சிறுகதை

ஒரு கிலோ தக்காளி வாங்கினேன் | சின்னஞ்சிறுகோபு

காலை நேரம். வேறு வழியில்லாமல் இரண்டு மாதத்துக்கு முந்தைய ஒரு பழைய பேப்பரை எடுத்து ஒரு எழுத்தைக் கூட விடாமல் படித்துக் கொண்டிருந்தேன். மனைவியோ பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தாள்.

வெளியே ஐந்து நிமிடமாக வாசலில் காய்கறி வேன் வந்து ஸ்பீக்கரில் கூவிக் கொண்டிருந்தது!

திடீரென்று பாத்ரூமிலிருந்து என் மனைவியின் குரல் பெரும் சத்தமாக கேட்டது. ” வெளியே காய்கறி வேன் வந்திருக்கு! ஓடோடிப்போய் ஒருகிலோ தக்காளி மட்டும் வாங்கிட்டு வந்துடுங்க! வீட்டிலே ஒரு தக்காளி கூட இல்லை! மசமசன்னு நிக்காம சீக்கிரம் கிளம்பி போங்க! காய்கறி வேன் போயிடப்போவுது!”

பாத்ரூமிலிருந்து ஒருவித எதிரொலியுடன் ஒலித்த என் மனைவியின் உத்தரவைக் கேட்டு அதிர்ந்து அவசரம் அவசரமாக என் மூக்குக்கண்ணாடியை கழற்றி மேஜைமீது வைத்துவிட்டு, ஒரு டீஸர்ட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு, எப்போதும் காய்கறி வாங்கும் பையை தாவி எடுத்துக்கொண்டு பிளாஸ்டிக் டப்பாவிலிருந்து சில்லறை பணம்காசுகளை உத்தேசமாக பதற்றத்துடன் கொஞ்சம் அள்ளிக்கொண்டு கதவை நோக்கி பாய்ந்தேன்!

அப்போதுதான், முகத்தில் ‘மாஸ்க்’ போட்டுக் கொள்ளவேண்டும்’ என்பது திடுக்கென்று என் நினைவுக்கு வந்தது!

நயன்தாரா படம்போட்ட காலண்டர் மாட்டியிருக்கும் அந்த ஆணியில்தானே அந்த வெள்ளைநிற மாஸ்க் மாட்டியிருக்கும்? எங்கே காணோம்? திகைப்புடன், ” இங்கே ஆணியில் மாட்டியிருந்த மாஸ்கை எங்கே காணோம்?” என்று கத்தினேன்!

” மாஸ்கா? அதை சோப்பு போட்டு அலசி, மொட்டைமாடியில் காயப்போட்டிருக்கிறேன்! எடுத்துப் போட்டுக்கிட்டு சீக்கிரம் போங்க!” என் மனைவியின் குரல் மீண்டும் பாத்ரூமிலிருந்து எதிரொலித்தது!

நாங்கள் குடியிருப்பது 12 வீடுகள் கொண்ட ஒரு அப்பார்ட்மென்ட்! நாங்கள் மேலே மூன்றாவது மாடியில் ஒருவீட்டில் இருந்தோம். அவசரம் அவசரமாக கையில் பணம், பையுடன் மொட்டை மாடிக்கு ஓடினேன்!

சூரிய ஒளி பளிச்சென்று கண்ணைக் கூசியது. அப்போதுதான் ‘மூக்குக் கண்ணாடியை மறந்துப் போட்டுக்கொள்ளாமலேயே வந்துவிட்டேன்’ என்பது புரிந்தது!

‘சரி, தக்காளிதானே வாங்கப் போகிறோம்? புத்தகமா படிக்கப் போகிறோம் ‘ என்று நினைத்தபடி மொட்டைமாடிக்கு சென்றவுடனேயே, ஏராளமான துணிகளுக்கிடையே கொடியில் வெள்ளையாக அது தொங்கிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது! பாய்ந்து இழுத்தேன்! பட்டென்று ‘கிளிப்’ தெறித்து கீழே விழுந்தது. அதை எடுத்து வைக்கவெல்லாம் இப்போது நேரமில்லை!

மொட்டைமாடியிலிருந்து வேகமாக படபடவென்று இறங்கிக் கொண்டே, மாஸ்கை மாட்ட முயன்றேன். அது சரியாக வரவில்லை! கையில் பை, காசெல்லாம் வேறு இருந்தது. ‘ஒவ்வொரு மாஸ்க்கும் ஒவ்வொரு மாதிரியிருக்கு! இது கொஞ்சம் வித்தியாசமாக தேனீர்கோப்பை போல இருக்கு’ என்று நினைத்தபடி, வாயில் வைத்து மூடி, ஒரு மாதிரியாக எலாஸ்டிக்கை இழுத்து தலைக்குப் பின்னால் சுற்றி மாட்டிக்கொண்டே மாடிப்படியில் வேகமாக இறங்கிக் கொண்டிருந்தேன்! கழுத்துப்பக்கம் வேறு ஒரு கப்புபோல தொங்குவது போலிருந்தது! இது மருத்துவர்களுக்கான மாஸ்க் போலிருக்கு! ‘இதை எப்ப வாங்கித் தொலைத்தாள்?’ என்று நினைத்தபடி படியிலிருந்து இறங்கி தெருவுக்கு வந்தேன்!

‘அட, மேலேயிருந்து லிஃப்டில் வந்திருக்கலாமே! அவள் படுத்திய அவசரத்தில் ஒன்றுமே புரியவில்லை’ என்று நினைத்தபடி, காய்கறி வேனை நெருங்கினேன்.

அதற்குள் காய்கறி வேன் நகர ஆரம்பித்தது. நல்லவேளை, என்னைப் பார்த்துவிட்டு நின்றது!

அப்போது அங்கே காய்கறி வாங்கிக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு எதிர்வீட்டுப் பெண்கள் என்னை வித்தியாசமாக பார்த்து , சிரித்தபடி சென்றார்கள்!

‘ஏன், இவர்களுக்கு என்ன வந்தது? கண்ணாடி போடாததால், முகம் ஒரு மாதிரியா இருக்கு போல இருக்கு!’ என்று நினைத்தபடி , “தக்காளி ஒரு கிலோ” என்றேன். அந்த காய்கறி எடைப்போடுபவர் என்னைப் பார்த்து அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே, ஒரு கிலோ தக்காளியை எடையைப்போட்டு என் பையில் போட்டார். நான் குழப்பத்துடன் அவர் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு திரும்பினேன். அப்போதும் அவர் சிரித்துக் கொண்டேயிருப்பது தெரிந்தது!

தக்காளியை வாங்கிக்கொண்டு படுவேகமாக வந்து, லிப்டில் ஏறி என் வீட்டிற்குள் நுழைந்து ஓடோடி போய் நிலைக்கண்ணாடிக்கு முன் பார்த்த நான், மயக்கமடையாத குறையாக திகைத்து நின்றேன்!நான் முகத்தில் அப்படியும் இப்படியுமாக சுற்றிக் கட்டியிருந்தது மாஸ்க் இல்லை! லேடீஸ் உள்ளாடையான பிரா! அதுவும் இந்த அப்பார்ட்மென்டில் குடியிருக்கும், வேறு யாரோ ஒரு இளம் பெண்ணோட பிரா! நான் கொஞ்சம் நடுங்கிப் போய், என் மனைவி பாத்ரூமிலிருந்து வருவதற்குள், பிராவை கழற்றி கையில் எடுத்துக்கொண்டு, மொட்டைமாடிக்கு பாய்ந்தோடினேன்!

அங்கே மொட்டைமாடியில் எனது அப்பார்ட்மென்ட்டில் கீழ் தளத்தில் வசிக்கும் அமலா எதையோ தேடிக் கொண்டிருந்தாள். நான் கையில் பிராவுடன் வருவதைப் பார்த்துவிட்டு, “அட, இது காற்றில் கிளிப்பிலிருந்து கழன்று விழுந்து, உங்க வீட்டுப்பக்கம் பறந்து வந்து விட்டதா? தேங்க்ஸ்!” என்று ஒரு மாதிரியாக சிரித்துக்கொண்டே வாங்கிக் கொண்டாள்!

நானும், “ஆமாம்….ஆமாம்…!” என்று அசடு வழிந்தபடி நின்றேன்!

நான் மொட்டைமாடியிலிருந்து கீழே இறங்கி வீட்டுக்குள் வந்தபோது, அதற்குள் குளித்து முடித்து வந்திருந்த என் மனைவி, தக்காளியை பையிலிருந்து ஒரு தட்டில் கொட்டிப் பார்த்தபடி, சத்தமிட ஆரம்பித்தாள்!

“ஒருகிலோ தக்காளி வாங்கக்கூட உங்களுக்கு துப்பில்லையா? எத்தனை நசுங்கிய தக்காளிகள்!” என்று என்னிடம் எடுத்துக் காட்டினாள்.

‘தக்காளியை பற்றியே இப்படி கத்துகிறாயே, நான் தக்காளி வாங்கப்போன விதத்தைப் பார்த்திருந்தால் என்னை கொன்றே போட்டிருப்பாய்!’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்!

அப்போது டிவியில் ஒரு ஜோதிடர், “கன்னி ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள்!” என்று சொல்லிக் கொண்டிருந்தார். என் ராசி கன்னிராசிதான். அப்போது என் முகத்தில் ஏதோ சந்தனசோப் வாசம் வீசுவது போலிருந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *