செய்திகள்

‘ஒருமாத போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்…’ – ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

Makkal Kural Official

வாஷிங்டன், மார்ச் 13–

சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா – உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ள ஒருமாத போர் நிறுத்தத்தை ரஷ்யா ஏற்றுக் கொள்ளாவிட்டால் பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வருகிறது. போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், ‘அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. 30 நாள் இடைக்கால போர் நிறுத்தத்தை ஏற்க உக்ரைன் தயாராக இருக்கிறது’ என டிரம்ப் தெரிவித்தார். இதனை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உறுதி செய்தார்.

30 நாள் போர் நிறுத்தம் திட்டத்திற்கு உக்ரைன் ஒப்புக் கொண்டாலும், ரஷ்யா அந்த திட்டத்தை இன்னும் ஆய்வு செய்து வருவதாகவும், இந்தத் திட்டம் குறித்து அமெரிக்காவிடமிருந்து விளக்கத்திற்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் கூறுகையில்:

எங்களுடைய பிரதிநிதிகள் ரஷ்யாவுக்குச் செல்ல இருக்கின்றனர். ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். ரஷ்யாவுக்கு பேரழிவினை ஏற்படுத்தும் அந்நாட்டுக்கு மோசமான விளைவுகளை உண்டாக்கும் காரியங்களை என்னால் செய்ய முடியும். அம்முடிவினை நான் விரும்பவில்லை. ஆனால் நான் அமைதி காண விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். இதனிடையே, உக்ரைனுடன் போர் நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக்கொள்வார் என்றாலும் அதற்கு முன்பாக தனது நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார் என்று தெரிகிறது.

இந்த நிலையில் டிரம்ப்பின் பிரதிநிதி ஸ்டீவ் விட்கோப் இந்த வாரத்தில் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ரஷ்யா செல்வார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *