்தார். அவன் கொம்பின் உச்சியில் ஏறி கடினமான நிகழ்ச்சிகளை அனாயசமாக செய்து காட்டினான்.

ஒரே கைத்தட்டல்களும் பாராட்டுக்களும் அவனுக்கு கிடைத்தது.

பரிசு வழங்கும் நிகழ்ச்சி வந்தது. வகுப்பு வாரியாக மாணவர்களின் திறமைக்கு பரிசு வழங்கும் நேரம் வந்தது.

பரிசு வழங்குவது சந்தோஷ் என்று அறிவித்து அவனை மேடைக்கு வர சொன்னார்கள். ஆனால் மேடைக்கு வந்ததும் சந்தோஷ் சொன்னான் என் வகுப்பு மாணவ – மாணவிகள் அனைவரையும் அழைத்து மேடைஏற்றினால் ஒழிய நான் மட்டும் இந்தப் பரிசுக்கு தகுதியானவன் அல்லன் என்றான்.

அப்போது தான் சந்தோஷ் சொன்னான் “நான் மொட்டை தலையுடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வெட்கப்பட்டு பள்ளிக்கூடம் வராமல் இருந்தபோது என் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் தான் பயிற்சியை மேற்கொண்டேன் ” இன்று பரிசுக்குரியவனாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

இதையெல்லாம் என் வகுப்பு மாணவர்களின் தியாகத்தின் முன் நான் வெற்றி பெற்றதெல்லாம் சிறிய விஷயம் தான். அவர்கள் எல்லோரும் வீட்டில் இருந்து வந்து ஒரு சலூனில் தங்கள் தலையை மொட்டை அடித்துக் கொண்டனர். ஏனெனில் நான் மட்டும் தனித்து தெரியக்கூடாது என்று அனைவரும் மொட்டை அடித்துக் கொண்டனர்.

இதைப்பற்றி மற்ற மாணவர்களிடம் விசாரித்தேன். அவர்கள் சிரித்தனரே தவிர பதில் சொல்லவில்லை. நான் மேடை ஏறியதும் என் பாட்டுக்கு தேகப்பயிற்சி செய்வது என்று மட்டும் கவனி என்றனர்.

அந்த நிமிடம் வந்ததும் அனைத்து மாணவர்களும் ஒரே குரலில் “ஒரு தாய் மக்கள் நாம் என்போம், ஒன்றே எங்கள் குலம் என்போம்” என்று பாடி தேகப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

நாம் அனைவரும் வித்தியாசம் பாராமல் இருக்க வேண்டிய இந்த மொட்டைத் தலை சாகச நிகழ்ச்சி என்று பெருமையாக கூறினர். மாணவிகள் தியாகம் அதனினும் பெரியது.

ஆகவே இந்தப் பரிசு என் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொன்னான். பரிசு வழங்க வந்த கலெக்டர் அனைவரையும் மேடைக்கு அழைத்து பெருமைப்படுத்தினார்.

‘‘ஒரு தாய் மக்கள் நாம் என்போம்’’ என்ற பாடலை மறுபடியும் ஒலிக்கச் செய்து கவுரவப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *