சிறுகதை

ஒருவருக்கொருவர் உதவும் கரங்கள் – கவிமுகில் சுரேஷ்

கமலம் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள்.

அவளுடைய கணவன் பிரபு எவ்வளவு ஆறுதல் வார்த்தைகள் கூறியும் அவள் மனம் சமாதானம் அடையவில்லை.

கமலத்திடம் “பிறப்பென்று ஒன்று இருந்தால் இறப்பென்று ஒன்று இருக்கத் தான் செய்யும்; நாம இருக்கிறது தர்மபுரியில. உங்க மாமா குடும்பம் சென்னையில் இருக்கு . இப்ப என்ன அவருக்கு உடம்பு தானே முடியல” என்றான்.

அவளோ “உங்களுக்கு என்ன தெரியும்? அவங்களுக்கு பிள்ளைங்க கிடையாது. என்னையத் தத்து எடுத்து வளர்த்தவங்க; இது மாதிரி நேரத்தில் வயசான அவங்க பக்கத்துல நான் இருந்து உதவி செய்ய முடியலையே” தேம்பித் தேம்பி அழுதாள் கமலம்.

பிரபு தன்னால் முயன்ற வரை அவளுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறிப் பார்த்தான். இருந்தும் அவள் மனம் அவன் வார்த்தையில் சமாதானம் கொள்ளவில்லை.

கமலத்திற்கு ஆறு வயது இருக்கும் பொழுது அவளின் பெற்றோர்கள் ஒரு பஸ் விபத்தில் மரித்துப் போனார்கள்.

உறவு கூட்டங்கள் வந்தார்கள்; செய்யவேண்டிய காரியம், சடங்குகளை செய்து முடித்தார்கள் ; பிறகு பிரிந்து போனார்கள்.

கமலம் தனித்து விடப்பட்டாள். இரக்கமுள்ள அவளுடைய தாய்மாமன் தன் மனைவியிடம் நமக்குதான் குழந்தைப்பேறு இல்லை; இந்தப் பெண்ணை நாமே எடுத்து வளர்க்கலாம் எனும் முடிவுக்கு வந்து அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாராட்டிச் சீராட்டி வளர்த்தார்கள்.

பிறகு தர்மபுரியில் தூரத்து சொந்தமாக இருக்கிற பிரபுவுக்கு மணமுடித்து வைத்தார்கள்.

மீண்டும் தனித்தவர்கள் ஆனார்கள் அந்த தம்பதிகள். இருந்தாலும் தொடர்பில் இருந்தார்கள்.

கமலத்திற்கு திருமணமாகி ஏழு வருடம் ஆயிற்று. இப்போதுதான் அவள் கரு கொண்டவளாய் மூன்றாவது மாதம் நடந்து கொண்டிருந்தது

டாக்டர் எச்சரித்திருக்கிறார் “இது கொரோனா காலம் பஸ் பயணம் கூடாது: எங்கும் வெளியே செல்ல கூடாது. பாதுகாப்பாய் இருக்க வேண்டும் ;

அப்படியே செல்ல வேண்டுமென்றால் நீ பாஸ் வாங்க வேண்டும். பல கெடுபிடிகள் ; ஆகவே பயணிக்காமல் இருப்பது மிகவும் நல்லது”

ஒரு பக்கம் இந்த யோசனைகள் எல்லாம் ஓடிக்கொண்டிருந்தாலும் பிரபுவுக்கு மறுபக்கம் தாவரங்கள் குறித்த சிந்தனையே காணப்பட்டது.

அவனுக்குத் தாவரங்கள் ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் மரங்களை குறித்தும் அதன் சரித்திரங்களையும் ஆராய்வது அவனது பொழுதுபோக்காக காணப்பட்டது.

அதைக்குறித்து டைரியில் பக்கம் பக்கமாக எழுதி இருக்கிறான். அதுமட்டுமல்ல அவன் ஒரு வேளாண்மை பொறியியல் கல்லூரியில் விவசாயம் சம்பந்தபட்ட லெக்சரராகவும் பணியாற்றி வருகிறான்

இந்நிலையில் தன் மனைவியை குறித்தும் சிந்தித்தான் பெற்ற தாய் தகப்பனை வீட்டைவிட்டு துரத்தி விடும் பிள்ளைகள் எங்கும் இருக்கும் இந்நாட்களில்

அவர்களுக்கு மத்தியில் இவள் விசித்திரமாய் காணப்படுகிறாள். பெற்றால் தான் பிள்ளையா தன்னை வளர்த்தவர்கள் மேல் எவ்வளவு அன்புள்ளவளாய் காணப்படுகிறாள்.

அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடிக்கிறாள். தனக்கு இவள் மனைவியாய் கிடைத்திருப்பது எவ்வளவு பாக்கியம் என உணர்ந்தான்.

ஒவ்வொரு நாளும் வாட்ஸ் அப்பில் தன் மாமாவின் நலம் விசாரித்தாள். வீடியோகால் மூலம் அவரைப் பார்த்தால் கண்ணீர் சிந்தினாள்.

அவளின் அத்தை “பயப்படாத மாமா இப்ப பரவாயில்லை” என தேற்றினாள்.

“உங்க கூட உதவிக்கு யாராவது இருக்காங்களா” என்றாள்.

“இருக்காங்க அவங்க அண்ணன் பையன் கோபு அடிக்கடி வந்து பார்த்துகிறான்” என்றாள்.

கமலம் மனம் சற்று ஆறுதல் அடைந்திருந்தது.

பிரபுவின் மனமும் சமாதானம் அடைந்தது. இப்பொழுது தாவரவியல் குறித்த அவன் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தது அவன் படித்த கட்டுரை

ஆம் மொரீசியஸ் எனும் தீவின் காடுகளில் ஒரு வகை மரம் இருக்கிறது. அது உலகிலே இப்பொழுது பதிமூன்று மரங்கள் தான் உள்ளது

அம்மரங்கள் அதற்கு மேல் இல்லையாம் அவற்றின் வயது முன்னூறு வருடங்கள் தாண்டி விட்டதாம்.

இம்மரங்கள் பூத்துக் குலுங்கி, காய், கனிகளை தந்தும் இனவிருத்தி அடையவில்லை. இதன் விதைகள் முளைக்க வில்லை; துருவித் துருவி ஆராய்ந்து அறிஞர்கள் முடிவாக இதன் வரலாற்றிலிருந்து கண்டுபிடித்தது இதுவே முன்னூறு ஆண்டுகளுக்கு முன் மொரீசியஸ் தீவில் டோடு எனும் பறவை இனங்கள் வாழ்ந்து வந்தன.

அப்பறவைகள் அவைகள் சாம்பல் நிறம் கலந்த வெண்மை நிறத்தில் மொழுமொழுவென்று இருக்குமாம்.

அப்பறவைகள் இம்மரத்தின் பழத்தை சாப்பிட்டு அம்மரத்தின் அடியில் சுகமாய் படுத்து உறங்கும் ஆள் நடமாட்டமில்லாத அக்காட்டில் டோடுகள் நிம்மதியாய் வாழ்ந்து வந்தன.

ஒரே இடத்தில் உணவு கிடைத்ததால் அவைகள் பறக்க முயற்சித்தது இல்லை; உணவுகள் எங்கும் தேடி அடைந்ததும் இல்லை;

அத்தீவுக்கு ஒருநாள் போர்ச்சுகீசிய கப்பலொன்று நுழைந்தது. பிறகு பல கப்பல்கள் அங்கே வர ஆரம்பித்தது. அங்கே ஓடவும் பறக்கவும் தெரியாத அப்பறவைகள் வேட்டையாடப்பட்டது. விரைவில் அவ்வினங்கள் முழுவதும் அழிக்கப்பட்டுப்பட்டன.

இம்மரத்துக்கும் டோடுக்கும் என்ன சம்பந்தம்?

சம்பந்தம் உண்டு

இம்மரத்தின் பழத்தை உண்டு அதனின் உணவுப் பாதைகளைக் கடந்து செல்லும் விதைகள் மட்டுமே மண்ணில் விழுந்து முளைக்கும்

ஆம் உணவுப்பாதையின் ஊக்கிகள் அவ்விதை மீது செயல்படாவிட்டால் புதிய செடிகளை உருவாக்க முடியாது.

பிரபு இவைகளை எல்லாம் யோசித்தான். மரத்துக்கும் பறவைக்கும் இவ்வளவு சம்பந்தமாக அப்படி என்றால் ஒவ்வொரு உயிர்களுக்கும் மனிதர்களுக்கும் கூட சம்மந்தம் இருக்க வேண்டும்.

சம்மந்தத்தில் அன்பே மையமாய் இருக்க வேண்டும். இந்த அன்பை மையப்படுத்தி உலகம் வாழ்ந்திருப்பின் நிச்சயம் இந்த நோய் நொடி கொரோனா எதுவும் வந்திருக்காது.

முடிந்தவரை வாழும் நாட்களில் நன்மை செய்ய வேண்டும்; பிறர் துயரை துடைக்க வேண்டும்.

தனித்து இருக்கும் வரைதான் எவரும் அனாதைகள். உதவும் கரங்களை நீட்டினால் யாவரும் நமக்கு சொந்தங்களே.

பணமிருந்தால் மட்டும் தான் பிறருக்கு உதவ முடியும் என்பது மட்டும் உண்மை அல்ல ; மனமிருந்தால் தான் இன்னும் அதிகமாக உதவ முடியும் என்பது மட்டும் உண்மை .

எங்கோ இருக்கும் மனிதர்கள் இங்கே இருக்கும் நமக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் நிதி உதவிகள் செய்கிறார்கள். பகை நாடுகள் விரோதங்களை மறந்து நிதி உதவிகள் மூலம் கைகொடுக்கிறது. இதனையெல்லாம் என்னவென்று சொல்வது

ஏதோ ஒரு ரத்த சம்பந்தம் இருக்கிறது. ஆம் நாம் யாவரும் ஒரு தாயின் வயிற்றில் இருந்து தான் உருவானோம் எனும் சிந்தனை களையாமல் அழுகையை நிறுத்தி இருந்த கமலத்தின் வயிற்றை தடவினான் அவள் வெட்கத்தால் சிணுங்கினாள் சிரித்தாள்.

பிறகு தன் அனுபவங்களை டைரியில் இப்படி எழுதி முடித்தான்,

‘‘ஒருவருக்கொருவர் உதவும் கரங்கள் இருப்பதால்தான் உலகம் வாழ்கிறது ’’ .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *