செய்திகள்

ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள்: ஜெர்மன் மேம்பாட்டு நிதி ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை, அக்.11–

பெருநகர சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்து ஜெர்மன் மேம்பாட்டு நிதி ஆணையத்தின் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சர் அம்மா 2014–ம் ஆண்டு சென்னை மாநகருடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரும் நோக்கத்தில் சட்டமன்ற விதி 110–ன் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் கட்டும் திட்டம் ஒன்றை ரூ.4,034 கோடி மதிப்பீட்டிற்கு அறிவித்தார்.

அதன்படி முதற்கட்டமாக அம்பத்தூர் மண்டலம் ஒரு பகுதி, வளசரவாக்கம் மண்டலம், ஆலந்தூர் மண்டலம் ஒரு பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய அடையாறு மற்றும் கோவளம் வடிநிலப்பகுதிகளில் சுமார் 405 கி.மீ. நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி உலக வங்கி நிதியுடன் 2016–ம் ஆண்டில் துவங்கப்பட்டு, தற்பொழுது நிறைவடையும் நிலையில் உள்ளது. இதன்மூலம் இப்பகுதிகளில் மழைநீர் தேங்குவது மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இரண்டாம் கட்டமாக ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் பல்வேறு தொடர் ஆய்வு கூட்டங்களை நடத்தினார்கள்.

ரூ.270 கோடிக்கு அனுமதி

இதன் அடிப்படையில் ஆலந்தூர் மண்டலத்தின் மீதி பகுதிகள், பெருங்குடி மண்டலம், சோழிங்கநல்லூர் மண்டலம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கோவளம் வடிநிலப்பகுதிகளில் 326 கி.மீ. நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு, தற்பொழுது இந்த வடிநிலப்பகுதிகள் பள்ளிக்கரணை (எம்1), தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் (எம்2) மற்றும் தென்மேற்கு கடற்கரை வடிநிலப்பகுதிகளில் (எம்3) என மூன்றாக பிரிக்கப்பட்டு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி, சோழிங்கநல்லூர் பகுதிகளை உள்ளடக்கிய தென்மேற்கு கடற்கரை வடிநிலப்பகுதிகளில் (எம்3) ஜெர்மன் நாட்டு வங்கி திட்ட அறிக்கையினை இறுதி செய்து ரூ.270 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் துணை ஆணையர் (பணிகள்) கோவிந்தராவ் தலைமையில், ஜெர்மன் மேம்பாட்டு நிதி ஆணையத்தின் அதிகாரிகள் லீனா ஹாப்ளிங், ஜெரார்டு க்னால் மற்றும் அனிர்பன் குண்டு ஆகியோருடன் பள்ளிக்கரணை (எம்1) மற்றும் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் (எம்2) ஆகிய வடிநிலப்பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டும் பணிக்கான இடைக்கால அறிக்கை மற்றும் தென்மேற்கு கடற்கரை வடிநிலப்பகுதிகளில் (எம்3) ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டத்திற்கான ஒப்புதல் நிலவரம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பள்ளிக்கரணை (எம்1) மற்றும் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் (எம்2) ஆகிய வடிநிலப் பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள, ஜெர்மன் நாட்டின் கே.எப்.டபிள்யூ. வங்கி, காப் (GAUFF)

என்ற ஜெர்மன் நாட்டு கலந்தாலோசகர் மற்றும் டி.எச்.ஐ. என்ற இந்திய கலந்தாலோசகர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்திய சாத்தியக்கூறு அறிக்கையின் இடைக்கால அறிக்கை குறித்தும், தென்மேற்கு கடற்கரை வடிநிலப்பகுதிகளில் (எம்3) ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்திற்கான ஒப்புதல் நிலவரம் குறித்தும் ஜெர்மன் மேம்பாட்டு நிதி ஆணையத்தின் அதிகாரிகள் சென்னை மாநகராட்சி அலுவலர்களுடன் விரிவாக விவாதித்தார்கள்.

மேலும், தென்மேற்கு கடற்கரை வடிநிலப்பகுதிகளில் (எம்3) திட்ட பணிகளை விரைவாக துவக்கவும், பள்ளிக்கரணை (எம்1) மற்றும் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் (எம்2) வடிநிலப் பகுதிகளில் இறுதி அறிக்கையை விரைவில் தயார் செய்திட ஜெர்மன் மேம்பாட்டு நிதி ஆணையத்தின் அதிகாரிகள் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களையும், காப் ஆலோசகர்களையும் கேட்டுக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் கண்காணிப்பு பொறியாளர் (மழைநீர் வடிகால் துறை) எல்.நந்தகுமார், செயற்பொறியாளர் உட்பட பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *