செய்திகள்

ஒருநாள் மழைக்கே வெள்ளக்காடாக மாறிய கோயம்பேடு சந்தை

போரூர், அக். 31–

சென்னையில் நேற்று பெய்த மழை காரணமாக கோயம்பேடு சந்தை வெள்ளக்காடாக மாறியது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பூ, பழம் மற்றும் மளிகை மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

கோயம்பேடு சந்தை நள்ளிரவு தொடங்கி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் மார்க்கெட் வளாகம் ரூ.10 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. எனினும் நேற்று பெய்த ஒரு நாள் மழைக்கே சந்தை வளாகத்தில் ஆங்காங்கே தண்ணீர் குளம் போல தேங்கி வெள்ளக்காடாக மாறியது. இதனால் சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள், கூலி தொழிலாளர்கள் பலர் நடந்து கூட செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மழை தீவிரம் அடைந்தால் கோயம்பேடு சந்தை முழுவதும் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மார்க்கெட் பகுதியில் மழைநீர் கால்வாய் இருந்தும் அதில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக தண்ணீர் தேங்கியதாக தெரிகிறது. மேலும் பூ மார்கெட்டை ஒட்டியுள்ள காலி இடத்தில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பருவமழை தொடங்கி விட்டதால் சந்தை வளாகத்தில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களை முறையாக தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும். சந்தை வளாகத்தில் சுகாதாரமான குடிநீர், கழிவறைகளை சுத்தம் செய்து உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்று அங்காடி நிர்வாக குழு அதிகாரிகளுக்கு மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *